ஏழிசை மன்னர் எம்.கே.தியாகராஜ பாகவதர் (7)
கொடுமுடி கோகிலம் என்று போற்றப்படும், தலைசிறந்த பாடகரும், நடிகரும், தேச விடுதலைக்காக பாடுபட்டவரும், தமிழ் திரையுலகில், முதன் முதலாக, ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் பெற்றவரும், காந்திஜியிடம், தேச நிதிக்காக தன் அனைத்து நகைகளை கொடுத்தவருமான, கே.பி.சுந்தராம்பாளிடம், பாகவதர், யுத்த நிதி திரட்டி தந்தது குறித்து தன் வருத்தத்தை பகிர்ந்து கொண்டார், சத்தியமூர்த்தி.'தியாகராஜன் செய்தது சரி. நீங்கள் வருத்தப்படுவதில் அர்த்தமில்லை, அண்ணா.'ராஜாவுக்கு கட்டுப்பட வேண்டியதுதானே பிரஜையின் கடமை. நம்மை ஆளும் அரசாங்கம் நெருக்கடியில் இருக்கும்போது, கவர்னரே வேண்டி கேட்டுக் கொண்டதை, மறுப்பது நியாயமற்ற செயல்.'தியாகராஜன் செய்தது, தர்மத்திற்கு கட்டுப்பட்ட செயல் தான். அதை தவறாக புரிந்து கொண்டு, நீங்கள் விசனப்படுவது, தேவையற்ற செயல்...' என்று விளக்கி சொன்னார், கே.பி.எஸ்.,'நீ சொன்னது சரி தான். நான் தான் தேவையில்லாத கவலையை கொண்டேன். இப்போது மனது நிர்மலமாகியது. திருநீலகண்டர் பட விழாவிற்கு சென்று, நானே பாகவதரை பாராட்டி விடுகிறேன்...' என்று சொல்லி, மிகுந்த மகிழ்ச்சியோடு அவ்விழாவிற்கு சென்றார். விழாவில், பாகவதரை மனதார பாராட்டி, பொன்னாடை, மாலை அணிவித்து, வாழ்த்தினார், தீரர் சத்தியமூர்த்தி.பாகவதரின் நிறைய படங்களுக்கு, இசை அமைத்தவர், சங்கீதச் சக்கரவர்த்தி, ஜி.ராமநாதன். பாபநாசம் சிவன் மற்றும் பாகவதர் இருவரின் குறிப்பறிந்து மெட்டுப் போடுவதில் சமர்த்தர்.கடந்த, 1936ல் வெளியான, பாகவதரின் சொந்த படமான, சத்யசீலன் படத்தில் தான், இவர் இசையமைப்பாளராக அறிமுகமானார். தமிழ்த் திரையுலகம், ஜி.ராமநாதன் என்ற தலைசிறந்த இசையமைப்பாளரை, பாகவதர் மூலமாகத்தான் பெற்றது.ஒருமுறை, சிவகவி படப்பிடிப்பு கோவையில் நடந்து கொண்டிருந்தது. அதிகாலை, 2:00 மணியளவில், ஜி.ராமநாதனின் அறைக் கதவு தட்டப்பட்டது. என்னவோ ஏதோவென்று, படபடப்புடன் கதவைத் திறந்தால், எதிரே நின்று கொண்டிருந்தார், பாகவதர்.'தொந்தரவிற்கு மன்னிக்க வேண்டும். மிகவும் அவசரம் என்பதால், இந்த அகால வேளையில் வந்திருக்கிறேன்...' என்றார், பாகவதர். 'ஒரு சங்கடமும் இல்லை. நான் என்ன செய்ய வேண்டும் சொல்லுங்கள்...' என்றார், ஜி.ராமநாதன்.'நாளை இரவு, திருச்சி ரேடியோ ஸ்டேஷனில் கச்சேரி. காலையிலேயே நான் கிளம்பி விடுவேன். அதற்குள், இரண்டு பாடல்களுக்கும் மெட்டு வாங்கிட்டுப் போகலாம்ன்னு வந்தேன். சிரமத்திற்கு மன்னிக்கணும்...' என்றார், பாகவதர்.'சிரமமாவது, எனக்கு இதைவிட ஜோலி என்ன...' என்று, உற்சாகமாக ஹார்மோனியத்தை எடுத்தார், ஜி.ராமநாதன்.இரண்டு மணி நேரத்திற்குள், பாடல்களுக்கு மெட்டு போட்டாகி விட்டது. மிகவும் சந்தோஷமடைந்து, இரண்டு, மூன்று முறை அந்தப் பாடல்களைப் பாடிக் காட்டி, 'சபாஷ், சபாஷ்...' என்று, ஜி.ராமநாதன் சொன்ன பிறகே, புறப்பட்டுச் சென்றார், பாகவதர்.சங்கீதத்தில் ராமநாதனின் மேதமை அசாத்தியமானது. இறைவனின் வரப்பிரசாதமாய், கந்தர்வக் குரல் கொண்ட பாகவதரின் அர்ப்பணிப்பு உணர்வு, யாராலும் நெருங்க முடியாது.