உள்ளூர் செய்திகள்

பார்த்தாலே திருமணம்!

திருநெல்வேலி மாவட்டம், பாபநாசம் மலையிலுள்ள கொட்டந்தளம் எனும் இடத்தில் இருக்கிறது, கல்யாண தீர்த்தம்! இதைப் பார்த்தாலே திருமணம் நடந்து விடும் என்பது, தொன்று தொட்டு இருந்து வரும் நம்பிக்கை.சிவன் - பார்வதி திருமணத்திற்கு, உலகிலுள்ள அனைவரும் இமயமலைக்கு சென்றதால், வடக்கு தாழ்ந்து, தெற்கு திசை உயர்ந்தது. இதைச் சமன்படுத்த, அகத்தியரை, தெற்கிலுள்ள பொதிகை மலைக்கு அனுப்பினார், சிவன். தன் மனைவி, லோபமுத்திரையால் அவ்வளவு துாரம் நடக்க முடியாதே என கரிசனப்பட்டு, அவளை தண்ணீராக மாற்றி, கமண்டலத்தில் அடைத்து, அதை துாக்கியபடி, பொதிகை மலைக்கு புறப்பட்டார், அகத்தியர். தெய்வ சங்கல்பமும் அவ்வாறே இருந்தது; லோபமுத்திரையின் மூலம் உலகுக்கே நலம் வழங்க, முடிவு செய்திருந்தார், விநாயகப் பெருமான்.வரும் வழியில், குடகு மலை உச்சியில் கமண்டலத்தை வைத்து, சிவ பூஜையில் ஆழ்ந்தார், அகத்தியர். அப்போது, காகம் ஒன்று, கமண்டலத்தை தட்டி விட, தண்ணீர் கொட்டி, ஆறாகப் பெருகியது. சத்தம் கேட்டு கண் விழித்த அகத்தியர், தன் மனைவியை காப்பாற்றியாக வேண்டுமே என்ற வேகத்துடன் கமண்டலத்தை நிமிர்த்தி வைத்தார். பாதி நீர் கொட்டிவிட, ஒரு பகுதியே மிஞ்சியது. அச்சமயம், காகம் உருவில் இருந்த விநாயகர் அவருக்கு காட்சியளித்து, 'அகத்தியரே... ஒற்றுமையாக வாழ்ந்து வரும் உங்கள் இருவரின் புகழ், உலகில் என்றென்றும் நிலைக்கவே, இவ்வாறு செய்தேன்; இனி, இவள், 'காவிரி' எனும் பெயரில் உலகம் உள்ளளவும், நதியாக ஓடுவாள்; இதிலுள்ள மீதி தீர்த்தத்தை தெற்கிலுள்ள பொதிகையில் விடு...' என, அருள்பாலித்தார்.அதன்படியே, பொதிகை மலை உச்சியில் தீர்த்தத்தை விட்டார், அகத்தியர். அது, தாமிரபரணி எனும் பெயரில், நதியாக ஓடியது. மலை உச்சியில் இருந்து புறப்பட்ட அந்த நதி, ஓரிடத்தில் அம்பிலிருந்து புறப்பட்ட பாணம் போல, சீறிப் பாய்ந்து, அருவியாகக் கொட்டியது. அது, 'பாண தீர்த்தம்' என, பெயர் பெற்றது. மற்றுமொரு இடத்தில் பேரிரைச்சலுடன் அருவியாகக் கொட்டியது. அந்த இடத்தில், அகத்தியருக்கும், நதியாக ஓடிய லோபமுத்திரைக்கும் திருமண காட்சி தந்தனர், சிவனும் - பார்வதியும்! இதனால் அத்தீர்த்தம், 'கல்யாண தீர்த்தம்' என, பெயர் பெற்றது. கல்யாணப்பெண்ணை, 'கல்யாணி' என்பர்; அம்பாளுக்கு கல்யாணி என்ற பெயர் உண்டு. இதனால், 'கல்யாணி தீர்த்தம்' என, பெயர் மருவியது.கல்யாணி தீர்த்த அருவியில் குளிக்கும் வசதி கிடையாது; அதனால், கருணையுடன் தன் குள்ள உருவத்துக்கு தகுந்தாற் போல, சிறிய அருவியாக மாறி, விழச்செய்தார், அகத்தியர். அதுவே, அகத்தியர் அருவி. இதில், பக்தர்கள் நீராடி, அருகிலுள்ள நுாறு படிக்கட்டுகளில் ஏறினால், தனி சன்னிதியில் அருள்பாலிக்கும் அகத்தியரையும், லோபமுத்திரையையும் தரிசிக்கலாம். அகத்தியர் அருவி கரையில் அகத்தியர் கோவில் உள்ளது. இங்கு, அவருக்கு காட்சியளித்துள்ளார், முருகப்பெருமான்.ஜாதக ரீதியாகவோ, பிற காரணங்களாலோ திருமணத்தடை உள்ளோர், கல்யாணி தீர்த்த அருவியைப் பார்த்தாலே போதும்; திருமணம் கைக்கூடும். இந்த அருவி விழும் தடாகம் மிகவும் ஆழமானது; இதில், இறங்க முயற்சிக்கக் கூடாது. மங்கள நிகழ்ச்சி நடக்க, இங்கே ஒருமுறை போய் வாருங்கள்.திருநெல்வேலியில் இருந்து, 50 கி.மீ., தொலைவில் உள்ளது, பாபநாசம். இங்கிருந்து, 4 கி.மீ., துாரத்திலுள்ள அகத்தியர் அருவிக்கு ஆட்டோ, கார்களில் சென்று, படிக்கட்டுகளில் ஏறினால், கல்யாணி தீர்த்தத்தை தரிசிக்கலாம். காலை, 7:00 மணி முதல், மாலை, 5:00 மணி வரை மட்டுமே அனுமதி உண்டு; வெள்ள காலத்தில் யாரையும் அனுமதிப்பதில்லை.தி.செல்லப்பா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !