உள்ளூர் செய்திகள்

இன்னர் பாக்கெட்!

அம்மாவின் முன், யூனிபார்ம் துணிகளை வைத்து, ''நன்னாயிருக்காம்மா. மூணு செட்டு துணி வாங்கியிருக்கேன். என் பொண்ணு உமாவின் அளவு சல்வார் வெச்சிருக்கேன். தைக்கிறியா?'' என்றாள், சாரா.''ஒரு காலத்துல எல்லாம் செஞ்சவதான்மா. இப்ப கண்ணு சரியா தெரியலை. வழவழன்னு நல்லா இருக்கே. குழந்தைகள் விளையாட ஏத்தா மாதிரி அழுத்தமாவும் இருக்கு, என்ன விலை?'' என்றாள், அம்மா.விலையை சொன்னாள், சாரா.சமையலறையில் இருந்து, ''அவ்ளோ உசத்தியா வாங்கியிருக்கே. தையல் கூலியில் ஏன் கஞ்சத்தனம்? யூனிபார்ம் தைக்கிறதுக்குன்னு ஸ்கூல்லயே கடைக்காரரை, 'ரெகமென்ட்' பண்ணுவாங்களே,'' என்றாள், சாராவின் அண்ணி பாமா.''பாட்டி தான் தைக்கணும்ன்னு மகள் ஆசைப்படறா.'' ''இங்கே வரச்சொல்லு, நான் புத்தி சொல்லி அனுப்பறேன்,'' அண்ணி உள்ளே சென்று விட்டாலும், அண்ணாவிடம் பேசியது, காதில் கேட்டது.''நல்லா ஓய்வு எடுத்துக்கணும்ன்னு அம்மாவை தைக்க சொல்லாம, நம்ம பொண்ணுங்க யூனிபார்மை வெளியில தைக்க குடுக்கறோம். இவ குரோம்பேட்டையிலிருந்து துணியை துாக்கிட்டு வந்திருக்கா பாருங்க. சல்வாருக்கு, 550 ரூபா. உங்க டாக்டர் மாப்பிள்ளைகிட்ட அதுக்கான சம்பாத்தியமில்லை போலிருக்கு. சரியான காரியவாதி, உங்க தங்கை.'' ''வீணா வம்பு வளர்க்காதே. அவ காதுல விழப்போறது.'' ''விழுந்தா எனக்கென்ன, அம்மாவை வேலை வாங்கணும்னே வந்திருக்கா. அம்மாவுக்கு இப்பதான் ஆபரேஷன் ஆகி, கண் பார்வை சரியாயிருக்கு. இத்தனை நாளா கண்ணு தெரியலைன்னு ஊரைக் கூட்டிட்டு இருந்தா.'' ''ச்சூ... அப்புறம் பேசு.''''நம்ம பெண்கள் லக்கு, பட்டு ரெண்டு பேருக்கும் தலைக்கு மூணு சல்வார்னு நேத்து தான் தைக்க குடுத்தேன். கூலி மட்டும், 3,300 ரூபாய். இவளும் தான் பார்த்துட்டு இருந்தாள். இன்னைக்கு ஓசைப்படாம துணியை வாங்கிட்டு வந்திருக்கிற சாமர்த்தியத்தைப் பார்த்தீங்களா? கண் ஆபரேஷன் செலவுக்கு பணம் குடுத்தால்ல, அந்த பணத்தை தான் கலெக்ட் பண்ணிக்குறா,'' என்றாள், பாமா.''அப்பப்பா... உனக்கு எப்படி இப்படியெல்லாம் தோணறது?''''ஹூம்... அவ புத்தி, உள்ளங்கை கண்ணாடி மாதிரி எனக்கு தெரியும். ஆபரேஷன் ஆனாலும் கண் மங்கலா இருக்குன்னு சொல்லிட்டிருக்கா, அம்மா.''டாக்டரோ, அவங்க வயசுக்கு இத்தனை பார்வை கிடைக்கிறதே பெரிசுன்னுட்டார். துணியை தாரே பூரேன்னு கிழிச்சு வைப்பா பாரு, அப்பதான் புத்தி வரும். டபுள் செலவு செய்யட்டும்,'' என சொல்லி, கணவனைத் திரும்பிப் பார்க்க, அவன் எப்போதோ இடத்தைக் காலி செய்திருந்தான்.பழைய டைரியில் பிள்ளையார் சுழி போட்டு, உமா பெயர் எழுதி வைத்தாள், அம்மா. உமாவை நிற்க வைத்து உயரம், மார்பு சுற்றளவெல்லாம் குறித்துக் கொண்டாள்.''அந்தக் காலத்துல, உனக்கு யூனிபார்ம் தைச்சு கொடுத்து, அது நல்லா அமைஞ்சதுன்னு உங்க வகுப்புல நிறைய மாணவிகள் எங்கிட்ட வந்து, அவங்களுக்கும் தைச்சு குடுக்கச் சொன்னாங்களே, ஞாபகமிருக்கா?'' என்று கேட்டாள், அம்மா.''