உள்ளூர் செய்திகள்

பாலைவனச் சோலையில்.... - துபாய் பயணக் கட்டுரை (1)

ஐக்கிய அரசு அமீரகத்தை சேர்ந்த, துபாய்க்கு சுற்றுலா செல்ல வேண்டுமென்ற கனவு நிஜமாக, சென்னையிலிருந்து, 'எமிரேட்ஸ்' விமானத்தில் பயணத்தை துவங்கினோம்.துபாய் விமான நிலையத்தை விட்டு வெளியே வந்ததும், நாங்கள் தங்கப்போகும் ஓட்டலுக்கு அழைத்துச் செல்ல, கார் ஒன்று காத்திருந்தது. நான் எப்போதும் போல், டிரைவர் இருக்கைக்கு பக்கத்தில் அமர, இடது ஓரம் சென்றேன். என்னை வலது பக்கம் போக சொன்னார், டிரைவர். முதலில் எனக்கு ஒன்றும் புரியவில்லை. பிறகு, அங்கெல்லாம் இடது பக்க டிரைவிங் என, ஞாபகம் வந்து, வலது பக்கம் சென்றமர்ந்து, 'சீட் பெல்ட்' போட்டுக் கொண்டேன்; அதுவும், அங்கு கட்டாயம்.ஐக்கிய அரபு அமீரகம் என்பது, ஏழு நாடுகளின் கூட்டமைப்பு. ஏழும், ஏழு அரசர்களின் கீழ் இருப்பவை.ஓட்டலை அடைந்த பின், ஓய்வெடுக்க நேரமில்லாமல், சுற்றிப்பார்க்க திட்டமிடப்பட்டிருந்தது. துபாயில் முக்கியமாய் அனுபவிக்க வேண்டியது, அங்குள்ள பாலைவன பயணம். அதில், மணல் சவாரி மட்டுமல்லாமல் இன்னும் நிறைய இருந்தன.அந்த இடத்தை அடைய, நீண்ட துார பயணம் செய்ய வேண்டியிருந்தது. செல்லும் வழியிலேயே பாலைவனம் துவங்கியிருந்தது. அங்கே சென்றதும், தனிபட்டவர்கள் ஓட்டிப் பார்க்கும், இரண்டு முன் சக்கரங்கள் உடைய மோட்டார் சைக்கிள்கள் இருந்தன. அதற்கான கட்டணம் செலுத்தியதும், அதை ஓட்டும் விதத்தை சொல்லித் தருகின்றனர். அங்கு நின்றிருந்தபோது, இளநீர் விலை கேட்டேன், '10 திர்ஹாம்' என்றார், கடைக்காரர். உடனே, என் மனம், நம்மூர் பண மதிப்பை கணக்கிட்டது. ஒரு திர்ஹாமின் மதிப்பு, 19 அல்லது 20 ரூபாய். அப்படி கணக்கிடுவது தவறென தெரிந்தும், மனம் கேட்கவில்லையே!மாலை மயங்கும் நேரம், நாங்கள் வந்த காரில், பாலைவன பயணம் துவங்கியது. நிறைய மணல் மேடுகள், அங்கங்கே குவியலாய் இருக்க, கார், மேட்டு பகுதியில் ஏறி, பள்ளத்தில் இறங்கி, பயணம் வேகமெடுத்தது. உயிரை கையில் பிடித்தபடி தான் பயணிக்க வேண்டும்.'பேலன்ஸ்' இழந்து, கார் உருண்டு விடுமோ என்ற பயம் தொடர்ந்தது. இருந்தாலும், புதிய அனுபவம் என்பதால், பயம் பாதி, ஆவல் பாதி என, உட்கார்ந்திருந்தோம். இந்த பயணத்தின் போது, கார் சக்கரங்களின் காற்றை மிகவும் குறைத்து விடுவராம்.பயணத்தின் பாதியில், ஓரிடத்தில், சூரியன் அஸ்தமிக்கும் காட்சியை காண இறக்கி விட்டார், டிரைவர். அதை பார்க்கும்போதே, எங்களின் அலைபேசியில், எங்களை படம் எடுத்து தந்தார், டிரைவர். இந்த சாகச பயணத்தின்போது, சிலருக்கு வாந்தி வந்து விடுமாம்... நாங்கள் யாரும் வாந்தி எடுக்கவில்லை; ஆனால், அந்த உணர்வு இருந்தது. மதிய உணவு சரியாக சாப்பிடாததாலும், பயண களைப்பாலும், பெண்கள், மிகவும் சோர்ந்து விட்டனர்.