உள்ளூர் செய்திகள்

உங்களுக்கான முகூர்த்த நேரம்!

அரசுத் துறையில், பொறுப்புமிக்க பல உயர் அதிகாரிகள், பொதுமக்களை சந்திப்பதற்காக, ஒரு மணி நேரமோ அல்லது இரண்டு மணி நேரமோ ஒதுக்க வேண்டும். இது, மாவட்ட ஆட்சித் தலைவரிலிருந்து, காவல் துறையில் பொறுப்பான பதவிகளில் இருப்பவர்கள் வரை, அனைவருக்கும் பொருந்தும்.விவரமான அதிகாரிகள், காலையில் சென்று இருக்கையில் அமர்ந்த உடனேயே, இதற்கான நேரத்தை ஒதுக்கிவிட மாட்டார்கள்.நுழைந்ததும், அவசரப் பணிகளை முடுக்கிவிட, ஆரம்ப நேரத்தை எடுத்துக் கொண்டு, அதன் பின்னரே, பொதுமக்கள் மற்றும் பார்வையாளர்களை சந்திப்பர். ஆனால், கெட்டிக்கார அதிகாரிகள் என்ன செய்கின்றனர் தெரியுமா... 'மதியம் தான் பார்வையாளர் நேரம்...' என்பர்.இது தான் சரி என, அறிந்து செய்கின்றனரா என்பது, வெகு வாய் எனக்குள் இருந்து வரும் கேள்வி.திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஒருவரை காணச் சென்ற போது, 'மதியம், 2:00 மணி முதல், 4:00 மணி தான் பார்வையாளர் நேரம்...' என்றனர்; 'சபாஷ்...' என, எண்ணிக் கொண்டேன்.காரணம், ஒவ்வொரு மனிதருக்கும், முழு ஆற்றலுடன் இயங்கும் நேரம் என்று ஒன்று உண்டு. சூரிய சக்தி போலத்தான் இந்த சக்தியும்!இளவெயிலாக ஆரம்பித்து, மெல்ல உயர்ந்து, தகித்து, பின், அப்படியே அமுங்கிப் போகும் வெயில் போல தான், உடலின் இயக்கமும்! காலையில் இருக்கும் சுறுசுறுப்பு, ஆர்வம், உற்சாகம் மற்றும் சிந்தனை வளம் எல்லாமே நேரம் ஆக ஆக, சரிய ஆரம்பிக்கிறது. இரவு நேர சுறுசுறுப்பு என்பது, மிக அபூர்வம்.அன்றாட நிகழ்வுகளும், பணிச் சுமை, சிக்கல், கருத்து வேறுபாடு மற்றும் கவலைகள் மெல்ல ஒரு மனிதனின் ஆற்றலை உறிஞ்சி விட, மாலை வீடு திரும்பும் போது, அசந்து, களைத்துப் போய், 'அப்பாடா...' என்று இருக்கையில் சாய்கிறான்.எழுத்தாளர் பாலகுமாரன் போன்றோர், ஊர் அடங்கிய பின், எழுத ஆரம்பிக்கின்றனர்; எனக்கோ, அதிகாலையே சிறந்த நேரம்.ஆக, ஒவ்வொருவருக்கும் சிறப்பாக இயங்கும் நேரம் மாறுபடுகிறது.சற்றே சிந்தித்து, நீங்கள் நன்கு செயல்படுகிற, உற்சாகமாக இருக்கிற, துடிப்போடு இயங்குகிற, உங்களது சிறந்த நேரம் எது என்பதை கண்டுபிடியுங்கள். இதைக் கண்டுபிடித்து விட்டால், அது தான் உங்களுக்கான அன்றாட, 'முகூர்த்த' நேரம்.அந்த முகூர்த்த நேரத்தில், நீங்கள் படு ஆர்வமாக இருப்பீர்கள். உங்களது மூளை முழுத் திறனுடன் செயல்படக் காத்திருக்கும். எத்தகைய கடினமான பணியோ, பிரச்னையோ, மலைப்பான விஷயங்களோ எல்லாம், 'ப்பூ' என, ஊதித் தள்ளுவீர்கள். சுற்றியிருக்கும் எவருக்கும் தோன்றாத, அருமையான யோசனையை வழங்க முடியும். உங்களால் அவர்களும், 'அட... இது, நமக்கு தோன்றாமல் போயிற்றே...' என்பர்.கவலைக்குரிய அம்சம் என்று ஏதும் வந்தாலோ, 'இப்படி எவ்வளவு பார்த்தவன் நான்... என்னிடம் இந்த ஜம்பம் பலிக்குமா...' என்று சவால் விடுவீர்கள்.அதனால், முகூர்த்தம் எனும் தாலி கட்டும் நேரத்தை, வேலி கட்டி பாதுகாத்துக் கொள்ளுங்கள்; எவருக்கும் அந்நேரத்தை ஒதுக்கித் தராதீர்கள். அது உங்கள் நேரம்; மலைப்பாக கருதும் பணிகளை, இந்நேரம் செய்து முடியுங்கள். இக்கணங்களில், சவால் மிகுந்த கடமைகளில் கவனம் செலுத்துங்கள்.இந்த இனிய போருக்கு தயாராவதற்கு முதற்கட்டமாக செய்ய வேண்டியது, ஒரு நாளில், உங்களின் சிறந்த நேரத்தை அடையாளம் காண்பது தான்.ஊம்... தயாராகுங்கள்... முகூர்த்தத்திற்கு நேரமாச்சு!லேனா தமிழ்வாணன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !