உள்ளூர் செய்திகள்

கடவுள் ஏன் கைவிட்டு விடுகிறார்?

ஆன்மிக, நாத்திக வாதங்கள், சைவ - அசைவ விவாதங்கள், உலகம் உள்ளளவும் இருக்கும். ஆழ்ந்த நம்பிக்கை உள்ளோருக்கும், நம்பிக்கை அற்றோருக்கும் இடையே கடுமையான வாதங்கள் நிகழ்ந்த வண்ணமே உள்ளது என்பதே உண்மை!இக்கட்டுரை, கடவுளை நம்புவோரை மட்டுமே இலக்காகக் கொண்டது.கடவுளை அளவுக்கதிகமாக நம்பும் ஒருவர், தம் வாழ்வில் நிகழும் ஒவ்வொரு சம்பவமும், அவரால் எழுதப்பட்டது என்ற தீர்மானத்திற்கு போய் விடுகிறார்.என்ன ஆபத்து வந்தாலும், 'அதை அவன் பாத்துக் கொள்வான்...' என்று சரணாகதி அடைவாரே தவிர, மனித முயற்சி என்ற ஒன்றை, இவர் நம்ப தயாரில்லை.ஒருமுறை, இவரது உயிருக்கு ஆபத்து வரும்படியான செயல் ஒன்று அறிகுறி காட்ட, இவரோ தன்னை கடவுளிடம் ஒப்படைத்து விட்டார். கடைசியில், எதற்காக எச்சரிக்கப்பட்டாரோ, அது நிகழ்ந்து விட்டது.இதேபோன்ற குட்டிக்கதை ஒன்றை, 'ராமகிருஷ்ணர் உபதேசம்' எனும் நூலில், என் பள்ளி நாட்களில் படித்ததாக நினைவு.அதற்கு ராமகிருஷ்ண பரமஹம்சர் கூறிய விளக்கம் வெகு அருமை.'உயிருக்கு ஆபத்து வரப்போகிறது என எச்சரித்தவனை, ஒரு சாதாரண மனிதனாக அந்த பக்தன் கருதினான் அல்லவா... அப்படி எச்சரித்தவன் மனித வடிவில் வந்த கடவுளாக ஏன் இருக்கக் கூடாது...' என முடித்திருப்பார் ராமகிருஷ்ணர்.அநியாயமாய் அல்பாயுசில் இறந்தோரும், மருத்துவ தவறினால் கொல்லப்பட்டவர்களும், விபத்தினால் சிதைக்கப்பட்டவர்களும் நிறைய பேர். இவர்களை இழந்த உறவுகளில் பலர், 'கடவுளே... உன்னை எவ்வளவு நம்பினேன்; எவ்வளவு கும்பிட்டேன். என்னை அநியாயமா கைவிட்டுட்டியே...' என்று புலம்பி, அத்துடன், கடவுளை வழிபடுவதற்கு முற்றுப் புள்ளி வைத்து, பாதை மாறியோரும் உண்டு.இயற்கையாக, தர்க்க ரீதியாக, இயற்பியல் ரீதியாக, ரசாயன ரீதியாக நிகழ்பவை, நிகழ்ந்து கொண்டே இருக்கும். இவற்றிற்கும், ஆன்மிகத்திற்கும் சம்பந்தமே இல்லை.குடித்து விட்டு வாகனம் ஓட்டுகிற ஓட்டுனர், பக்தர்களை சபரி மலையில் கொண்டு போய் சேர்ப்பாரா என்றால், அது ஐயம்தான். ஓட்டுனர் தூங்கிவிட்டாலும் இதே கதிதான். இதன்மீது, இறைமையை கற்பிப்பது சரியல்ல!தீவிரவாதிகளால் கூண்டோடு சுட்டு வீழ்த்தப்பட்ட மலேஷிய விமானத்தின் கதிக்கும், ஒரு ஆண்டுக்கு மேலாகியும் விஞ்ஞானத்திற்கே விளங்காத மலேஷியன் ஏர்லைன்ஸ் (259 பயணிகளோடு) மறைவிற்கும் கடவுள் காரணமாக மாட்டார்.மனித முயற்சிகள் தோற்பதற்கும், கேலி செய்யப்படுவதற்கும் வேறு காரணங்களை கற்பிக்க முயற்சி செய்யாமல், அதில், எங்கே கோட்டை விட்டோம் என்று தோல்வியின் காரணங்களை ஆய்வு செய்தால், மீண்டும் இத்தகைய தவறுகள் நிகழ்வதை தவிர்க்க முடியும்.எந்த முயற்சியும் செய்யாமல், கூரையை பிய்த்துக் கொண்டு கொட்டும் என எதிர்பார்ப்பவன், வறுமையின் பிடியிலிருந்து மீளவே முடியாது.இறைமையை எடுத்துச் சொல்லி வழிகாட்டும் மத குருமார்கள் கூட, மனித முயற்சி வேண்டும் என்பதையே வலியுறுத்துகின்றனர்.எதையும் சரிவர திட்டமிட்டு, தவறுகளை மதிப்பீடு செய்து, ஓட்டைகளையும், கசிவுகளையும் அடைத்து, நன்கு உழைத்தால், இவர்கள் நம்பும் சக்திகளும், இவர்களுக்கு துணை வரலாம்.வாழைப்பழம் வீட்டு வாயில் வரை தான் வரும்; வாயில் தள்ள வேண்டியது மனிதனே! லேனா தமிழ்வாணன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !