உள்ளூர் செய்திகள்

முஹம்மது அர்ஹான்!

ஒரு வருட தேடலுக்கு பின், என் மகன், நிலாமகனுக்கு தகுந்த மணமகள் கிடைத்தாள். அவளின் பெயர், பஹிமா ஆப்ரின். சொந்த ஊர், கரூருக்கு அருகில் இருக்கும், பள்ளப்பட்டி. முதுகலை பல் மருத்துவம் படித்த நிலாவுக்கு, இளம்கலை பல் மருத்துவம் படித்த, பஹிமா, மகா பொருத்தமாய் இருந்தாள். அவளின் பெற்றோர், படித்த, வேலைக்கு போகும் முஸ்லிம்கள். எங்களுக்கு அவர்கள், தந்தை வழி உறவினர்களும் கூட.நானும், வகிதாவும், முதன்முதலாக பெண்ணை பார்க்கப் போயிருந்த போது, நான் பெண்ணிடம், 'உன் இறக்கைகள் எங்கேம்மா?' என, வினவினேன். ஒரு தேவதை என, மறைமுகமாக கூறுகிறேன் என்பதை அவள் புரிந்து, நாணினாள்.மணமகளின் புகைப்படத்தை பார்த்த நிலாவுக்கும், மிகவும் பிடித்து போயிற்று. அம்மாவை போல ஒரு மனைவியை, அவனுக்கு தேடியது கிடைத்தது. 'கொரோனா' தலைவிரித்தாடிய நேரம் அது. பல தேதிகள் தள்ளிப் போன பின், நிச்சயதார்த்தத்துக்கான தேதியை குறித்தோம். சம்பந்தி வீட்டாருடன் அவர்கள் இருக்கும் பள்ளப்பட்டியும், எனக்கு மிகவும் பிடித்து போய் விட்டது. ஊர் முழுக்க, மரம் நட்டு, பராமரித்து வைத்திருந்தனர், முஸ்லிம் இளைஞர்கள். எல்லா வயதினரும், அழகிய வேலைப்பாடுகள் நிறைந்த தொப்பி அணிந்திருந்தனர். திரும்பின இடமெல்லாம் பள்ளிவாசல்கள்.வட்டி தொழிலை தலை முழுகி, தமிழகம் முழுக்க வியாபாரங்கள் துவங்கி, கிளை விரித்திருந்தனர், பள்ளப்பட்டி மக்கள். கல்யாணம் மற்றும் துக்க காரியம் என்றாலும், ஏழை, பணக்காரன் வித்தியாசம் இல்லாமல் உதவிக்கரம் நீட்டினர்.கொரோனா பயத்தால் திருமண தேதி தள்ளிப் போகலாம் என்கிற நிலை தொடர்ந்தது. சம்பந்தி வீட்டாரும், நாங்களும் தொடர்ந்து பேசிக் கொண்டே இருந்தோம். கொரோனா அசந்த நேரத்தில், திருமண தேதியை முடிவெடுத்தோம். திருமணம் முடிந்த மாலையே, நிலா - பஹிமாவுடன், சிதம்பரம் திரும்பினோம். மருமகளிடம் எனக்கு பிடித்த விஷயங்கள் பல இருந்தன. படித்தவளாய் இருந்தாலும், ஓரளவு சமைக்கத் தெரிந்திருந்தாள்; இயல்பாக இருந்தாள்; பிறர் பேசுவதை முழுவதும் காது கொடுத்து கேட்டாள். அதன்பின் வந்த நாட்களில், அவள் கோள் பேசுவதில்லை; பிறர் பேசும் அவதுாறுகளை காது கொடுத்து கேட்பதில்லை எனவும் கண்டு கொண்டேன். அவளிடம் பெரிய எதிர்பார்ப்புகளோ, பேராசைகளோ இல்லை.அடுத்த இரு மாதங்களில், நிலாவும், பஹிமாவும், எழுத்தாளர் ராஜேஷ்குமார் வசிக்கும், கோயம்புத்துாருக்கு ஜாகை மாறினர். நிலா மகனுக்கு, சம்பந்தி வீட்டார் கிளினிக் வைத்து கொடுத்தனர். கிளினிக்கை, ராஜேஷ்குமார் திறந்து வைத்தார். பகல் முழுக்க விரிவுரையாளர் பணி பார்த்துவிட்டு, மாலையில், கிளினிக் கவனித்தான், நிலா.என் அடுத்த எதிர்பார்ப்பு ஆரம்பித்தது. மகள் ஜாஸ்மின் வழியாக ஜன்னத்தல் பிர்தவுஸ் என்ற பேத்தியும், யாக்கூப் பத்ருதீன் என்ற பேரனும் இருந்தாலும், மகன் வழி பேரன் அல்லது பேத்தி வேண்டும் என்ற ஆசை விஸ்வரூபித்தது.''