உள்ளூர் செய்திகள்

சந்ததி!

பணம் பத்தும் செய்யும்; ஆபத்தும் செய்யும்.மாரிமுத்து இறந்து போனார். நேற்று வரை, நகமும், சதையுமாக வாழ்ந்தவர். இன்று, மரணித்து கிடக்கிறார். நட்ட நடு கூடத்திலே மாலை சார்த்தி படுக்க வைக்கப்பட்டிருந்தார்.இரண்டு மகன்களும் அழுது கொண்டிருந்தனர். ''அப்பா... இப்படி திடீர்னு சொல்லாம போயிட்டீங்களேப்பா... நேற்று கூட பேசிட்டு இருக்கும்போது, எனக்கு ஏன்பா பிறந்தநாள் விழா கொண்டாட்டங்கள்? நான் என்ன அரசியல்வாதியான்னு சிரிச்சுட்டே கேட்டீங்களேப்பா... இப்படி இன்னிக்கு இறந்து போய் விட்டீர்களே...'' என, தன் அப்பாவின் சடலத்தின் மீது விழுந்து அழுதபடி சொன்னான், மூத்த மகன் நல்லமுத்து.''என்னை கம்ப்யூட்டர் படிக்க சொல்லி அனுப்பிவிட்டு, காலேஜ்லே நல்லவேலைக்குப் போய் சேருப்பான்னு சொன்னீங்களே... இன்னைக்கு உங்களுக்கு கொள்ளி வைக்க வேண்டிய வேலையை எங்களுக்கு கொடுத்துட்டு போயிட்டீங்களா அப்பா...'' என்று அரற்றினான், இளையவன் முத்து மாணிக்கம்.இதையெல்லாம் கூடத்தில் இருந்து கேட்டுக் கொண்டிருந்த, ஊர் மக்கள் அழுதனர். தன் அப்பாவின், 50வது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட நினைத்தவர்கள், இப்படி இந்த விழா அழுகையாக மாறியதை எண்ணி, இருவரும் கதறினர்.அலங்கார பேப்பர், தோரணங்கள் அறுந்து கிடக்க, போட்ட கோலங்கள் அழிந்து, ஒரு கூடத்தில் அமைதியாக படுத்திருந்தார்.ஐந்து ஆண்டுகளுக்கு முன், வெள்ளை மயிலைக் காளை பூட்டிய ரெட்டை மாட்டு வண்டியில், கணவனும் - மனைவியுமாக, சாமி கும்பிட, அவர்களுடைய குல தெய்வ கோவிலுக்கு போயினர். அன்று என்னவோ, மேகலை புதுமணப்பெண் போல, சிங்காரித்து, புத்தம் புது புடவை கட்டி, காசு மாலைகளுடன் பயணித்துக் கொண்டிருந்தாள்.அந்த கிராமத்தின் பெரும் பணக்காரர்களில் ஒருவர் தான், மாரிமுத்து. 40 ஏக்கர் நஞ்சை, தோட்டம், துரவு என்று வாழ்ந்தவர். தோட்டத்திலே இருக்கும் பண்ணை வீட்டில், மாதம் ஒருநாள், குடும்பத்துடன் போய் ஓய்வு எடுப்பார்.'என் பெயர் மாரிமுத்து. முத்து பரம்பரை. என் பெரிய பையனுக்கு, நல்லமுத்து; அடுத்தவனுக்கு, முத்துமாணிக்கம்னு, நான் தான் பேர் வைச்சேன்... என் பெயர், பையன்களோட பேரோட சேர்ந்து இருக்கணும். 'இன்ஷியல்' மட்டும் இருக்கக் கூடாது...' என்று சொல்லி சிரிப்பார்.'பெயரில்லா சந்ததியும் பிள்ளை இல்லாத சொத்தும் பாழ் என்பர். எனக்கு, பேரும் உண்டு; பிள்ளையும் உண்டு...' என்பார்.குல தெய்வ வழிபாடு முடிந்து, இருவரும் இரட்டை மாட்டு வண்டியில் திரும்பும்போது, திடீரென்று, மேகலை, அவருடைய மடியிலே சாய்ந்து மரணித்தாள்; 'ஹார்ட் அட்டாக்!'