நிச்சயமா. அதுக்கப்புறம்தான் கிளாஸ் கேர்ள்ஸ் மத்தியில் நான் ரொம்ப, 'பேமஸ்' ஆயிட்டேன்,'' என்றாள், சாரா.''பாட்டி, நீ தையல் கத்துக்கிட்டியா... அப்புறம் ஏன் அம்மாவுக்கு கத்து தரல?'' உமாவின் குரலில் மழலை இன்னும் போகவில்லை. வயது, 12 தொட இருக்கிறது. ''உன் அம்மா பெரிய படிப்பெல்லாம் படிச்சா. வெளிநாடெல்லாம் போனா. தையல் கத்துட்டு சின்ன வட்டத்துல இருக்கிறவளா, அவ?''''அப்புறம் நீ ஏன் கத்துக்கிட்ட?''''அந்த காலத்துல தையல் கிளாசெல்லாம் ஏது கண்ணு? பார்த்து பார்த்து அப்படியே தைக்கிறது தான். கொஞ்சம் கற்பனையும், ஆர்வமுமிருந்தா தையல் வந்துடும்,'' என்றாள், அம்மா.ரொம்ப நாளுக்குப்பின், அம்மாவிடம் கலகலப்பை பார்க்க, திருப்தியாக இருந்தது.சாராவை உள்ளே அழைத்து, ''அம்மா, 'ரெஸ்ட்' எடுக்கணும்ன்னு டாக்டர் சொல்லியிருக்கார். நீ டாக்டர் பெண்டாட்டியாய் இருந்தும் அதன் முக்கியத்துவத்தை புரிஞ்சுக்கலை... அம்மாவுக்கு திரும்பவும் பிரச்னைன்னா, நாங்க தான் கஷ்டப்படுவோம். நீ கிளம்பு,'' என்றாள், பாமா.''ஆமா, கண்ணுல பிராப்ளம் ஏதுமில்லை. இதெல்லாம் மனசு சம்பந்தப்பட்டதுன்னார் டாக்டர்,'' என்றாள், சாரா.''அதை நானும் தானே கேட்டுக்கிட்டிருந்தேன்; புதுசா சொல்ற?''''ஒண்ணும் ஆகாது அண்ணி.''''என்னமோ நாத்தனாரேச்சேன்னு தான் விட்டுக்குடுக்காம எச்சரிக்கிறேன். யார் எப்படிப் போனா எனக்கென்ன?''''அண்ணி ஏன் இப்படி கோபிக்கிறா?'' என்றபடியே அம்மாவிடம் வந்தவள், ''அம்மா, நான் நாளைக்கு வந்து பார்க்கறேன். இப்ப கிளம்பட்டுமா?'' என்றாள், சாரா.''சரி...'' இழுத்தாற்போல பேசியவள், ''உன் அண்ணன்கிட்ட சொல்லி, தையல் அறைக்கு பளிச்சுன்னு லைட் போடச் சொல்லு,'' என்றாள், அம்மா.''சரிம்மா.''அம்மாவைப் பார்க்க சந்தோஷமா இருந்தது, சாராவுக்கு.இரண்டு நாள் கடந்திருந்தது.''ஹாலில் எல்லாரோடும் இயல்பா இருந்த அம்மாவை, தையல்னு சொல்லி அறைக்குள்ளே கட்டிப் போட்டுட்டல்ல,'' பாமாவின் வரவேற்பில் ஏக நக்கல் இருந்தது.''நான் போன் செஞ்சப்ப தைச்சுட்டிருக்காங்கன்னு சொன்னியே. அதான் உமாவை அழைச்சுட்டு வந்தேன்,'' என்றாள், சாரா.உமாவிடம், ''ஒரு செட் தைச்சேன். உனக்கு சரியா இருக்கா பாரு,'' என்றாள், அம்மா. ''அம்மா, நீ எப்ப கடைசியா தைச்சே?''''வெறும் துணி ப்ராக்கு, பாவாடை, சல்வார், ரவிக்கைன்னு விதவிதமான மாடல். அதிலுள்ள நேர்த்தி எல்லாமே எனக்கு ரொம்ப பிடிக்கும். உங்கப்பா நோயில் படுத்திருந்தப்ப, தையல் மிஷின் பக்கமே போகலையே. என் ரவிக்கை கூட நீதான் தைச்சு வாங்கிட்டு வந்தே.''உன் அண்ணன், பல்பு மாத்தி ஊசிக்கு மேல் வெளிச்சம் வரா மாதிரி செஞ்சதுல, பளிச்சுன்னு கண்ணு தெரிஞ்சது. அப்புறம் மிஷினுக்கு ஆயில் போட்டு, துடைச்சுக் கொடுத்தான். இப்ப தைக்க ஈசியா இருக்கு.''''ஹை பாட்டி... என் ப்ரெண்ட்ஸ் யூனிபார்ம் கமீஸ்ல தான் பேனா, பர்ஸ் போட்டுக்கிற பாக்கெட் வைப்பா. நீ பேன்ட் இன்சைட்ல எக்ஸ்டிரா வெச்சிருக்கியே,'' ஆச்சர்யத்துடன் பாக்கெட்டை பிதுக்கினாள், உமா.''பாமா சொல்லிட்டே இருந்தா வயசாறது, அம்மாவுக்கு எல்லாம் மறந்து போயிருக்கும். இப்ப பார் எங்கேயோ பாக்கெட்டை வெச்சிருக்காங்கறா,'' கவலைப்பட்டான், அண்ணன்.சாரா அம்மாவை அர்த்தத்துடன் பார்க்க, பார்வையால் ஆமோதித்தாள், அம்மா. ''எப்படியும் நாளைஞ்சு மாசத்துல, 12 வயசு நெறைஞ்சுடும். மறைவான இடத்துல பாக்கெட் இருந்தா, பெண் குழந்தைகளுக்கு சமயத்துல வசதியா இருக்கும். அது இவளுக்கு இப்ப புரியாது.'' அம்மாவுடன் சாராவும் சிரிக்க, ஆச்சர்யத்துடன் உள்ளே வந்தாள், பாமா. ''இந்த மூணு மாசத்துல இப்பதான் அம்மா நீங்க சிரிச்சே பார்க்கிறேன்.''''உமாவுக்கு யூனிபார்ம் ரொம்ப அழகா இருக்கு. பாக்கி ரெண்டையும் தைச்சுக்குடும்மா,'' என்ற சாரா, ''அண்ணி, உமாவுக்கு ஸ்கூல் பேக் வாங்கறப்ப, லக்கு, பட்டுவுக்கும் சேர்த்து வாங்கினேன். அவங்களுக்கு எந்த கலர் பிடிக்குமோ அதை எடுத்துக்கோங்கோ,'' என்றாள்.''நிறைய விலை கொடுத்து வாங்கியிருக்கியே,'' என்றாள், பாமா.''யாருக்கு வாங்கினேன்? நம் குழந்தைகளுக்குதானே,'' என்றாள்.பள்ளி செலவின் ஒரு பகுதியை, நாத்தனார் எடுத்துக் கொண்டாள் என்றதும், அண்ணியின் பேச்சில் சரளம் வந்தது. ''அம்மா, இத்தனை நல்லா தைப்பாங்கன்னு தெரிந்திருந்தா, நானும் கூட வெளியே தந்திருக்க மாட்டேன். கண் தெரியுமோ, தெரியாதோ, 'ஸ்ட்ரெயின்' ஆயிடுமோன்னு தரலை,'' என்றாள், பாமா.''அன்னைக்கு லக்குவோட யூனிபார்மை அம்மா இப்படி, அப்படி திருப்பி பார்த்தப்ப தான் அவங்களை தைக்க சொல்லணும்ன்னே எனக்கு தோணித்து. அப்பா போனதுக்கப்புறம் அம்மாவுக்கு, 'டிப்ரெஷன்' மாதிரி ஆயிடுச்சு. கண்ணு தெரியல; காது கேட்கலைன்னு ஆரம்பிச்சுட்டாங்க.''என்னவர், 'இதெல்லாமே மனம் சம்பந்தப்பட்டது. அவங்களுக்கு பிடித்த விஷயங்களை பேசணும், எதில் ஆர்வமா இருக்காங்களோ, அதை செய்ய சொல்லணும். இல்லைன்னா அப்படியே, 'சிங்க்' ஆயிடுவாங்க'ன்னு சொன்னார்.''பொதுவாகவே பெரியவங்களுக்கெல்லாம் தான் அதிகப்படி, வேஸ்ட்ங்கிற எண்ணமெல்லாம் அடிக்கடி எழும். அவங்களோட உதவி இந்த குடும்பத்திற்கு தேவைன்னு அவங்க உணர்ந்தாதான், 'பாசிடிவா' இருப்பாங்க.''பிற்காலத்துல உமாவுக்கு வேண்டியிருக்கும்ன்னு, சல்வார்ல, 'இன்னர் பாக்கெட்' வெச்சு தைச்சிருக்காங்க. அத்தனை யோசனை செய்யற அளவு, 'இன்வால்வ்' ஆயிருக்காங்க. மூளை அலர்ட்டா இருக்கு,'' என்றாள்.''உண்மைதான், சாரா. இந்த வயதில் அம்மாவுக்கு தையல் ஆர்வம் இருக்கு. பேத்திக்கு செய்யற சந்தோஷமும் இருக்கு. இனி அம்மாவை, 'பாசிடிவா' உணர வைக்க நான் கேரண்டி. சாரி சாரா... அவசரப்பட்டு உன்னை ஏதேதோ பேசிட்டேன்.''அவள் வாயை அன்பாக பொத்தி, ''நீங்க, என் அண்ணி மட்டுமில்லை. என் தோழியும்தான்,'' என்றாள், சாரா. மல்லிகா குரு


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !