சொர்க்கமும், நரகமும்!
காலேஜுக்கு கிளம்பிய மகனுக்கு மதிய சாப்பாட்டை கட்டிக் கொடுத்தாள், சாரதா. பின், கணவனுக்கு கேரியரிலும், மாமியாருக்கு டேபிளில், ஹாட் - பேக்கிலும் சாப்பாடு எடுத்து வைத்து, குளித்து முடித்து, காட்டன் புடவையில் எளிமையாக வந்தவளைப் பார்த்து, ''என்ன... மகாராணி வெளியே கிளம்பியாச்சா...'' என்றான், கணவன், மாதவன்.''என் பிரண்டோட மாமியாருக்கு ஆபரேஷன் ஆகி, ஹாஸ்பிட்டல்ல இருக்காங்க. அவ கணவர், துபாயில இருக்குறதால, உதவிக்கு ஆள் இல்ல. ஆஸ்பத்திரியில் துணைக்கு இருக்க கூப்பிட்டா; சாயந்திரம், நீங்க ஆபீஸ் முடிஞ்சு வர்றதுக்குள் வந்துடுவேன்,'' என்றாள்.''முதல்ல, அவளோட மாமியாரை பாக்கச் சொல்லு; அப்புறம் சினேகிதியின் மாமியாருக்கு சேவகம் செய்ய புறப்படலாம். வீட்டில வயசான மனுஷி தனியா இருப்பாளேன்னு கொஞ்சம் கூட அக்கறை இல்லாம, உன் பொண்டாட்டி கிளம்பறா பாரு...'' அருகிலிருந்து துாபம் போட்டாள், மாதவனின் அம்மா. ''நீ அவசியம் போகணுமா என்ன...பேசாம வீட்டில் இரு; எல்லாம் அவங்க பாத்துப்பாங்க,'' என்றான், மாதவன்.''இல்லங்க... வர்றதா சொல்லிட்டேன்; போகாட்டி நல்லா இருக்காது,'' என்றவள், இருவரும் சேர்ந்து, தன்னை தடுத்து விடுவரோ என்ற பயத்தில், ''நான் போயிட்டு சாயந்திரம் வந்துடுறேன்,'' என்று கூறி, வேகமாக வெளியேறினாள்.''என்னடா மாதவா... இப்பல்லாம் உன் பொண்டாட்டி, உன் பேச்சையே மதிக்கிறதில்ல போலிருக்கே... பையன் காலேஜுக்கு போயிட்டான்கிற திமிரு. அவனும், அவன் அம்மாவுக்கு பரிஞ்சுக்கிட்டு, 'ஏன் பாட்டி, அம்மாகிட்டே அடிக்கடி சண்டை போடுறேன்'னு என்னையவே கண்டிக்கிறான். அம்மாவும், மகனும் சேர்ந்து, உன்னை இந்த வீட்டில் செல்லாக் காசா மாத்தப் பாக்கிறாங்க; அடக்கி வை,'' என்றாள்.அம்மா சொல்வது போல், அவனுக்கு பயந்து, அடங்கி இருந்த சாரதா, இப்போது கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருவது, அவனுக்கும் தெரியத் தான் செய்தது.''என்ன விக்ரம் காலேஜ் முடிஞ்சு வந்துட்டீயா... பஸ் கிடைக்கலப்பா; அதான் லேட்டாயிடுச்சு... இரு, ஒரு நிமிஷம்... காபி கலந்து எடுத்துட்டு வரேன்,'' என்று, மகனிடம் சொல்லி, சமையலறை நோக்கி விரைந்தாள், சாரதா.''ஒண்ணும் அவசரமில்லம்மா... நீ போய் டிரஸ் மாத்திட்டு, முகம் அலம்பிட்டு, மெதுவா போடு,'' என்றான், விக்ரம்.சிறிது நேரத்தில், காபி கலந்து எடுத்து வந்தவள், விக்ரமிடம் கொடுத்து, அப்படியே தளர்வாக நாற்காலியில் அமர்ந்தாள். அம்மாவின் முகத்தில் தெரிந்த சோர்வை கவலையுடன் பார்த்தான், விக்ரம்.காலையில், ஐந்து மணிக்கு எழுந்து, அவசர அவசரமாக வேலை பார்த்து, சினேகிதிக்கு உதவி செய்து, பஸ்சில், நெரிசலில் சிக்கி வந்திருக்கிறாள்.''ராத்திரிக்கு சாதம் மட்டும் தான் இருக்கு விக்ரம்... சிம்பிளா ஏதாவது செய்துடுறேன்,'' என்று எழுந்த சாரதாவை, கைப்பற்றி அமர வைத்த விக்ரம், ''அம்மா... உன்னை பாத்தாலே ரொம்ப டயர்டா தெரியுது. கொஞ்ச நேரம், 'ரெஸ்ட்' எடு; சாதத்துல மோர் ஊற்றி, ஊறுகாய் வைச்சு சாப்பிட்டுக்கலாம்,''என்றான். அன்புடன் சொன்ன மகனை, கனிவுடன் பார்த்தாள், சாரதா.இரவு - சாப்பாடு மேஜையின் முன், விக்ரம் அமர்ந்திருக்க, மாமியாரும், கணவனும் வர, தட்டை எடுத்து வைத்தாள் சாரதா.சாதத்தை பரிமாறியபடி, ''குழம்பு வைக்கலைங்க; மோர் சாதம் தான். இன்னைக்கு மட்டும் கொஞ்சம், 'அட்ஜஸ்ட்' செய்துக்குங்க,'' என்றதும், முகத்தை சுழித்தாள், மாதவனின் அம்மா.''வீட்டு வேலைய பாக்காம, அப்படியென்ன அடுத்தவங்களுக்கு உதவ வேண்டியிருக்கு... வயசான காலத்தில், மோர் ஊற்றி சாப்பிட்டா, என் உடம்புக்கு ஆகுமா...'' என்றாள், எரிச்சலுடன்!''அத்தை பால் இருக்கு; நீங்க பால் சாதம் சாப்பிடுங்க.''''எல்லாம் எனக்கு தெரியும்,'' என்றவள், ''மாதவா... வர வர இவ நடந்துக்கிறது நல்லாவே இல்ல,'' என்றாள், கோபத்துடன்!''போனது தான் போனே... வந்ததும், ஒரு பொரியல், குழம்பு வைச்சு சமைக்க தெரியாதா?'' எரிச்சலுடன், கேட்டான், மாதவன்.''கொஞ்சம் டயர்டா இருந்தது; விக்ரம் தான் வேணாம்ன்னு சொன்னான்.''''துரை சொன்னதும், நீங்க, 'ரெஸ்ட்' எடுத்துக்கிட்டிங்களோ...''''அம்மாவ ஏன்ப்பா கோபிக்கிறீங்க... தினமுமா இப்படி சாப்பிடுறோம்; ஒருநாள் தானே...''''நீ வாயை மூடு... பெரிய மனுஷத்தனமா பேசுற வேலை வச்சுக்காதே... இங்க பாரு சாரதா... இனி, உன் இஷ்டத்துக்கு நடந்துக்கிட்டே, இந்த வீட்டில் உனக்கு இடமிருக்காது; ஞாபகம் வச்சுக்க,''என்றான், கோபத்துடன், மாதவன்.மவுனமாக நிற்கும் அம்மாவை பார்த்தான், விக்ரம்.''அப்பா... தேவையில்லாம வார்த்தைகள விடுறீங்க...''''என்னடா மிரட்டுறியா... உன்னையும் சேர்த்து விரட்டிப்புடுவேன்; ஜாக்கிரதை...''''