பாலைவன பயணம் முடிந்து, அடுத்த நிகழ்ச்சியாக பாலைவன பகுதியிலேயே சிறிது துாரத்திலிருந்த மற்றொரு செயற்கை அமைவிடத்தில், இரவு உணவுடன், தொப்புளைக் காட்டியபடி, பெண்கள் ஆடும் நடனம் பார்க்கும் வாய்ப்பும், முடிந்தால் ஒட்டக சவாரியும் செய்ய திட்டமிட்டிருந்தோம். பெண்கள், அந்த நிகழ்ச்சிகளில் பங்கெடுக்க முடியாது என்று கூறியதால், ஓட்டலுக்கு திரும்பினோம்.இரவு, 10:00 மணிக்கு ஓட்டலை வந்தடைந்தோம். எங்களில், மூவரை, ஓட்டல் அறையில் விட்டு, இருவர் மட்டும், நாங்கள் இருக்கும் இடத்திலிருந்து சிறிது துாரத்தில், சங்கீதா ஓட்டல் கண்ணுக்கு தென்பட, அதில், இட்லியும், தோசையும் வாங்கி வந்தனர். சாப்பிட்ட பின், ஓரளவு பசியும் தீர்ந்தது.அடுத்த நாள், காலை உணவு சாப்பிட்ட பின், 10:00 மணியளவில், துபாய் சிட்டியை பார்க்க, கார் வந்ததும், ஏறி அமர்ந்தோம். எவ்வளவு பெரிய கார் அல்லது பஸ்சை, மிகச் சிறிய திருப்பத்திலும் லாவகமாக திருப்புகின்றனர், டிரைவர்கள். வேக அளவும், 100 கி.மீ., தாண்டியே இருக்கிறது. பஸ்சுக்கு மட்டும் தான், 80 கி.மீ., வேகம் நிர்ணயம். அதை தாண்டினால், உடனே எச்சரிக்கும். தானாகவே வேகத்தை குறைத்து விடுவார், டிரைவர்.துபாய் சிட்டி சுற்றுலாவில், முதலில், நகரத்தில் உள்ள சாலைகள், முக்கிய இடங்களை எல்லாம், ஆங்கிலம் தெரிந்த வழிகாட்டியை வைத்து, வர்ணனையும், விளக்கங்களையும் தருகின்றனர். எங்களுக்கு வழிகாட்டியாக வந்தவர், தஞ்சாவூர்காரர். ஆதலால், அவரிடம், தமிழிலேயே உரையாடினோம்.சுமைரா என்ற பீச்சில் இறங்கினோம். சுத்தமாக இருக்கிறது. வெளிநாட்டவர், சூரிய குளியல் நடத்திக் கொண்டிருந்தனர். மிக குறைந்த உடையில், வெயிலில், மணல் தரையில் படுத்திருந்தனர். பின், 'புர்ஜ் கலீபா' துபாய் வணிக வளாகத்தில் இறக்கி விட்டனர். இந்த கட்டடம், 2004ல் கட்டத் துவங்கி, 2009ல் கட்டி முடிக்கப்பட்டு, 2010 துவக்கத்தில், பயன்பாட்டுக்கு வரத் துவங்கியது.இது, 163 மாடிகள் கொண்டதாக, உலகத்திலேயே மிக உயரமான, இஸ்லாமிய கட்டட கலையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் உயரம், 2,717 அடி. இதில், கடைகள், அலுவலகங்கள், குடியிருப்புகள் என, அனைத்தும் உள்ளன. இங்குள்ள மின் துாக்கியின் வேகம், ஒரு மாடிக்கு, ஒரு வினாடி என்ற கணக்கில், 124 மாடிகளை சென்றடைகிறது. இது தான், உலகிலேயே மிக வேகமான மின் துாக்கியாம். தற்போது, 124 மாடி வரை தான் அனுமதிக்கின்றனர். அதிலேயே சிறிய உணவகம் இருக்கிறது. அங்கிருந்து பார்க்கும்போது, துபாயில் உள்ள மற்ற கட்டடங்கள் எல்லாம் மிகச் சிறிதாகவே தெரிகின்றன. உலகின் பலதரப்பட்ட நாடுகளின் மக்களை, அங்கே காண முடிந்தது. உலகம் ஒன்று என்ற தத்துவம் உண்மையானால், நல்லது என்ற எண்ணமும் தோன்றியது.அடுத்து, அருகே உள்ள, நீர்வாழ் விலங்குகள் கண்காட்சிக்கு சென்றோம். அங்கே, விதவிதமான பறவைகள், பெங்குவின்கள், முதலை, பாம்புகள், தவளைகள் உள்ளன. ஆமை, கிளி மற்றும் நம் நாட்டில் மறைந்து வரும் நமக்கு பிரியமான சிட்டுக்குருவிகள், ஆந்தை, எட்டுகால் பூச்சிகள் என, நிறைய இருக்கின்றன.— தொடரும்.கே.என்.ராமகிருஷ்ணன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !