திண்ணை!
கடந்த, ஜனவரி, 1966ல், பாரதத்தின் பிரதமராக இருந்த, லால்பகதுார் சாஸ்திரி, திடீரென்று, ரஷ்யாவில் காலமானார்.அப்போது, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தார், காமராஜர். ஒன்றரை ஆண்டுகளுக்கு முன், ஜவஹர்லால் நேரு மறைந்த போது, லால் பகதுாரை பிரதமராக ஒருமனதாகத் தேர்வு செய்திருந்தவர், காமராஜர் தான். இந்த முறை, பிரதமர் பதவிக்கு போட்டியிட தயாராக இருந்தார், மொரார்ஜி தேசாய். நேருவின் மகளான இந்திராவை பிரதமராக்கலாம் என, யோசித்தார், காமராஜர்; மொரார்ஜி விடுவதாக இல்லை.'அடுத்த பிரதமரை, ரகசிய வாக்கெடுப்பு தீர்மானிக்கட்டும்...' என, திட்டவட்டமாக கூறினார், மொரார்ஜி.ஓட்டெடுப்பு நடத்த முடிவானது. மத்திய மண்டபத்தில், காங்கிரஸ் எம்.பி.,க்கள் அனைவரும் கூடினர். இந்திராவும், மொரார்ஜி தேசாயும் மட்டுமே, பிரதமர் பதவிக்கான போட்டியில் பங்கேற்றனர்.வெள்ளைக் கதர் புடவை, மஞ்சள் சால்வையுடன் கம்பீரமாக நடந்து வந்தார், இந்திரா.அங்கே, அனைத்து காங்கிரஸ் எம்.பி.,க்களும் அமர்ந்திருந்தனர். வயதில் பெரியவரும், கட்சியில் சீனியரும், போட்டியாளருமான, மொரார்ஜி தேசாய் அமர்ந்திருந்த இடத்துக்கு சென்றார், இந்திரா.உங்கள் சவாலை ஏற்றுக் கொள்ளத் தயார் என்பது போல, கை குலுக்கிய இந்திரா, பின்பு கம்பீரமாக நடந்து, தன் இருக்கையில் அமர்ந்தார். ரகசிய ஓட்டெடுப்பு நடந்து முடிவுகள் வெளியானது. மொரார்ஜி தேசாயை விட, 186 ஓட்டுகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார், இந்திரா. இந்திராவின் அந்தத் தன்னம்பிக்கை இருக்கிறதே, அது தான் சிறப்பு.சபர்மதி ஆசிரமத்தில், காந்திஜியை பார்க்க, தேசத்தின் பல இடங்களில் இருந்தும் தினமும் கணிசமான எண்ணிக்கையில், மக்கள் வருவர்.ஒருநாள், காந்திஜியை சந்தித்து, 'வாழ்க்கையில் விடாது பின்பற்ற ஏதாவது செய்தி சொல்லுங்கள்...' என்றார், தேசபக்தி மிக்க வியாபாரி ஒருவர். அவரிடம் ஏதும் சொல்லாமல், சிரித்தபடியே போய் விட்டார், காந்திஜி.அடுத்த நாளும் இதே கேள்வியை, அந்த வியாபாரி கேட்டார். 'பின்பு சொல்கிறேன்...' என்றார், காந்திஜி. நாட்கள், வாரங்கள் ஆகி, மாதங்களும் கடந்தன. பொறுமையிழந்த அந்த வியாபாரி, காந்திஜியிடம், 'என் ஊரில் வேலைகள் பலவும் நிலுவையில் உள்ளன. நான் உடனே போக வேண்டும். உங்களை அப்படி என்ன பெரிதாகக் கேட்டு விட்டேன்.'தொடர்ந்து, நான் கேட்கும்போதெல்லாம், பிறகு, பிறகு என்கிறீர்களே... வாழ்க்கையில் நான் கடைப்பிடிக்க வேண்டிய ஏதாவது ஒரு விஷயத்தைச் சொல்லுங்கள் என்றுதானே கேட்டேன்...' என்றார்.'நான் தனியாக சொல்வதற்கு என்ன இருக்கிறது. நீங்களும் ஆசிரமத்தில் இவ்வளவு நாட்கள் தங்கி இருந்து, என் செயல்பாடுகளை பார்க்கிறீர்கள். அவற்றில் எதுவுமே நீங்கள் கடைப்பிடிக்கத் தக்கதாக, உங்களுக்குப் படவில்லையா...'நான் செய்வது வேறு, சொல்வது வேறா. என் வாழ்க்கை முறை தான் மற்றவர்களுக்கு நான் சொல்லும் செய்தியாக நம்புகிறேன். அதனால் தான், தனியாக எதைப் பற்றியும் சொல்லவில்லை...' என்றார், காந்திஜி.- நடுத்தெரு நாராயணன்