நீங்க ஒண்ணும் எங்கள விரட்ட வேணாம்; நானே எங்கம்மாவ கூட்டிட்டு போறேன். ஒன்று ஞாபகம் வச்சுக்குங்க... உங்க மனைவி உங்களுக்குள் அடக்கம்ன்னு நினைச்சு, அன்போடு வேலை வாங்கினா அது பாசம்; ஆனா, அவங்கள உங்க அடிமையா நினைச்சு வேலை வாங்கினா, அது முட்டாள்தனம். காரணமே இல்லாமல் நீங்களும், பாட்டியும் அம்மாவ கோபிக்கிறதும் அவங்க வாய் திறக்காம இருக்கிறதையும் பாத்துட்டு தான் இருக்கேன். நம்ம குடும்பத்துக்காக உழைக்கும் அம்மாவ, உங்களால நேசிக்க முடியாட்டி, மனுஷனா பிறந்ததுக்கே அர்த்தமில்லப்பா... நாம நடந்துக்கிற முறையில தான், நம்ம வாழ்க்கை சொர்க்கமாகவும், நரகமாகவும் அமையுது. உங்களோட நடவடிக்கை, நம் குடும்பத்தை நரகமாக தான் வச்சிருக்கு,'' என்றவன், பாட்டியை பார்த்து, ''நீங்க ரொம்ப வருஷம் நல்லா இருக்கணும் பாட்டி. ஏன் தெரியுமா... எனக்கு கல்யாணமாகி, எங்கம்மா, மருமகளை எப்படி நடத்துறாங்கன்னு நீங்க பாக்கணும். எங்கம்மாவோட அன்பான மனசு எனக்கு தெரியும்,'' என்றான்.மகனின் பேச்சில் விக்கித்து அமர்ந்திருந்த அப்பாவிடம், ''இப்பவும் ஒண்ணும் ஆகலப்பா... உங்க மனைவி இத்தனை வருஷமா உங்களுக்காகவே வாழ்ந்துட்டு இருக்காங்கன்னு மனசார நினைச்சீங்கன்னா, உங்க கண்ணுக்கு அவங்களோட அன்பும், பாசமும் நிச்சயம் தெரியும். உங்க மகனாக நானும் உங்களோடு, இன்ப, துன்பங்களை பகிர்ந்து வாழ தயாராக இருக்கேன். ''அம்மாவை நீங்க வெறுக்கிற பட்சத்தில், கஞ்சியோ, கூழோ ஊற்றி, எங்கம்மாவ என்னால் நிச்சயம் பாத்துக்க முடியும்; அந்த தைரியம் எனக்கு இருக்கு. நரகமான இந்த வீட்டில் இருக்கிறத விட, அது எவ்வளவோ மேல். ஆனா, இதே வீட்டை நீங்க உங்க கண்ணோட்டத்தை மாத்தி, சொர்க்கமா மாத்தினீங்கன்னா நானும், அம்மாவும் சந்தோஷப் படுவோம்,''என்றான், அமைதியாக!பதிலேதும் பேசாமல் தட்டை பார்த்தபடி அமர்ந்திருந்தான், மாதவன். பாட்டியின் கண்கள் கலங்கியிருந்தது; தலைகுனிந்து நின்றிருந்த தன் மனைவியைப் பார்த்து, ''சாரதா... நீயும் தட்டை எடுத்துட்டு வந்து உட்காரு; எல்லாரும் சாப்பிடலாம்.''மாதவன் குரலில், இதுவரை வெளிவராத அன்பு ஒலிக்க, தந்தையின் மனதில் மாற்றத்தை ஏற்படுத்திய மகனை, நன்றியுடன் பார்த்தாள், சாரதா.இனி, இந்த வீடு சொர்க்கமாக மாறப் போகிறது என்பது புரிய, அப்பாவை பார்த்து நிறைவாக புன்னகைத்தான், விக்ரம்!எஸ்.பிரவீன்