கர்நாடக சங்கீத உலகின் ஈடு இணையற்ற மேதை, சங்கீத கலாநிதி என்று புகழப்படுபவர், ஜி.என்.பாலசுப்பிரமணியம். இவரது பாட்டில் ஒரு வேகம் இருக்கும். பக்க வாத்யக்காரர்களும், அவரின் வேகத்திற்கு ஈடு கொடுத்து வாசிப்பர். அவருடைய கச்சேரி என்றால், அந்தக் காலத்தில் எக்கச்சக்க கூட்டம் கூடும்.இவர், இசைப் பேரரசி எம்.எஸ்.சுப்புலட்சுமியோடு, சகுந்தலை என்ற படத்தில் நடித்துள்ளார். இவரும், பாகவதர் பிறந்த, 1910ல் தான் பிறந்தார்.இருவருக்கும் வேடிக்கையான ஓர் ஒற்றுமை உண்டு. குரல் வளத்திற்காக, பாதாம் அல்வாவை விரும்பிச் சாப்பிடுவார், பாகவதர். பாதாம் பருப்பை வறுத்துச் சாப்பிடுவாராம், ஜி.என்.பி., பாதாம் பருப்பிற்கும், சங்கீதத்திற்கும் தொடர்பு உள்ளது போலும்.பாகவதர் பாடலை கேட்பதில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர், ஜி.என்.பி., எந்தவித சிரமமும் இன்றி பாகவதர் உச்சஸ்தாயியில் பாடுவதை, ஆச்சர்யத்துடன் கேட்பாராம். ஒருமுறை, கச்சேரி ஒன்றிற்காக திருச்சி வந்திருந்தார், ஜி.என்.பி., பாகவதர், புகழின் உச்சத்தில் இருந்த காலம் அது. விஷயம் கேள்விப்பட்டு, கச்சேரிக்கு வந்து, கச்சேரி முடியும் வரை கேட்டு மகிழ்ந்தார், ஜி.என்.பி.,அதன் பிறகு, ஜி.என்.பி., மற்றும் அவர் குழுவினர் அனைவரையும் தம் இல்லத்திற்கு அழைத்து, பிரமாதமான விருந்து உபசாரம் செய்தார், பாகவதர்.ஜி.என்.பி., கிளம்புவதற்கு முன், அவரை தன் அறைக்கு அழைத்துச் சென்று, தன்னிடம் உள்ள ஏராளமான தம்புராக்களில் சிறப்பான ஒன்றைத் தேர்ந்தெடுத்து, அவருக்கு தன் அன்புப் பரிசாகத் தந்தார்.'அண்ணா, என் பாட்டைக் கேட்க பாமரர்கள் தான் கூடுவர். ஆனால், உங்கள் பாட்டிற்கு, பெரிய பெரிய சங்கீத வித்வான்கள் அல்லவா கூடுகின்றனர்...' என்று சொன்னார், பாகவதர்.பாகவதரிடம் உள்ள தனிச்சிறப்பு என்னவென்றால், தன்னைப் பற்றி என்றைக்குமே பெரிதாகச் சொல்லிக் கொண்டது கிடையாது. அது மட்டுமல்ல, பிறரைப் போற்ற வேண்டும் என்றால், அதற்காக, தன்னைத் தாழ்த்திக் கொள்ளவும் தயங்க மாட்டார். அதுதான், பாகவதரின் அரும்பெரும் குணம். சங்கீத கலாநிதி, மதுரை மணி ஐயர், பாகவதர் மீது மிகுந்த அன்பும், மரியாதையும் கொண்டவர். இவருடைய பாணியே அலாதியானது.அது மட்டுமல்ல, இவர் எப்படிப் பாடுவார் என்று, யாராலுமே அனுமானிக்க முடியாது. அப்படி ஓர் தனித்துவம் கொண்டவர். பாகவதருடைய திருச்சி பங்களாவிற்கு, நட்பு முறையில் அடிக்கடி சென்று மகிழ்பவர், மதுரை மணி அய்யர். சங்கீதம் பற்றி பேச ஆரம்பித்தால், இருவருக்கும் நேரம் போவதே தெரியாமல் பேசிக் கொண்டிஎத்தனை மலைகள் இருந்தாலும், இமய மலை போல் ஆகுமா. எத்தனை ஆறுகள் இருந்தாலும், தெய்வீக கங்கைக்கு ஈடாகுமா. அந்தக்கால அரசவை வித்வான்கள் கூட, பாகவதர் போல் புகழோடு இருந்திருப்பார்களா என்றால் சந்தேகமே என்பார், என்.எஸ்.கிருஷ்ணனின் மனைவி, டி.ஆர்.மதுரம்.பாட்டுக்கொரு பாகவதர் என்று, நாட்டு மக்கள் அனைவராலும் கொண்டாடப்பட்டவர், பாகவதர்.என்.எஸ்.கிருஷ்ணனிடம் உள்ளன்பு செலுத்தியவர்களில் முதன்மையானவர், பாகவதர். - தொடரும்- கார்முகிலோன்