எதாவது விசேஷம் உண்டா?'' என, அடிக்கடி வகிதாவிடம் விசாரிக்க ஆரம்பித்தேன்.''சும்மா இருக்க மாட்டீங்களா... உங்க அவசரத்துக்கு, குழந்தை பெத்துக்க மாட்டான், நிலா,'' என உதடு பிதுக்கினாள், வகிதா.சில மாதங்களுக்கு பின், மருமகளும், மகனும் மெடிக்கல், 'செக் - அப்' போய் வந்ததும், என் கைகளை பற்றி குலுக்கி, ''கங்கிராட்ஸ்... நீங்க, தாத்தாவாக போறீங்க,'' என்றான், நிலா.துள்ளிக் குதித்தேன். எனக்கு இன்னொரு மகள் ஆனாள், பஹிமா. ஆனால், அந்த உணர்வை வெளிக்காட்டிக் கொள்ளாமல் மனதுக்குள் பதுக்கினேன்.எனக்கும், வகிதாவுக்கும் இடையே சுவாரசியமான பேச்சுகள் ஓடின.'மருமகளுக்கு பிறக்கப் போறது ஆண் குழந்தை தான்...''இல்லை இல்லை... பெண் குழந்தை தான்...''ஆண் குழந்தையும் பெண் குழந்தையும் சேர்ந்து இரட்டைக் குழந்தைகளா பிறக்க வாய்ப்பிருக்கா?''வாய்ப்பில்லை ராசா வாய்ப்பில்லை...''பிறக்கப் போற குழந்தைக்கு, பெயர் யார் வைக்கிறது?''ஜாஸ்மினுக்கு குழந்தை பிறக்கும்போது, உங்களுக்கும், மருமகன் வீட்டாருக்கும் முட்டல் மோதல் நடந்தது. கடைசியில, மருமகன் வீட்டார் தான் ஜெயிச்சாங்க. பிறக்கும் குழந்தைக்கு பெயர் வைக்கிற உரிமை எப்பவுமே மாப்பிள்ளை வீட்டாருக்கு தானே... இதுதான் நம்ம ஆட்கள்ல எழுதப்படாத விதி...'நான் பதில் பேசவில்லை.'வழக்கம்போல, நிலா குழந்தைக்கு பெயர் வைக்கிற உரிமையை நீங்க தான் கைல எடுத்துப்பீங்க...'அசட்டு புன்னகை வெடித்தேன். அதற்கடுத்த நாட்களில்...''நிலா... பிறக்கப் போற குழந்தைக்கு என்ன பெயர் வைக்கப் போற?''''இன்னும் யோசிக்கலப்பா.''''மருமகளே... பிறக்கப் போற குழந்தைக்கு என்ன பெயர் வைக்கப் போற?''''குழந்தை பிறந்த பிறகு பார்ப்போம் மாமா.''''சம்பந்தியம்மா... குழந்தைக்கு பெயர் முடிவெடுத்திட்டீங்களா?''''நிறைய டயம் இருக்கு அண்ணா!''''சம்பந்திஜி... குழந்தைக்கு பெயர் என்ன வைக்கப் போறீங்க?''''யோசிப்போம்!''என்னை ஆழம் பார்த்தாள், வகிதா. ''எல்லார் மனசிலயும் என்ன இருக்குன்னு கெட்டிக்காரத்தனமா நோட்டம் விடுறீங்க. நீங்க தான் உங்க கதை, கதாபாத்திரங்களுக்கு வித்தியாச வித்தியாசமா பெயர் வைப்பீங்க. உங்க பேரன் அல்லது பேத்திக்கு பேரை முடிவு பண்ணி இதுவரைக்கும் மனசுக்குள்ள ஆயிரம் தடவை சொல்லி பார்த்திருப்பீங்க...''என்கிட்ட மட்டும் மறைக்காம சொல்லுங்க. பேரனாயிருந்தா, ரோஜா மகன்னு பேர் வச்சிருப்பீங்க... பேத்தியாயிருந்தா, வசந்தமலர்ன்னு பேர் வச்சிருப்பீங்க.''''அடியே செல்லம்... என்னை விடு, நீ என்ன பெயர் முடிவு பண்ணி வச்சிருக்க?''வெறுமையாக சிரித்தாள், வகிதா. ''நான் பேர் வச்சு யார் ஒத்துக்கிறது? எனக்கு, எங்க அத்தா ரெண்டு பேர் வச்சாரு. ஒண்ணு, வகிதா; இன்னொன்னு, அலிமா. அலிமான்றது, எங்க அத்தாவோட அம்மா பேரு. இந்த இரண்டு பெயரும் எனக்கு பிடிக்குமான்னு யாரும் கேக்கல. இதுவரைக்கும் எனக்கு நினைவு தெரிஞ்ச நாள்லயிருந்து, நான் யாருக்கும் பெயர் வச்சதில்லை.''வகிதாவின் பேச்சில் ஒளிந்திருந்த கழிவிரக்கத்தை உணர்ந்து, மறுகினேன். மருமகளுக்கு வளைகாப்பு நடந்தது. வளைகாப்புக்கு, மகள் - மருமகன், பேத்தி - பேரன் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.பிறக்கப் போகிற குழந்தைக்கு என்ன பெயர், யார் வைப்பது என்ற கேள்வி, அனைவரின் உள்ளங்களிலும் ஒளிந்து கொண்டு கபடி ஆடியது.வளைகாப்பு நடந்த மாலையே, பள்ளப்பட்டிக்கு பெற்றோருடன் கிளம்பிப் போனாள், மருமகள்.அதன்பின் இரண்டு முறை நானும், வகிதாவும், மருமகளை பார்த்து வந்தோம். வாரா வாரம், தன் கர்ப்பிணி மனைவியை தரிசித்து வந்தான், நிலா. தினமும் ஒரு குழந்தை புகைப்படத்தை மருமகள், 'வாட்ஸ் - ஆப்'புக்கு அனுப்புவேன். தினம் ஒரு முறையாவது மருமகளுக்கு போன் பண்ணி நலம் விசாரிப்பேன்.பிரசவ தேதி, டிச., 15 என, கூறியிருந்தனர். திடீரென்று டிச., 2ம் தேதியே, கரூர் தனியார் மருத்துவமனையில் மருமகளை சேர்த்தனர். டிச., 4ம் தேதி காலை, 10:00 மணிக்கு, 'சிசேரியன்' செய்து குழந்தையை எடுக்கப் போவதாக, போனில் தகவல் கூறினார், சம்பந்தி.பேருந்தில் நாங்கள் கரூருக்கு போய் கொண்டிருக்கும் போதே, 'ஆண் குழந்தை பிறந்து விட்டது. தாயும் - சேயும் நலம்...' என்ற செய்தி வந்தது. பரவசமானேன்.மருத்துவமனையில், தொட்டிலில் கிடத்தப்பட்டிருந்தது, குழந்தை. ஆறு பவுண்டு கை, கால் முளைத்த ரோஜா குவியல்; ஏறு நெற்றி; அடர் கருகேசம் உருண்டை முகம்.செவிலியர் நங்கையருடன் அறைக்குள் பிரவேசித்தார், மருத்துவர். ''பெர்த் சர்டிபிகேட்ல பதிவு செய்யணும்; குழந்தைக்கு பெயர் சொல்லுங்க.''அனைவரும் என் பக்கம் திரும்பி, 'பெயர் சொல்லுங்க...' என்றனர்.''குழந்தையை பத்து மாதம் சுமந்து பெத்தது, என் மருமகள். குழந்தைக்கு பெயர் வைக்கும் முழு உரிமையும் அவளுக்குதான். அவள் சொல்லும் பெயரை குறித்துக் கொள்ளுங்கள்,'' என, ஆணித்தரமாக கூறினேன்.மருமகள் பஹிமா ஆப்ரின் நெட்டுயிர்த்தாள். ''நான் வைக்கப்போகும் பெயருக்கு நிலைபடுத்துபவர், நிரந்தரபடுத்துபவர் என பொருள். 'முஹம்மது அர்ஹான்-' இது தான், என் மகனுக்கு சூட்டப்போகும் பெயர். குறித்துக் கொள்ளுங்கள், டாக்டர்!'''முஹம்மது அர்ஹான்...' லட்சம் தடவை மனதுக்குள் கூவி, குதுாகலித்தேன்.''பெயர் வைக்கும் உரிமையை, பெற்ற தாய்க்கு விட்டு தரும் ஞானோதயம் எப்படி வந்தது புருஷா?''''அறுபது வயசாச்சு... என் ஆணாதிக்க முடிவுகளை மறுபரிசீலனை செய்ய கத்துக்கிட்டேன்.''''எல்லா ஆணாதிக்கவாதிகளும், 60 வயசுலதான் திருந்துவீங்கன்னா, உங்க திருந்தலே எங்களுக்கு தேவையில்லாத ஆணி தான்... பிடுங்காம விட்ருங்க.''அவளது வார்த்தைகள், என்னை கன்னம் கன்னமாக அறைந்தன. உள்ளங்கையால் என் முழு முகத்தை மூடிக் கொண்டேன். ஆர்னிகா நாசர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !