என் அப்பா - ஏவி.எம். சரவணனின் சிறப்பு பேட்டி (1)
திரைப்பட கலைஞர்கள் பலருக்கு, அடித்தளமாக இருந்தது, ஏவி.எம்., என்ற மாபெரும் நிறுவனம்.ஏவி.எம்., நிறுவனம் தயாரித்த படங்கள், திரையரங்குகளில் வெளியாகும்போது, ஆரம்பத்தில் திரையில் காட்டப்படும், 'ஏவி.எம்., புரடக் ஷன்ஸ்' என்ற ஆங்கில எழுத்துக்கள் மற்றும் கம்பீரமான பின்னணி இசையும், சினிமா ரசிகர்களால் மறக்க முடியாதது. 80 ஆண்டு திரைப் பயணத்தில், 178 திரைப்படங்கள் மற்றும் 50 'டிவி' தொடர்களை தயாரித்து, நான்கு தலைமுறைகளை கடந்து நிற்கும் தனித்தன்மை வாய்ந்தது.ஏவி.எம்., நிறுவனத்தை உருவாக்கி, இந்திய திரைப்பட வரலாற்றில் ஒரு சகாப்தமாக விளங்கியவர், ஏவி.மெய்யப்ப செட்டியார். இவரது மூத்த மகனான ஏவி.எம்.சரவணன் தன் அப்பா பற்றியும், நிறுவனத்தை பற்றியும், நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்...நான்கு தலைமுறை கடந்து, தனித்து நிற்கும், ஏவி.எம்., நிறுவனம் பற்றி சொல்லுங்களேன்...என்னை விட, என் அப்பாவுக்கு தான் நிறுவனத்தில் அதிக பங்கு உள்ளது. ஆரம்பத்தில், கல்கத்தா மற்றும் புனேவுக்கு சென்று படம் எடுத்தார். ஆரம்பத்தில், சினிமாவில் நிறைய தோல்விகளை சந்தித்தாலும், விடாமுயற்சி செய்து, 'ஏன் தோல்வியடைந்தோம்...' என்று சிந்தித்தார். தவறுகளை சரி செய்து, அதன்பின் தொடர் வெற்றிகளை பெற்றவர், என் அப்பா.தீ வண்டி என்றொரு படம், இரண்டு லட்சம் ரூபாய் செலவில் எடுத்தார். ஒரு ஆண்டு தொடர்ந்து ஓடி, பெரிய வெற்றி பெற்றது அந்த படம்.அதன்பின், நாம் இருவர் படம் எடுத்தார். காந்திஜி பார்த்த ஒரே படமான, ராமராஜ்யம் படத்தை தமிழில் எடுக்க வேண்டும் என்று, முறைப்படி அனுமதி பெற்று தயாரிக்கப்பட்டது. அப்படம், 100 நாட்கள் ஓடியது. இப்படத்திற்கு பின், அவர் இறுதி காலம் வரை தோல்விகளையே சந்திக்கவில்லை.உங்கள் அப்பா, துவக்கத்தில் என்ன தொழில் செய்தார்?முதன் முதலில், 'ஏவி அண்ட் சன்ஸ்' என்ற பெயரில், கார் மற்றும் சைக்கிள் உதிரி பாகங்கள் விற்பனையகத்தை காரைக்குடியில் துவக்கினார். அவை மட்டுமின்றி, கிராமப்பகுதியில் கிடைக்காத சாக்லேட்கள், புகைப்பட சுருள்கள், கிராமபோன் ரிக்கார்டுகள் மற்றும் மருந்துகளை சென்னையிலிருந்து கொள்முதல் செய்து, காரைக்குடி சுற்று வட்டார பகுதிகளில் விற்று வந்தார்.தொழிலை விரிவுபடுத்த, சென்னை, கல்கத்தா மற்றும் மும்பை நகரங்களுக்கு அடிக்கடி பயணம் செய்வார்.இதன் அடுத்த கட்டமாக, சென்னையில் குடியேறி, அன்றைய மவுன்ட் ரோடில், செப்., 9, 1932ல், 'சரஸ்வதி ஸ்டோர்ஸ்' என்ற பெயரில், கிராமபோன் ரிக்கார்டுகளின் விற்பனையை துவக்கினார்.ஊமைப் படங்கள் எனப்படும் சலனப் படங்கள் காலம் முடிந்து, கடந்த, 1934ல், பேசும் படங்கள் வெளிவரத் துவங்கியது. மக்களின் வரவேற்பை பார்த்து, தானும் படம் தயாரிக்க முடிவு செய்து, கல்கத்தா சென்று, அல்லி அர்ஜுனா என்று ஒரு படத்தை தயாரித்து, இயக்கினார்.படப்பிடிப்பு முடிந்து, படமாக்கப்பட்ட காட்சிகளை போட்டு பார்த்தபோது, படத்தின், 'ஹீரோ' கண்ணை மூடிக்கொண்டே பேசி இருக்கிறார்.அப்போதெல்லாம் உடனுக்குடன் நடிப்பை பார்ப்பதற்கான சரியான, 'லேப்' வசதிகள் இல்லை. பின்னர் தான் அந்த குறையை கண்டுபிடித்தனர். ஆனாலும், எதுவும் செய்ய முடியவில்லை. அப்படியே வெளியானது. படம் சரியாக போகவில்லை; அதற்கடுத்து அப்பா தயாரித்த மூன்று படங்களும் தோல்வியை தழுவின.தரமான கேமரா, 'பிளே பேக்' கருவிகள் இல்லாததால், படம் சரியாக அமையவில்லை. அதுமட்டுமல்ல, படப்பிடிப்புக்காக கல்கத்தா, புனே என்று ஸ்டுடியோக்களுக்கு அலைவதை தவிர்க்க, சென்னை, கோடம்பாக்கத்தில், பிரகதி ஸ்டுடியோ என்ற பேனரில், 'பிரகதி பிக்சர்ஸ்' என்ற தயாரிப்பு நிறுவனம் ஒன்றை ஆரம்பித்தார்.'பிரகதி பிக்சர்ஸ்' நிறுவனம் சார்பில், என் அப்பா இயக்கிய முதல் படம், சபாபதி.பம்மல் கே.சம்பந்த முதலியார், கதை - வசனம் எழுத, டி.ஆர்.ராமச்சந்திரன் கதாநாயகனாக நடித்தார். படம், மாபெரும் வெற்றி பெற்றது.ஆரம்ப கால படங்களில், ஒரு படத்தை எடுக்க, பட்ஜெட் எப்படி நிர்ணயம் செய்தனர்?அந்த காலத்தில், நடிகர் - நடிகையர், இசையமைப்பாளர், மற்ற தொழில்நுட்ப பிரிவினரின் சம்பளம் மிகக் குறைவு. சிலருக்கு, மாதம், 55 ரூபாய் கூட சம்பளமாக கொடுத்துள்ளோம். பராசக்தி படத்தில் நடித்த, சிவாஜி கணேசனுக்கு, மாதம், 250 ரூபாய் சம்பளம் தான் கொடுத்தோம். படத்தின் வரவு, செலவு மற்றும் பட்ஜெட் எல்லாமே எங்க கட்டுப்பாட்டுக்குள் இருந்தன. படம் எடுப்பதற்கான செலவு தான் அதிகமிருக்கும். படத் தயாரிப்பில் உங்கள் அப்பாவின் பங்கு எப்படி இருந்தது?கடுமையான உழைப்பு அவருடையது. அவர் மேஜை மீது ஒரு பைல் இருக்கும். தயாரிப்பு விபரங்கள் அனைத்தும் அதில் இருக்கும்.ஒரே சமயத்தில், ஏழு படங்கள் கூட தயாரித்துள்ளார். அந்த அளவுக்கு மிக தெளிவான பட்ஜெட், சம்பளம், நடிகர்கள் யார் யார், எத்தனை நாள் படப்பிடிப்பு என்ற புள்ளி விபரங்கள் எல்லாம் துல்லியமாக அதில் இருக்கும்.ஏவி.எம்., நிறுவனத்தில் பணியாற்றிய ஐந்து பேர் பின்னாளில் முதல்வர்களாக ஆனவர்கள். அதைப் பற்றி சொல்லுங்களேன்...நினைத்துப் பார்க்கவே பெருமையாக உள்ளது. இது ஒரு அற்புதம் என்று கூட சொல்லலாம். எங்கள் தயாரிப்பில், கடந்த, 1951ல் வெளியான, அண்ணாதுரை கதை - வசனம் எழுதிய, ஓர் இரவு1952ல், கருணாநிதி கதை - வசனம் எழுதிய, பராசக்தி1954ல், சங்கம் படத்தில் நடித்த, என்.டி.ராமாராவ்1966ல், அன்பே வா படத்தில் நடித்த, எம்.ஜி.ஆர்.,1966ல், மேஜர் சந்திரகாந்த் படத்தில் நடித்த, ஜெயலலிதாஇந்த ஐந்து பேரில், நான்கு பேர், பின்னாளில், தமிழக முதல்வர்களாகவும், என்.டி.ஆர்., ஆந்திர பிரதேச முதல்வராகவும் ஆயினர்.ஐந்து முதல்வர்களின் பயணமும், எங்கள் நிறுவனத்துக்கு மறக்க முடியாத அனுபவம்.