வைகறையில் வைகைக் கரையில்...
மே 4 - அழகர் திருவிழா வைகை ஆறு, இன்று இருப்பது போல் சங்க காலத்தில் இல்லை. நதிக்கரையில் ஏராளமான மரங்களும், அவற்றில் வாசனை மலர்களும் பூத்துக் குலுங்கின. அந்த மலர்களெல்லாம் உதிர்ந்து வைகை வெள்ளத்தில் மிதந்து செல்லும் காட்சியை, பரிபாடல் போன்ற சங்க இலக்கியங்கள் அழகுடன் வர்ணிக்கின்றன.இயற்கை வளம் மிக்க இவ்வைகை ஆறு, சிவனால் உருவாக்கப்பட்டது. தன் திருமணத்திற்கு வந்தவர்களின் தாகம் தீர்க்க, தன் சிரசை சற்றே கவிழ்த்து, கங்கையை இங்கே விட்டு இந்நதியை உருவாக்கினார் சிவன். கங்கை என்றாலே பாவம் போக்குவது; இத்தகைய நதியில் மூழ்கி எழுந்தால், பிறவி பிணி இருக்காதே என்ற எண்ணம், சுதபஸ் முனிவருக்கு எழுந்தது.அத்துடன், 'வைகையில் ஒருமுறை மூழ்கி எழுந்தாலே, செய்த பாவம் நீங்குமென்றால், அங்கேயே பலநாள் மூழ்கிக் கிடந்தால், பிறவியே இல்லாமல் போய் விடுமே...' என்று கணக்கு போட்டார் சுதபஸ் முனிவர்.அச்சமயம், துர்வாசர் முனிவர் அங்கே வர, அவரை காணாதது போல் இருந்தார் சுதபஸ். உடனே துர்வாசருக்கு கோபம் வந்து, ' சுதபஸ்... உன் அலட்சிய மனோபாவத்தால் நீ மண்டூகமாக (தவளையாய்) இந்த நதியில் மூழ்கிக்கிட. எப்போது பெருமாள் இந்த ஆற்றில் கால் வைக்கிறாரோ, அப்போது அவரது திருவடி பட்டு மோட்சம் அடைவாய்...' என்று சாபமிட்டார். சுதபஸ் நினைத்தது நடந்து விட்டது.'மண்டூகமாகப் போ...' என, முனிவர் ஏன் சாபம் கொடுக்க வேண்டும்... 'மச்சமாகப் போ...' (மீனாக மாறு) என, சாபம் தந்திருக்கலாமே!மீன் என்றால் தண்ணீரில் மட்டுமே வாழ முடியும். தவளை என்றால் தண்ணீர், தரை என எங்கும் வாழலாம். முனிவர்களின் கோபம் கூட நல்லதையே செய்யும். அவர்கள் செய்த தவத்தின் பலன் அது!சுதபஸ் அன்று முதல், மண்டூகர் ஆனார். தவளையாய் ஆற்றில் வசித்தார். மிக நீண்டகாலம் வைகையில் கிடந்தவர், பெருமாள் என்று வருவார் என, தினமும் கரைக்கு வந்து பார்ப்பார்.ஒரு சித்ரா பவுர்ணமியன்று வைகறை (அதிகாலை) பொழுதில், அழகர்கோவில் சுந்தரராஜப் பெருமாள் வந்தார். வைகையைக் கடக்கும் போது, அவரது திருவடி, மண்டூகர் மீது பட, சுய உருவைப் பெற்றார் சுதபஸ்.'பெருமாளே... இனி எனக்கு மோட்சம் தானே...' எனக் கேட்டார்.'சுதபஸ்... இப்போது நீ மோட்சத்தில் தானே இருக்கிறாய்...' என்றார் பெருமாள்.சுற்றுமுற்றும் பார்த்தார் சுதபஸ். ஆம்... திருவடி பட்ட அந்த நொடியே அவர் மோட்சத்திற்கு சென்று விட்டார்.நமக்கும் அதே நிலை தான்!நாளை அழகர் ஆற்றில் இறங்குகிறார். அவரது திருவடியை தரிசித்தாலே போதும்; பூலோகத்திலேயே சொர்க்கத்தைப் பார்த்து விடலாம்.அவரிடம் மனதார பிரார்த்தித்தால் போதும்; வேண்டியதை அள்ளித் தருவார். நம் தமிழகத்தில் போதுமான மழை வேண்டும்; பயிர்கள் செழிக்க வேண்டும் என பொதுவான பிரார்த்தனையை வைப்போம்; வேண்டியதை அள்ளித் தருவார் அழகர் பெருமான்.தி. செல்லப்பா