உள்ளூர் செய்திகள்

குறைகளோடு ஏற்போம்!

எங்கள் நட்பு வட்டத்தில், எதற்கும் இசைந்து வராத ஒருவர் உண்டு. எங்களில் பலருக்கும் இவர் பெயரைக் கேட்டாலே நெஞ்சில் பாகற்காய் சாறு ஊறுவது போல் இருக்கும். இந்நிலையில், பலர் அறிய, விரும்பத்தகாத முறையில் பேசி விட்டார்.உடனே, சிலர், 'இனி, இவரை நம் வட்டத்தில் இணைத்துக் கொள்ளக்கூடாது; வெட்டி விட வேண்டும்...' என்றனர்.'இது என்ன அரசியல் கட்சியா... அவரை நீக்குவதற்கு! என்ன பேசறீங்க நீங்க... ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான சுபாவத்துடன் பிறந்து, வளர்கிறோம். சிலர், தாங்கள் பெறுகிற அனுபவங்கள ஒட்டி, தங்கள மாத்திக்கிறாங்க. இன்னும் சிலரோ, தங்களோட பாணியே சரி என்று நம்பி, கடைசி வரை அதன்படியே வாழறாங்க. காலம் சில நேரங்கள்ல அவங்களோட கன்னங்களில் தட்டிக் கொடுத்தோ, அறைந்தோ, 'நீ மாறு...' என்று சொல்லித் தருது. இதை ஏற்பவர்கள் ஜெயிக்கிறாங்க; ஏற்காதவர்கள் நஷ்டமடையுறாங்க.'இவர்களது சுபாவம் பிடிக்கலயா... அதற்கு ஏற்றபடி இடைவெளிய ஏற்படுத்திக்கங்க. அதற்காக வெட்டி விடுவது என்பது நீண்ட நட்பிற்கு தரப்படும் பரிசாக இல்ல...' என்றேன்.நாம் எவருமே வானத்திலிருந்து குதித்த தேவர்கள் அல்ல; எல்லாருமே குறைபாடு உடையவர்கள் தாம். திருந்தாத ஜென்மங்கள், தங்கள் குறைகளை உணராமலும், உணர்த்தினாலும், திருந்தாமல் வாழ்கின்றனர். இதற்கேற்பே அவர்களின் வாழ்வின் தரம் அமைகிறது.இத்தகையவர்கள் நம் உறவு வட்டத்தில் வந்துவிட்டால் என்ன செய்வது? மனைவியை பற்றிக் கணவனும், கணவனைப் பற்றி மனைவியும் வாழ்நாள் முழுவதும் புகார் பட்டியல் வாசித்தபடி இருப்பர். இதன்மூலம், இருவரும் சிறிதளவேனும் திருந்தினரா என்பது பெரிய கேள்வி குறி!'ஒரு பிசாசை கட்டி வைத்து விட்டனர்...' என்று கணவனும், 'பாழுங்கிணற்றில் தள்ளி விட்டு விட்டனர்...' என்று மனைவியும், புலம்பி என்ன பயன்! இவள் பாழுங்கிணற்றுக்குள்ளும், அவன் பிசாசோடும் வாழ வேண்டிய கட்டாயம். பிள்ளைக்குட்டிகள், பேரன், பேத்தி வரை காலம் ஓ(ட்)டியாயிற்று. இவர் இப்படித்தான், இவள் அப்படித்தான் என்று வாழ வேண்டிய கட்டாயம். 'எப்படித்தான் சமாளிக்கிறானோ...' என்றும், 'எப்படித்தான் காலம் தள்ளுகிறாளோ...' என்கிற ஒரு வரி பாராட்டிற்காக, எவ்வளவோ பொறுமையுடன் இருவரும் காலத்தை ஓட்ட வேண்டியுள்ளது.பிள்ளைகள், மருமக்கள் அமைவதெல்லாம் பெரிய கொடுப்பினை. இக்கொடுப்பினை அமையாவிட்டால், என்ன செய்வது?வெட்டி விட முடியாத, அறுத்தெரிய முடியாத உறவுகளை, தொழில் தொடர்புகளை, நட்பை, குறைகளுடன் ஏற்றுக் கொள்ளத் தான் வேண்டும்.மேற்கூறிய மூன்று வட்டங்களிலும், நாம் குறைப்பட்டுக் கொள்ளும் நபர்களிடம் ஊன்றிப் பார்த்தால், குணங்கள் நிறையவும், குறைகள் குறைவாகவே இருக்கும்.அதனால், குறைகளை பூதக் கண்ணாடி கொண்டு பார்ப்பதை விட்டு, குணங்களை கொண்டாட முடியுமா என்று பாருங்கள்!வாழ்வின் திறம், பலம் மற்றும் மகிழ்ச்சி ஆகிய மூன்றும், இப்பார்வை மாற்றத்தில் தான் அடங்கியுள்ளன! லேனா தமிழ்வாணன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !