உறவுகளைத் தேடி!
நித்யாவின் படத்தில், ரோஜா மாலை போடப்பட்டிருந்தது. புன்னகையுடன் காட்சி தரும், 24 வயதே நிரம்பிய மகளை கண்கலங்க பார்த்தபடி நின்றாள், பத்மா.தன் பிஞ்சு விரலால் அம்மாவின் கண்ணில் வழியும் கண்ணீரை துடைத்து, ''அம்மா, அழாதீங்க. அக்கா சாமிகிட்ட போயிட்டாங்க. அதுக்கு பதிலாக சாமி என்னை உங்ககிட்டே அனுப்பி வச்சிருக்காருன்னு நீங்க தானே சொன்னீங்க. சாமி, அக்காவை பத்திரமா பார்த்துப் பாரும்மா,'' என்ற, ஐந்து வயது ரகுவை, தன்னோடு சேர்த்து அணைத்தாள், பத்மா.வாழ்க்கை நாம் நினைப்பது போல அமைந்து விடுவதில்லை. 'அம்மா... அம்மா...' என, அன்பைப் பொழிந்த நித்யா, இப்போது இல்லை.திருவிழாவிற்குள் அவள் கல்யாணத்தை சிறப்பாக நடத்தணும். அவ கல்யாணம் முடிஞ்சு தான், பிரபு கல்யாணம். முதல் கல்யாணம் நித்யாவுக்கு தான். அதனால, அவ ஜாதகத்தை, அம்மன் பாதத்தில் வச்சு எடுக்கணும். நித்யாவுக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிக்கணும்.அந்தக் குடும்பத்தில் எல்லாமுமாக இருந்து, இரண்டு தம்பிகளுக்கும் கல்யாணம் பண்ணி வைத்து, மூத்தவராக வழி நடத்தி வருபவர், சுந்தரம். அவர் பேச்சு மற்றும் அபிப்பிராயத்தை மீறி யாரும் செயல்பட்டதில்லை. அண்ணன் என்ற பாசத்தைத் தாண்டி, மதிப்பும், மரியாதையும் வைத்திருந்தனர்.'பெரியப்பா சொல்லிட்டாரு, நித்யா. இனி, உன் கல்யாணத்தை தள்ளிப் போட முடியாது. படிப்பை முடிச்சு வேலைக்கும் போக ஆரம்பிச்சுட்டே. நீ சந்தோஷமாக வாழறதை நாங்க பார்க்க வேண்டாமா. எங்களோட ஒரே செல்ல மகள் இல்லையா நீ...' என, மகளிடம் சொன்னார், சம்பத்.'குடும்பமே பெரியப்பா வார்த்தையை மீறி எதுவும் சொன்னதில்லை. நான் பெரியப்பா செல்லம். அவர் சொல்வதை எப்படி கேட்காமல் இருப்பேன். யாரைச் சொல்றீங்களோ, கழுத்தை நீட்ட தயாராக இருக்கேன்...' புன்னகையோடு சொன்ன மகளை, அன்போடு பார்த்தாள், பத்மா.காலையில், 'டாடா' சொல்லி ஸ்கூட்டியில் மலர்ந்த முகத்தோடு வேலைக்குக் கிளம்பியவள், வீடு திரும்ப மாட்டாள் என்பது எப்படி தெரியும். மாலையில் வீடு திரும்பும்போது, முந்தி சென்ற வாகனம் தட்டி, எமனாக வந்த லாரியில் விழுந்து, அந்த கணமே உயிர் பிரிந்தது.குடும்பமே தவித்து, தளர்ந்து போனது. எவ்வளவு பெரிய இழப்பு. மகளை பறிகொடுத்து, பிரமை பிடித்து நின்றனர்.ஒரு மாதம் வரை, குடும்பத்தோடு இருந்து, தம்பிக்கு ஆறுதல் சொல்லி ஊருக்குக் கிளம்பினார், சுந்தரம்.'பத்மா, எனக்கு ஒரு யோசனை தோணுது. ஆனால், அதை செயல்படுத்த, உன் அனுமதி அவசியம் வேணும்...'மகளின் படத்தைப் பார்த்தபடி கண்ணீருடன் இருந்த கணவனைப் பார்த்தாள், பத்மா.'அரசு ஆதரவற்ற இல்லத்தில், ஐந்து வயதுக்கு மேற்பட்ட பிள்ளைகளை, குடும்ப சூழலில் அன்பு காட்டி வளர்க்க விருப்பப்பட்டால், மகனாக வளர்க்க தத்து கொடுக்கிறார்களாம். பெரிசாக எந்த நிபந்தனையும் இல்லை. விருப்பப்பட்டால் நாம் வளர்க்கலாம். நமக்கு சரி வரலைன்னு தோணினா, திரும்ப அனுப்பி வச்சுடலாம்.'நம் மகளைப் பறிகொடுத்து, எந்த பிடிப்பும் இல்லாமல் ஏன் தான் வாழறோங்கிற மனநிலையில் இருக்கோம். நாம் ஏன் ஆதரவற்ற ஒரு பிள்ளைக்கு வாழ்க்கை தரக்கூடாது...' என்றார், சம்பத்.பத்மா சம்மதம் சொல்ல, அந்த வீட்டிற்கு வந்தவன் தான், ரகு. தனக்கென்று ஒரு வீடு, அம்மா, அப்பா என, தனி உலகம். அந்த பிஞ்சு மனம் மகிழ்ச்சியில் கூத்தாடியது.'ரகு, இது உன் அக்கா நித்யா. இவ்வளவு நாள் எங்களோடு இருந்தவ, சாமிகிட்ட போயிட்டா. இனி எங்களுக்கு நீதான் மகனாக இருந்து, நிம்மதியைத் தரணும். சாமி உன்னை எங்ககிட்டே அனுப்பியிருக்காரு...' ரகுவை அணைத்து சொன்னாள், பத்மா.'ஹோமில் இருக்கும்போது, 'உங்களுக்கெல்லாம் அம்மா, அப்பா இருக்காங்க. ஒருநாள் வந்து கூட்டிட்டு போவாங்க. அதுவரைக்கும் நீங்க கடவுளின் குழந்தைகளாக இங்கே சந்தோஷமாக இருக்கணும்'ன்னு அங்கே இருக்கிற ஐயா சொல்வாரு. அவர் சொன்னபடியே வந்துட்டிங்க. நான் எப்பவும் உங்களைப் பிரியாமல் உங்க கூடவே இருப்பேன்...' என்றான், ரகு.ரகுவின் வரவு, திரும்பவும் அவர்கள் வாழ்வில் வசந்தம் வீசத் துவங்கியது. வெற்றிடமாக இருந்த அவர்கள் மனதில், புது வெள்ளத்தைப் பாய்ச்சியது.'பாவம் தாய், தந்தை யார் என்று அறியாத சிறுவன். இவனுக்கு எல்லாமுமாக இருக்க வேண்டும்...' என நினைத்துக் கொண்டாள், பத்மா.''ஊரில் திருவிழா வரும். அப்ப நம்ப கிராமத்துக்குப் போகலாம். அங்கே நம் உறவுகள் எல்லாரும் வருவாங்க,'' என்றாள், பத்மா.''அம்மா, யார் யார் வருவாங்க?''''பெரியப்பா, பெரியம்மா, இரண்டு அண்ணன்கள், அப்புறம், சித்தப்பா, சித்தி, இரண்டு அக்காக்கள் எல்லாரும் வருவாங்க.''கண்களை அகல விரித்து, ''எனக்கு இத்தனை பேர் இருக்காங்களா... நான் எல்லாரையும் பார்க்கணும். என்னை திருவிழாவுக்குக் கூட்டிட்டுப் போறீங்களாம்மா.''''கட்டாயம் போகலாம், ரகு.''''அண்ணன்கிட்டே சொல்லாமல் நம் குடும்பத்தில் எதுவும் செய்ததில்லை, பத்மா. ரகுவை நாம் அழைச்சுட்டு வந்த விஷயம் இதுவரை சொல்லலை. அவன் வந்து, இரண்டு மாசமாச்சு. சொல்லிடறது நல்லதுன்னு நினைக்கிறேன்,'' என்றார், சம்பத்.''