அன்று ஏற்பட்ட விரக்தியில், மரணத்தின் சாட்சி பூதமாக இருந்த அந்த வண்டியை விற்றார். இப்படி ஒவ்வொன்றாக இழந்த பின், இன்று மிச்சமிருப்பது இவரும், இவர் பிள்ளைகளும், சொற்ப சொத்துகளுமே!அதன்பின், ஐந்து ஆண்டுகளுக்குப் பின், இப்படி ஒரு மரணம்.மாரிமுத்து இறந்து, 10 நாட்கள் ஆகிவிட்டன. அப்பாவை சாம்பலாய் ஆற்றில் கரைத்தாகி விட்டது.அன்று...இவர்கள் வீட்டு குடும்ப வக்கீலான, மாரிமுத்துவின் பால்ய நண்பர் வந்தார். மாரிமுத்துவின் மரணத்திற்கு வருத்தம் தெரிவித்தார். தான் அந்த நேரம் பார்த்து ஏதோ வழக்கு விஷயமாக, டில்லி போயிருந்த கதை சொன்னார். அதன்பின், மாரிமுத்து பதிவு செய்து வைத்திருந்த உயிலை பற்றி சொன்னார்.''அப்பா, உயில் எழுதி, அதை பதிவு பண்ணி எங்கிட்டே கொடுத்திருக்கார். நான் ஊரிலே இருந்திருந்தா இறுதிச் சடங்கன்னிக்கே உயிலை வாசிச்சிருப்பேன். தன் சொத்துக்களை எல்லாம் சரி சமமாப் பிரிச்சு, உங்க ரெண்டு பேருக்கும் எழுதி வைச்சிருக்கார்.''மூத்தவனுக்கு, கூட இருந்து விவசாயம் பாத்ததாலே, இந்த நில புலம், தோட்டம் மிச்சமிருக்கிறதை எல்லாம் எழுதி வைச்சிருக்கார்,'' என்றார்.'ஏதோ அப்பா கூட இருந்ததால, விவசாயம் பார்த்தேன். இந்த உரம், மாடு, உழவு, சகதி இதோட யாரு மாரடிப்பா... எல்லாத்தையும் வித்துட்டு, டவுனிலே ப்ரைம் ஏரியாவிலே, ஒரு, 'வில்லா' இல்லை, 'கம்யூனிடி அப்பார்ட்மென்ட்'டிலே, மூன்று படுக்கையறை உள்ள, 'ப்ளாட்' வாங்கிடணும்...' என, நினைத்தான், மூத்தவன். அடுத்து, வக்கீல் குரல் கேட்டது.''மாணிக்கம்... உனக்கு இந்த வீட்டையும், வங்கியில் உள்ள பணத்தையும் எழுதி வைச்சிருக்கார்.'''பழமையான இந்த ஓட்டை வீடா... வேறு வழியில்லை. அப்பாவோட இருந்ததால, இந்த வீட்ல இருந்தேன். இதை சீர் செய்யவே பல லட்ச ரூபாய் செலவாகும். பேசாம இத வித்துட்டு, டவுனுக்கு போயி ஒரு நல்ல ஏரியால பிரமாதமான, நாலு படுக்கையறையுடன், 'ப்ளாட்' ஒண்ணு வாங்கணும். 'அப்புறமா, ஒரு, 'ஸ்டார்ட் அப் கம்பெனி' ஆரம்பிக்கலாம். அதுக்கெல்லாம் பணம் வேண்டாமா... இந்த பேய் பங்களாவை வைச்சுட்டு என்ன பண்றது? வித்துட வேண்டியது தான்...' என, யோசித்தான், சின்னவன். ''என்னப்பா?'' என, வக்கீல் கேட்க, இருவரும் யோசனையில் இருந்து மீண்டு கை நீட்டினர்.''என்ன?'''டாக்குமென்ட்ஸ்... அதாவது, உயிலோட ரெஜிஸ்டர் டாக்குமென்ட்ஸ்...' என்றனர்.''இருப்பா... அதுக்கு முன்ன, இன்னொன்ன நீங்க பார்க்கணும்... இருங்க, இந்த, 'லேப்டாப்'பில், ஒரு வீடியோ இருக்கு, அத போடறேன்,'' என்றவர், 'லேப்டாப்'பை உயிர்பித்தார்.அது உயிர் பெற்று, சில நிமிடங்களில், கருப்பான திரை. அதற்குப் பின், பெரியவரின் பிறந்தநாள் விழா. உறவுகள் புடைசூழ, பெரியவரை சுற்றி நிற்கும் அனைவரும் கை தட்ட, சுற்றிலும் வண்ண வண்ண காகிதங்கள் காற்றில் பறக்க...'ஆமாம் ஆமாம், அன்று நடந்தது தான். இதை நாமே எடுத்து வைத்திருக்கிறோம்; இதை வக்கீல் ஏன் மீண்டும் எடுத்துப் போடுகிறார்?' என, எண்ணினர்.திடீரென்று காட்சி மாறுகிறது, பெரியவர் துாங்கப் போகிறார். பெரியவரின் அருகிலே இருக்கும் டம்ளர் பாலில், எதையோ கலந்து, பெரியவன் கொடுக்க... பெரியவர் அதை அருந்த... அதன்பின், சின்னவன் அவர் முகத்தை தலையணை வைத்து அமுக்க, ஒரு நிமிடம் துடிதுடித்தவர், அப்படியே சவமாகிப் போகிறார்.இருவரும் திகைத்துப் போயினர்.எத்தனை நாட்கள் அப்பா தரும் பணத்தை எதிர்பார்த்துக் காத்திருப்பது? எங்களுக்கும் ஆசை இல்லையா என்ன? திட்டம் போட்டு, இருவரும் செய்த செயல், கண் முன் காட்சியாய் விரிய...''உங்கப்பா, எனக்கு சிறந்த நண்பர். எங்கிட்ட, 'என் பிள்ளைங்க, என் பேர்ல நிஜமாகவே அன்பா இருக்காங்களான்னு எனக்குத் தெரியணும். அதனால, ஒரு காரியம் செய். என் படுக்கையறையில, மறைவான இடத்திலே, 'ஹிட்டன்' கேமரா பொருத்து. கேமராவை, 'ப்ளூடூத்' மூலமா, மானிட்டரை உன் வீட்டிலேருந்து என்ன நடக்குதுன்னு பாரு... நாளைக்கு, ரெண்டு பசங்களும் ஒரு வாரம் வெளியூர் போறாங்க...'ன்னு சொன்னார்.''நான் அப்படியே செய்தேன். அவரது இறப்பில் ஏதோ மர்மம் இருப்பது போல் தோன்றவே, பதிவானதை பார்த்தேன். இப்படியா செய்வீர்கள்?'' என்றார், வக்கீல். இருவரும் பிரமித்து நிற்கும்போது, யாரோ வாசல் கதவை தட்ட, திறந்தார், வக்கீல்.போலீசாரை பார்த்ததும், ''வாங்க வாங்க... நான் தான் வரச் சொன்னேன்; 'பார்ட்டி ரெடி' கூட்டிட்டுப் போங்க,'' என்றார்.நீட்டிய சந்ததிகளின் கரங்களில் விலங்கு. போலீஸ் ஜீப் கிளம்பியது.தன் நண்பன் படத்தின் முன், கண்ணீருடன் நின்றார், வக்கீல்.'மாரிமுத்து, நீ சொன்னபடி எல்லாம் பண்ணிட்டேன். மேகலை பத்தி, உன் பிள்ளைங்ககிட்ட நான் எதுவுமே சொல்லலை. தன் தாயை பற்றின எந்தத் தகவலும் அவங்களுக்கு தெரியாது; கவலைப்படாதே... 'பிள்ளைகளுக்கு, பார்த்துப் பார்த்து, முத்து முத்தா பேர் வைச்சியேப்பா... எல்லாம் சொத்துக்கு ஆசைப்பட்ட சொத்தை முத்து... பேர் மட்டும் அடையாளம் இல்லை... செயல்தான் அடையாளம்...' என, மனதிற்குள் நினைத்துக் கொண்டார்.டெயில் பீஸ்: ஐந்து ஆண்டுகளுக்கு முன், மரணிக்கும் வேளையில், மேகலை தன் கணவனிடம் சொன்னது:'ரெண்டு பசங்கள்லே ஒருத்தன் உங்களுக்குப் பிறந்தவன் இல்லை!'அடாணா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !