உள்ளூர் செய்திகள்

திண்ணை!

மறைந்த முதல்வர், ஜெயலலிதா ஒரு பேட்டியில் சொன்னது: கண்ணன் என் காதலன் படப்பிடிப்பின் போது, ஒருநாள் காலை, படப்பிடிப்பு முடிந்து, காரில் ஏறப் போன எம்.ஜி.ஆர்., 'மத்தியானம் என்ன காட்சி எடுக்கப் போறீங்க?' என்று இயக்குனரிடம் கேட்டார். 'ஜெயலலிதா மாடிப்படியில் சக்கர நாற்காலியில் இருந்து உருண்டு விழும் காட்சி...' என்றார், இயக்குனர்.உடனே, காரை விட்டு இறங்கிய எம்.ஜி.ஆர்., 'அதை எடுக்கும் போது நானும் உடன் இருக்கிறேன்; அந்த காட்சி கொஞ்சம் ரிஸ்க்கானது. அந்த பெண் விழுந்து விட்டால் என்ன செய்வது...' என்று கூறி, எங்களுக்கு உதவ வந்து விட்டார். படத்தில், சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி, தற்கொலை முயற்சியில், மாடிப்படி விளிம்பு வரை வர வேண்டும்; ஓர் அங்குலம் முன்னேறினாலும் உருண்டு விடுவேன்.அதனால், தானே, சக்கர நாற்காலியில் உட்கார்ந்து, பின்னால் கயிற்றைக் கட்டச் சொல்லி, ஒன்றுக்கு, பத்து முறை ஒத்திகை பார்த்து, அதில் அபாயம் இல்லை என்று உறுதியானதும் தான் என்னை சக்கர நாற்காலியில் உட்கார்ந்து நடிக்கச் சொன்னார், எம்.ஜி.ஆர்., அன்று, எனக்காக, என் பாதுகாப்புக்காக, என்னோடு இருந்து, அந்த படப்பிடிப்பை நடத்திக் கொடுத்தார்.மார்ச் 15, 1955, 'தென்றல் திரை' பத்திரிகையில், கவிஞர் கண்ணாதாசன் எழுதிய கட்டுரை: திரையுலகின் தலைசிறந்த கவிஞர், உடுமலை நாராயண கவி என்பது நாடறிந்த உண்மை. அவரது பாடல்களில் உள்ள சொல் நயம், சாதாரண கருத்துகளையும் ஒளி பெற செய்து விடும். மேலும், அடிக்கடி வேடிக்கையாக பாடுவார். ஜூபிடர் பிக்சர்ஸ், கிருஷ்ண விஜயம் என்ற படத்தை எடுத்தது; அதை தயாரிக்க நான்கு ஆண்டுகள் ஆகின. படத்தின் இயக்குனர் சுந்தர் ராவ் நட்கர்னி, அந்த நான்கு ஆண்டுகளிலும் தாடியை எடுக்கவே இல்லை. படம் வெளி வந்து, தோல்வியடைந்தது. இதுபற்றி, உடுமலைக் கவி ஒரு பாடல் புனைந்தார். அது...தாடி வளர்த்து, தவமிருந்து நாலு வருஷம் எடுத்ததமிழ்ப் படமாம் கிருஷ்ண விஜயம்...தலையணை வச்சுப் படுத்தது!இதுமட்டுமா, தன்னைப்பற்றி கூட வேடிக்கையாக பாடி விடுவார். திரையுலகில், உடுமலையை, 'வாத்தியார்' என்றழைப்பது வழக்கம். ஒருசமயம், ஒரு பாடலாசிரியர், அவரை பார்த்து, 'வயதான காலத்திலே வாத்தியாரே...' என்று இழுத்தார். உடனே, அதை முடிக்கும் விதமாக, 'நீங்க வைச்சுக்க வேணும் ஒரு கூத்தியாளே...' என்றார், உடுமலை நாராயணக்கவி!ஆனந்த விகடன் பத்திரிகையை, எஸ்.எஸ்.வாசன் துவங்கிய புதிதில், அதில் வெளியான, உ.வே.சாமிநாத ஐயர் எழுதிய, 'என் சரித்திரம்' என்ற கட்டுரை தொடரும், அதன் விற்பனை வெற்றிக்கு ஒரு காரணம். இதுபற்றி, கி.வா.ஜ., ஒரு பேட்டியில் சொல்லியது:உ.வே.சா., என் குரு; கல்கி, என் நண்பர். உ.வே.சா.,வை பார்க்க வேண்டும் என்று ஒருநாள் கல்கியும், துமிலனும் வந்தனர். அவர்களை, உ.வே.சா.,விடம் அழைத்துச் சென்றேன். சிரிக்கச் சிரிக்கப் பேசிய அவரது பேச்சைக் கேட்ட கல்கி, 'ஐயர்வாள் பெரிய தமாஷ்வாலாவா இருக்கிறாரே...' என்றார். உடனே, நான், 'தமாஷ்வாலா' என்ற பெயரில், 'ஆனந்த விகடனில்' இதை வேடிக்கை கதையா எழுதினேன். அந்தப் பழக்கத்தால், உ.வே.சா.,வின், 'என் சரித்திரம்' ஆனந்த விகடனில் வெளிவர ஏற்பாடு செய்தனர்.நடுத்தெருநாராயணன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !