உள்ளூர் செய்திகள்

ஒளி பரவட்டும்!

அறியாமை நீங்கி, அறிவு வளரட்டும்...இருள் நீங்கி, ஒளி பரவட்டும்...அழிவு நீங்கி, அழிவற்ற தன்மை பரவட்டும்!- வேத உபநிடதங்கள்.ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும் ஜோதி! - மாணிக்க வாசகர்.தீபமங்கள ஜோதீ நமோ நம! - - திருப்புகழ்ஞான நுால்கள் பலவும், ஜோதி மயமான இறைவனை பலவாறாக துதிக்கின்றன.'இருளில் இருந்து ஒளிக்கு அழைத்துச் செல்...' எனப் பிரார்த்திக்கின்றன. எது இருள்... எது ஒளி... கண்ணன் விளக்குகிறார்... காஞ்சி மகா பெரியவர் சொல்ல, அதை தொகுத்து, வெளியான, 'காவேரி ரகசியம்' என்ற நுாலில் காணப்படும் கதையைப் பார்ப்போம்:தேவேந்திரன், கண்ணனைத் தேடிப் போய், அவர் திருவடிகளில் விழுந்தார். 'கண்ணா... நரகாசுரன் செய்யும் தீங்குகள் தாங்க முடியவில்லை. சொர்க்கலோகத்தைக் கவர்ந்து கொண்டதோடு, எங்களை அடித்து விரட்டி விட்டான். முனிவர்களை கூட விட்டு வைக்கவில்லை.'அவன். என் தாயாரின் குண்டலங்கள், வருணனின் வெண்குடை, மற்ற தேவர்களின் உடைமைப் பொருட்கள் என அனைத்தையும் கவர்ந்து கொண்டான். நல்லவர்களெல்லாம் நடுங்குகின்றனர். காப்பாற்று கண்ணா... காப்பாற்று...' எனக் கதறினார்.'கவலைப்படாதே தேவேந்திரா... நீ செல், காப்பாற்றுகிறேன் நான்...' என, அழுத்தமாகச் சொன்னார், கண்ணன். சொன்னதோடு மட்டுமல்ல; செயலிலும் இறங்கினார். சத்யபாமா தேரோட்ட, கண்ணன் வெகுவேகமாக நரகாசுரனின், 'ப்ரக்ஜோதிஷபுரம்' எனும் நகருக்கு புறப்பட்டார்.அங்கு சென்றதும், நகருக்குப் பெரும் பாதுகாவலாக இருந்த கிரி துர்கம், அக்னி துர்கம், ஜல துர்கம், வாயு துர்கம் என்னும் கோட்டைகளை அழித்து, ஊருக்குள் நுழைந்து, சங்கை முழக்கினார். போர் மூண்டது.கண்ணன் ஏவிய அம்பு மழையில் நரகாசுரனின் படைகள் முழுவதுமாக அழிந்தன. ஆத்திரமடைந்த நரகாசுரன், அஸ்திரங்களை கண்ணன் மேல் ஏவினான். என்ன தான் செய்தாலும் இருட்டு, ஒளியை வெல்ல முடியுமா... நரகாசுரனை அடித்துக் கீழே தள்ளினார், கண்ணன்.நரகாசுரனின் தாயார் பூமாதேவி ஓடி வந்தாள், 'சுவாமி... தாங்கள் வராக அவதாரம் எடுத்த போது, நமக்கு பிறந்தவன் தான் நரகாசுரன். இவனுக்கு ஞானோபதேசம் செய்து, அருள் புரிய வேண்டும்...' என, வேண்டினாள்; கூடவே, நரகாசுரன் கவர்ந்த தேவர்களின் பொருட்கள் அனைத்தையும் கொணர்ந்து, கண்ணனிடம் சமர்ப்பிக்கவும் செய்தாள். நரகாசுரனுக்கு அருள்புரியத் தீர்மானித்தார், கண்ணன்.அதே வேளையில் நரகாசுரன், 'பரந்தாமா... தீயவனான அடியேனுக்கும் அருள்புரிய, நேரில் வந்த திருமகள் மணாளா... தீயவனான அடியேன் மறையும் இந்நாளை, அனைவரும் மங்கலகரமாகக் கொண்டாட வேண்டும்... 'இத்திருநாளில், எண்ணெயில் லட்சுமி தேவியும், தண்ணீரில் கங்கா தேவியும் வாசம் செய்ய வேண்டும். மக்கள் அனைவரும் எண்ணெய் தேய்த்து நீராடி, புத்தாடை அணிந்து, விளக்கேற்றி வழிபட்டு, நல்லுணவை உண்ண வேண்டும். 'அவர்களுக்கு எல்லாவிதமான மங்கலங்களையும் தாங்கள் அருள வேண்டும்...' என, வேண்டினான். 'அப்படியே ஆகும்...' என வரம் தந்தார் கண்ணன். தேவர்களின் உடமைப் பொருட்களோடு, அவர்கள் இழந்த சொர்க்கலோகமும், அவர்களுக்குத் திருப்பி அளிக்கப்பட்டன. நரகாசுரன் மறைந்த அத்திருநாளே, தீபாவளி! நரகாசுரன் என்பது, நம்மிடம் உள்ள தீயகுணங்கள். கண்ணன் முதலில் அழித்த கிரி துர்கம் முதலான கோட்டைகள், பஞ்ச பூதங்களாலான நம் உடம்பு. உள்ளத்தின் உள்ளே நுழைந்த தெய்வம், அங்கிருக்கும் அறியாமை இருளை விரட்டி, நம்மை ஒளிபெற செய்கிறது.பகவான் ரமணர், 'தீய எண்ணங்கள் தான் நரகன். அவன் குடியிருக்கும் வீடு தான், நம் உடல். அந்த மாயாவியை ஒழித்து, ஆத்மஜோதியாகத் திகழ்வதே தீபாவளி...' என்றார்.வெறுப்பு எனும் இருள் நீங்கி, ஒருவருக்கொருவர் அன்பு எனும் ஒளி பரவட்டும்... கண்ணன் அருளட்டும்! பி.என்.பரசுராமன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !