உள்ளூர் செய்திகள்

திண்ணை!

பரந்தாமன் எழுதிய, 'கலைவாணர் கதை' நுாலிலிருந்து: ஒரு சமயம், ஆரியமாலா படப்பிடிப்பில் பங்கேற்க, கலைவாணரும், மதுரமும், சென்னையிலிருந்து, கோயம்புத்துாருக்கு காரில் சென்று கொண்டிருந்தனர். வழியில், சாலை ஓரத்தில் ஒரு கார் நின்று கொண்டிருந்தது. ஒருவர், காரின் இன்ஜினுக்குள் தலையை நீட்டி, பழுதை சரி செய்து கொண்டிருந்தார்.அதை கண்ட கலைவாணர், தன் காரை நிறுத்தச் சொன்னார். இறங்கி, பழுதை சரி செய்து கொண்டிருப்பவரின் பக்கத்தில் போய் நின்றார்.'அடடா... நீங்களா?' என்றார், கலைவாணர்.'ஆமாம்...' என்று பதில் சொன்னவர், பிரபல சினிமா நடிகர், பி.யு.சின்னப்பா.'புதுக்கோட்டையிலிருந்து புறப்பட்டு வருகிறேன். இந்த இடத்தில் கார் மக்கர் செய்து விட்டது. நல்ல வேளை, இங்கே உங்களையும், மதுரத்தையும் பார்க்க நேர்ந்தது...' என்றார்.உடனே, பக்கத்தில் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ஒரு கிராமவாசியிடம், ஐந்து ரூபாய் கொடுத்து, ஒரு தாம்பு கயிற்றை வாங்கி வரும்படி சொன்னார், கலைவாணர்.ஓடிச்சென்று, தாம்புக் கயிற்றோடு வந்தான், கிராமவாசி.கயிற்றின் ஒரு முனையை சின்னப்பாவின் காரோடு பிணைத்து கட்டினார். மறு முனையை, தன் காரோடு கட்டினார்.தன் காரை முன்னால் ஓட்டச் சொன்னார். கயிற்றால் பிணைக்கப்பட்டிருந்த கார், ரயில் வண்டி தொடர் போல் பின்னால் வந்தது.கோவை, சென்ட்ரல் ஸ்டியோவிற்குள் இரண்டு கார்களும் நுழைவதை, இயக்குனர், ஸ்ரீராமுலு நாயுடு வியப்போடு நோக்கினார்.சின்னப்பாவிடம், 'வழியில் கார் நின்று விட்டதா...' என்று வினவினார், இயக்குனர் ஸ்ரீராமுலு நாயுடு.'கார் நின்றால் என்ன, உங்கள் காத்தவராயனை என் காரோடு கட்டி இழுத்து வந்திருக்கிறேன்...' என்று பதில் சொன்னார், கலைவாணர்.'உலக அதிசயங்கள்' என்ற நுாலிலிருந்து: உலக அதிசயங்களில் ஒன்றான, யமுனை நதிக்கரையில் அமைந்துள்ள தாஜ்மஹாலை பற்றி பேசும்போது, காதல் மனைவி மும்தாஜுக்காக எழுப்பப்பட்ட பளிங்கு நினைவுச் சின்னம் மட்டுமே நினைவுக்கு வரும்.அந்த மஹால் கட்டப்பட உழைத்தவர்கள் கொஞ்ச நஞ்சமல்ல, பட்டியல் இதோ:வெனிஸ் நகரத்து பெருந்தச்சன் - வெரோனியா; துருக்கிய கட்டட சிற்பி - உஸ்தாத் இஸா, அபாண்டி; பாரசீக கைவினை கலைஞன் - அமாகாத்கான்; லாகூரின் பெருஞ்சிற்பி - உஷ்தாத் ஹெமத்.இதற்கு மேலாக, ௧,௦௦௦ யானைகளின் இழு திறன், 20 ஆயிரம் பணியாளர்களின் வியர்வை, 252 மாதங்களின் கால முதலீடு, 50 லட்சம் பொருட் செலவு, 1 கி.மீ., நீளத்தில் நெடுஞ்சாரம், உலக கட்டட கலைஞர்களின் மூளை, கடைசியாக, உலகக் காதலுக்கு அழப்பட்ட மிகப்பெரிய கண்ணீர் துளிகளே, தாஜ்மஹால்.பிலோ இருதயநாத் எழுதிய, 'ஆதிவாசிகள்' என்ற நுாலிலிருந்து: பாம்பினங்களில் பச்சை பாம்பு என்று ஒரு வகை உண்டு. அது, தண்ணீரில் வாழும் அல்லது மரங்களில் உள்ள பச்சை நிற இலைகளின் ஊடே இருக்கும். சாதாரணமாக பார்த்தால், நம் கண்களுக்கு அவை தெரியாது.மரங்களின் கிளைகளில் அப்பாம்பு உள்ளதை அறியாமல், மனிதர்கள் நெருங்கினால், ஏதோ ஆபத்து என நினைத்து, அவர்கள் மீது பாய்ந்து கடிக்கவும் செய்யும். நாம் நிற்பதும், மரத்திலிருந்து பாம்பு பாய்வதும் நிகழ்வதால், அவை, கண்ணை கொத்த வருவது போல் தோற்றத்தை ஏற்படுத்துகிறது. இதுதான் உண்மை. மற்றபடி, பாம்பு கண்ணை கொத்தாது.அதேபோல், நம்மிடையே இருந்து எதையும் கூர்ந்து பார்க்கும் மனிதர்களை குறிப்பிடும்போது, கண்கொத்தி பாம்பாக பார்த்துக் கொண்டே இருந்தான், என்பர்.நடுத்தெரு நாராயணன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !