ஒற்றைக்கண் விநாயகர்!
திருச்சியில். உச்சிப் பிள்ளையார் இருப்பது போல், மகாராஷ்டிர மாநிலம், புனே அருகிலுள்ள, லேனாத்ரி மலையில், ஒரு உச்சிப் பிள்ளையார் இருக்கிறார். 323 படிகள் ஏறி, இவரை தரிசிக்கலாம். கிரிஜாத்மத் விநாயகர் என்பது, இவரது பெயர். இவருக்கு, ஒரு கண் மட்டுமே இருக்கிறது.சதுர்த்தி திதியில், மஞ்சளை எடுத்து ஒரு உருவம் படைத்தாள், பார்வதி தேவி. அதற்கு, 'குணேஷ்' என, பெயரிட்டாள். இந்தப் பெயரே நாளடைவில், கணேஷ் ஆனது. 'குணேஷ்' என்றால், 'நல்ல, தீய குணங்களை தனக்குள் அடக்கிக் கொள்ளும் சக்தி வாய்ந்தவர்...' என, பொருள்.குணேஷிடம், 'உன்னை வணங்கிய பிறகே, உலகில் உள்ள எவரும், எச்செயலையும் துவங்க வேண்டும். அவ்வாறு செய்தால் தான், அந்தச் செயல் வெற்றிகரமாக நடக்கும்...' என, வரம் கொடுத்தார், சிவன். லேனாத்ரி மலையில், 15 ஆண்டுகள் வளர்ந்தார், குணேஷ். அப்போது, அரக்கர் தலைவனான சிந்து, தனக்கு, குணேஷால் அழிவு வரலாம் என கருதி, பல அரக்கர்களை அனுப்பினான். அவர்களை கொன்றார், குணேஷ். அதுமட்டுமின்றி, தன் பால லீலைகளையும் செய்தார். குணேஷுக்கு, இத்தலத்தில் உபநயனம் செய்து வைத்தார், கவுதம முனிவர். எனவே, உபநயனம் செய்வதற்கு இந்த தலம் மிகவும் ஏற்றதாக கருதப்படுகிறது.பார்வதிக்கு மற்றொரு பெயர், கிரிஜா. அவளது, ஆத்மஜ் சக்தி, விநாயகரின் உடலுக்குள் அடங்கியுள்ளது. எனவே, இந்த விநாயகரை, 'கிரிஜாத்மஜ்' என்கின்றனர்.இது, ஒரு குகை கோவில். இதை, கணேஷ் குகை என்கின்றனர். படி ஏற முடியாதவர்களுக்கு, டோலி வசதி உள்ளது. மலைச் சிகரத்தில் அருவி உள்ளது.கருவறையில் உள்ள சிலை அருகில் சென்று வழிபடலாம். 16 கை உள்ள விநாயகரின் உலோக சிலையும் உள்ளது. குகையில் உள்ள சுவரோடு ஒட்டியுள்ளது, விநாயகர் சிலை. ஒரு கண் மட்டுமே இவருக்கு இருப்பது விசேஷம். மலை ஏற, கட்டணம் உண்டு. காலை, 7:00 மணி முதல் மாலை, 5:00 மணி வரை தரிசிக்கலாம்.விநாயகர் சதுர்த்தியை ஒட்டி, ஏழு நாட்களும் விழா நடக்கும். விழாவின் முக்கிய அம்சம், மாட்டு வண்டி பந்தயம். பக்தர்கள் பொழுதுபோக்க, 'சுந்தர் உத்யான்' பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. நவம்பர் முதல் மே மாதம் வரை, 'சீசன்' சிறப்பாக இருக்கும். லேனாத்ரியிலிருந்து, 6 கி.மீ., துாரத்தில், சத்ரபதி சிவாஜி பிறந்த, ஷிவ்நேரி கோட்டை உள்ளது. புனே - நாசிக் ரோட்டில், 94 கி.மீ., துாரத்தில், ஜூன்னார் என்ற ஊர் உள்ளது. இங்கிருந்து, 6 கி.மீ., துாரத்திலுள்ள லேனாத்ரிக்கு ஜீப், பஸ்கள் செல்கின்றன. மும்பையிலிருந்தும் பஸ் இருக்கிறது.தொடர்புக்கு: 02132 222 350.தி. செல்லப்பா