வல்லவனுக்கு வல்லவன்!
'புத்திர சோகம் மிகக் கொடியது. ஆகையால், மரணம் இல்லாத ஒரு பிள்ளையைப் பெற வேண்டும்...' என்று எண்ணி, கடுந்தவம் செய்தார், பாலதி எனும் புகழ்பெற்ற முனிவர்.அவர் முன் தோன்றிய தேவர்களிடம், தன் எண்ணத்தை சொன்னார், பாலதி. அதைக் கேட்டதும், அவர்களுக்கு சிரிப்பு வந்தது.'முனிவரே, நீங்கள் கேட்பது விசித்திரமாக இருக்கிறது. தேவர்களுக்கு மரணம் என்பது கிடையாதாகையால், எங்களுக்கு அமரர்கள் என்று பெயர் உண்டாயிற்று. மனிதர்கள் அந்நிலையை அடைய முடியாது; தேவர்களுக்கு சமமாக ஆக முடியாது. ஆகையால், வேறு வரம் ஏதாவது கேளுங்கள்...' என்றனர்.அங்கிருந்த சில மலைகளை சுட்டிக் காட்டி, 'இந்த மலைகள் எல்லாம் எவ்வளவு காலம் இருக்குமோ, அவ்வளவு காலம் என் மகனும் இருக்க வேண்டும்...' என, கேட்டார், பாலதி.மலைகளுக்கு அழிவு கிடையாது. ஆகையால், தன் மகனும் நிலையாக இருப்பான் என்ற எண்ணத்திலேயே, பாலதி அவ்வாறு வரம் கேட்டார். 'அப்படியே ஆகட்டும்...' என்று, வரம் தந்து மறைந்தனர், தேவர்கள்.பாலதிக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது. மேதாவி என பெயரிட்டனர். அவன், சிறு வயதிலேயே மிகவும் கோபக்காரனாக இருந்தான். வளர வளர அவன் கோபமும் வளர்ந்தது. கூடவே, தன் அப்பா பெற்ற, வர பலமும் அவனுக்கு தெரிய வந்தது; குதித்தான்.'ஆகா... அந்த மலைகளெல்லாம் இருக்கும் வரை, எனக்கு மரணம் கிடையாது. அற்புதமான வரம்...' என்று, கூவினான்.கோபக்காரனான அவன், ரிஷிகளையும், முனிவர்களையும் அவமானப்படுத்தினான். அவர்களுக்கு அளவிலா தீங்குகளும் செய்தான்.ஒருநாள், தவ சக்தி படைத்தவரான, தனுஜாட்சர் என்பவரை அவமானப்படுத்தி, அவர் ஆசிரமத்தையும் அலங்கோலப்படுத்தினான்.பொறுத்துப் பொறுத்துப் பார்த்தார், தனுஜாட்சர்.மேதாவியின் அட்டூழியம் எல்லை மீறிப் போனது. பொறுக்க முடியாமல் முனிவர், 'நீ அழிந்து போவாய்...' என, சாபம் கொடுத்தார். சாபம் தான் பலிக்காதே என, எகத்தாளமாக சிரித்தான், மேதாவி.'என் சாபம், எப்படி பலிக்காமல் போனது...' என்று, ஒரு சில நொடிகள் தியானத்தில் ஆழ்ந்தார், முனிவர். மேதாவியின் அப்பா வாங்கிய வரம், அதன் காரணமாக, அவன் செய்யும் அட்டூழியம் ஆகியவை, அவருக்கு புரிந்தன.பெரும் பலம் கொண்ட, எருமைக் கடா வடிவம் கொண்டார், முனிவர். எந்த மலைகளை குறித்து மேதாவியின் அப்பா வரம் வாங்கியிருந்தாரோ, அம்மலைகளை எல்லாம் முட்டி, மோதி அசைத்து, துாள் துாளாக்கினார். அப்பா வாங்கிய வரத்தின்படி இறந்தான், மேதாவி.வல்லவனுக்கு வல்லவன் வையத்தில் உண்டு என்பதை, விளக்கும் நிகழ்வு இது.பி. என். பரசுராமன் ஆன்மிக தகவல்கள்!வில்வ மரம் இருக்கும் வீட்டில் குடியிருந்தால், காசி முதல் ராமேஸ்வரம் வரையான சிவ ஸ்தலங்களை வழிபட்ட பலன் கிடைக்கும்.