சரி சொல்லுங்க... அவர் என்ன சொல்லப் போறாரு. கேட்டால் சந்தோஷப்படுவாரு,'' என்றாள், பத்மா; ஆனால், நடந்தது வேறு.''என்ன சம்பத், இதென்ன விளையாட்டு விஷயமா. யாரோ ஒரு அனாதை சிறுவனை, குலம், கோத்திரம் தெரியாதவனை மகனாக நினைச்சு வளர்க்கிறதா... அவனைப் படிக்க வச்சு, ஆளாக்கி... அவனுக்கு, 18 வயது ஆனதும், அவன் சம்மதித்தால், மகனாக தத்தெடுக்கலாம். அதுவரை அவனுக்கு வளர்ப்பு பெற்றோராக இருக்கலாம்ன்னு என்னென்னமோ சொல்ற...''இதெல்லாம் சரி வராதுப்பா. நம் குடும்ப பாரம்பரியம் என்ன... இப்படி ஒரு காரியம் செய்யலாமா... உனக்கு ஏற்பட்டது பெரிய இழப்பு தான். எங்க பிள்ளைகளை, உன் பிள்ளைகளாக நினைச்சுக்க. அதுக்காக தேவையில்லாமல், யாரோ ஒரு சிறுவனை கொண்டு வந்து வளர்க்க வேண்டாம். கொண்டு போய் விட்டுடு,'' என்றார், சுந்தரம்.'என்ன செய்வது, வந்த இரண்டு மாதத்திலே, பாசத்தைக் காட்டி வளரும் ரகுவை எப்படி திரும்பக் கொண்டு போய் விடுவது. அந்த பிஞ்சு மனம் என்ன பாடுபடும்...' என, பத்மாவும், சம்பத்தும் பரிதவித்துப் போயினர். ''வேறு வழியில்லை, பத்மா. முதல்ல அண்ணன்கிட்ட சம்மதம் வாங்கியிருக்கணும். அவர் வார்த்தையை மீற முடியாது. மனதைக் கல்லாக்கிட்டு கொண்டு போய் விட்ருவோம்.''''அம்மா, அப்பா சொன்னாரு... நான் கொஞ்ச நாள் திரும்ப இல்லத்தில் போய் இருக்கணுமாம். அப்புறமாக வந்து அழைச்சுட்டு வரேன்னு சொன்னாரு. நீங்க அக்காவை நினைச்சு அழாமல் இருங்க. நான் சீக்கிரமே வந்துடுவேன்,'' என, பெரிய மனிதன் போல பேசும் ரகுவை கண்ணீருடன் கட்டி அணைத்தாள்.''அம்மா எனக்கு ஒரு ஆசை. நான் இன்னும் பெரியப்பா, பெரியப்பா, சித்தப்பா, யாரையும் பார்க்கலை. திருவிழாவுக்கு வந்து எல்லாரையும் பார்த்த பிறகு கொண்டு போய் விடறீங்களா?''இதை, அண்ணனிடம் சொல்ல, ''சரிப்பா, அழைச்சுட்டு வா. திருவிழா முடிந்து ஊருக்குப் போனதும், முதல் வேலையா அனுப்பி வச்சுட்டு, பிரபுவுக்கு கல்யாணம் பேசணும். அப்புறம் நிறைய வேலை இருக்கு,'' என்றார், சுந்தரம்.ஊருக்கு சென்று, எல்லாரையும் பார்த்ததும் மிகவும் சந்தோஷப்பட்டான், ரகு.''அண்ணா, நீங்க நல்லா கிரிக்கெட் விளையாடுவீங்களாமே, அம்மா சொன்னாங்க. நான் திரும்ப வந்த பிறகு எனக்கும் சொல்லித் தர்றீங்களா? அக்கா... நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க... பெரியம்மா... உங்களுக்கு கால் வலியா, நான் அமுக்கி விடவா,'' என, உறவுமுறை சொல்லி எல்லாரிடமும் சிரித்துப் பேசினான், ரகு.அதைப் பார்த்தும் சுந்தரம், அவனை தன் அருகில் நெருங்க விடாமல் இருப்பதை அனைவருக்கும் கவனித்தனர்.''அண்ணா, ரகுவைப் பார்த்தீங்களா?'' தயக்கத்துடன் கேட்டார், சம்பத்.''பார்த்துட்டு தான் இருக்கேன். நல்ல பையனாகத்தான் தெரியறான். ஆனாலும், நம் குடும்பத்துக்கு ஒத்து வராது, சம்பத். நாளைக்கு ஊருக்குப் போனதும் அனுப்பி வச்சுரு. நாளை மறுநாள் நாம் எல்லாரும் பிரபுவுக்கு பெண் பார்க்கப் போறோம். நீயும், பத்மாவும் வந்துடுங்க,'' என்றார்.கோவிலுக்கு போய் சாமி கும்பிட்டு வந்து, பெண்கள் உள்ளே சமையலில் ஈடுபட்டிருந்தனர்.வாசலில் ஈசி சேரில் சாய்ந்து உட்கார்ந்திருந்த சுந்தரம், அந்தச் சிறுவன் பேப்பரில் ஏதோ எழுதிக் கொண்டிருப்பதை பார்த்து, ''ரகு... இங்கே வா,'' என்றார்.அருகில் அழைத்துப் பேசாத பெரியப்பா கூப்பிட, தயக்கத்துடன் வந்து அவர் முன் நின்றான்.''என்ன எழுதிட்டிருக்க?''''அது வந்து பெரியப்பா... அப்பா என்னை திரும்ப ஹோமில் கொண்டு போய் விடப் போறாரு. அங்கே என்னை மாதிரி நிறைய பேர் இருக்காங்க. அவங்ககிட்டே நான் யாரையெல்லாம் பார்த்தேன், அவங்க பேரெல்லாம் என்னன்னு சொல்லணும் இல்லையா. அதான் எழுதிட்டு இருக்கேன். இங்கே பாருங்க, முதலில் உங்க பேர் தான் எழுதியிருக்கேன்,'' என, ஆவலுடன் அந்தப் பேப்பரைத் தந்தான்.பெரியப்பா சுந்தரம், பெரியம்மா ஜானகி, அப்பா சம்பத், அம்மா பத்மா என்று வரிசையாக எல்லாருடைய பெயர்களும், உறவுமுறைகளும் எழுதப்பட்டிருந்தது.''சரியா எழுதியிருக்கேனா பெரியப்பா?''கண்களில் பாசம் தெரிய நிற்கும் அந்தச் சிறுவனைப் பார்த்தார், சுந்தரம்.''அண்ணா கிளம்பறோம்,'' என, அண்ணனிடம் விடைபெற ரகுவுடன் நின்றனர், பத்மாவும், சம்பத்தும்.''ஊருக்குப் போனதும், ரகுவைக் கொண்டு போய் விட்டுட்டு, நானும், பத்மாவும், இங்கே வர்றோம், அண்ணா...'' என்றார், சம்பத்.''தேவையில்லை... ரகுவை அனுப்ப வேண்டாம். அவன் உன் மகனாக இங்கேயே வளரட்டும். அவனையும் அழைச்சுட்டு ஊருக்கு வா. அண்ணனுக்கு பெண் பார்க்க தம்பியும் வரட்டும்,'' என்றார், சுந்தரம்.கண்களில் ஆனந்தக் கண்ணீர் வழிய, ரகுவை கட்டியணைத்தாள், பத்மா.''அம்மா, அப்பா நான் போக வேண்டாமா... உங்களோடு தான் இருக்கப் போறேனா... தேங்க்ஸ் பெரியப்பா,'' என, நன்றி சொல்லும் அந்தச் சிறுவனை, பாசம் மேலிட பார்த்தார், சுந்தரம். ஆர். பிரவிணா