உள்ளூர் செய்திகள்

நாட்டியப் பேரொளி பத்மினி! (11)

பத்மினி நடனமாடிய முதல் படமே, தமிழில் இருந்து ஹிந்திக்கு, 'ரீ - மேக்'கான, கல்பனா தான். அடுத்து ஏவி.எம்.,மின், பஹார் - வாழ்க்கை படத்தின், 'ரீ - மேக்!' இதில், லலிதாவுடன் நடனமாடினார், பத்மினி.தமிழில் எடுத்த மிஸ்மாலினியை ஹிந்தியில், மிஸ்டர் சம்பத் என்ற பெயரில் பத்மினியை, 'ஹீரோயின்' ஆக நடிக்க வைத்து இயக்கினார், எஸ்.எஸ்.வாசன். அப்படத்தில் நடிக்கும் போது, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி என, ஜெமினி ஸ்டுடியோவிலேயே ஓய்வெடுத்து, அங்கேயே சாப்பிட்டு, உடைமாற்றி என, ரொம்ப, 'பிசி'யாக இருந்தார், பத்மினி.அதனால் பிற தயாரிப்பாளர்களும், தங்கள் படப்பிடிப்பையும் ஜெமினி ஸ்டுடியோவிலேயே வைத்துக் கொண்டனர். 1952ல் வெளியான, மிஸ்டர் சம்பத் மூலம், ஹிந்தி பேசும் பகுதிகளில் பத்மினிக்கு நல்ல அறிமுகம் கிடைத்தது. கடந்த, 1953ல், சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில், தென் மற்றும் வட மாநில நடிகர்களின் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. ராஜ்கபூர், நர்கீஸ், சுரையா போன்றவர்கள் கலந்து கொண்டனர். இதன் மூலம் பல ஹிந்தி படவுலகினரின் அறிமுகம் பத்மினிக்கு கிடைத்தது. கடந்த, 1954ல், அப்சரா என்ற படத்தில் நடித்தார், பத்மினி. மிஸ்டர் சம்பத் படத்தின் போது, பழக்கமான காமெடி நடிகர் ஒருவர், பத்மினியை ஹிந்தியில் மிகப்பெரிய தயாரிப்பாளரான எப்.சி.மெஹ்ராவிடம் சிபாரிசு செய்தார். அதன் மூலம், கைதி என்ற நேரடி ஹிந்தி படத்தில் நடித்தார். ஹிந்தியில், 25க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த பத்மினியின் கடைசிபடம், தர்கா ரிஷ்தா; சுமிதா பட்டேலின் அம்மாவாக நடித்தார்.ராஜ்கபூர் ஜோடியாக மேரா நாம் ஜோக்கர் படத்தில், பத்மினி படுகவர்ச்சியாக நடித்த வேடம், அப்போது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. கை நிறைய படங்களோடு படு பிசியாக இருக்கும் போதே, மகள் பத்மினிக்கு திருமணம் நிச்சயித்து விட்டார், சரஸ்வதி அம்மாள். தாய் சொல்லைத் தட்டாத பத்மினி, அம்மா பார்த்த மாப்பிள்ளைக்கு கழுத்தை நீட்டினார்.மே 25, 1961ல், கேரள மாநிலம், குருவாயூரப்பன் கோவிலில் நடைபெற்ற பத்மினி - ராமச்சந்திரன் திருமணத்தைக் காண, ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டு வந்தனர். மாப்பிள்ளை, டாக்டர் ராமச்சந்திரன். கேரளாவில், தலைச்சேரி பகுதியை சேர்ந்தவர். சென்னையில் மருத்துவக் கல்லுாரியில், மருத்துவ பட்டம் பெற்றவர். ஆரம்பத்தில், ஆலப்புழாவில் சொந்தமாக கிளினிக் நடத்தினார்.அதே ஆண்டின் பிற்பகுதியில், மேற் படிப்புக்காக லண்டன் சென்றார், ராமச்சந்திரன். அங்கு, அவர் படிப்பை முடித்ததும், அமெரிக்காவில் குடியேறினர்.நியூஜெர்சி நகரில் சொந்தமாக கிளினிக் தொடங்கினார், ராமச்சந்திரன். கணவர் காலையில் கிளினிக்குக்கு சென்றுவிட, பொழுதை வீணாக்காமல் கணவரின் அனுமதியோடு, ஒரு நாட்டியப் பள்ளியை தொடங்கினார், பத்மினி.இவரிடம் பயில வந்த, மீனா என்ற ஐந்து வயது குட்டிப் பெண்ணுக்கு முதன்முதலாக நடனமாட கற்றுக் கொடுத்தார். அதுவரை டான்சராக இருந்த பத்மினி, நடன ஆசிரியை ஆனார். அவரின் நடனப் பள்ளியில், ஐ.நா., சபையின் அதிகாரிகள் பலரின் குழந்தைகள் நடனம் பயின்றனர்.பத்மினி - ராமச்சந்திரன் தம்பதிகளுக்கு, ஒரு ஆண் குழந்தை பிறந்தது. பிரேம் ஆனந்த் என்று பெயர் சூட்டினர். ஒரு முறை பத்மினி, கணவருடன் சென்னை வந்திருந்த போது, அவரை பட அதிபர்கள் சந்தித்து, 'மீண்டும் பத்மினி நடிக்க வேண்டும். சில கேரக்டர்களை பத்மினி தான் செய்ய முடியும்...' என்று எடுத்து கூறினர். பத்மினி மீண்டும் சினிமாவில் நடிப்பதற்கு அனுமதி அளித்தார், கணவர்.அதன்பின் மீண்டும், தமிழ் மற்றும் ஹிந்தி படங்களில் நடிக்க ஆரம்பித்தார், பத்மினி. சந்தோஷம் ஜன்னல் வழியாக நுழையும் போது, துயரம் வாசல் கதவு தட்டிக் கொண்டிருக்குமாம். அதுபோல், பத்மினி வாழ்வில், ஒரு பேரிடி விழுந்தது.மகன் பிரேம் ஆனந்தின், 19 வயதின் போது, திடீரென்று ஒரு செய்தி; காலையில் மருத்துவமனைக்கு புறப்பட்டு சென்றார், ராமச்சந்திரன். மதியம் டாக்டருக்கு, 'ஹார்ட் அட்டாக்' என, தகவல் வர, பதற்றமுடன் காரில் புறப்பட்டார், பத்மினி.மனதில் படபடப்பு; கண்களிலிருந்து நீர் பொங்கி வழிந்தது. நான்கு மணிநேரம் பயணித்து மருத்துவ மனையை அடைந்தார். இரவு, 8:00 மணிக்கு, கணவர் அழைத்து, 'பயப்படாதே ஒரு வாரத்தில், 'நார்மல்' ஆகிவிடுவேன்...' என்றார்.செப்., 16, 1982ம் தேதி இரவு, கணவர் உயிர் பிரிந்து விட்டதாக தெரிவித்தனர். அதிர்ந்து போனார், பத்மினி. தன்னை சுதாரித்து, மேற்கொண்டு செய்ய வேண்டியதைப் பற்றி யோசித்தார்.கணவர் உடலை, தங்கள் பகுதிக்கு எடுத்துச் செல்ல இயலாது என்பதால், அங்கிருந்த டாக்டர் அழகப்பன் வீட்டிலேயே வைத்து, அவருக்கு இறுதி காரியம் நடத்தப்பட்டது. அதற்காக அவர்கள் வீட்டில், 10 நாள் தங்கியிருந்து எல்லா சடங்குகளையும் முடித்து, மகனுடன் வீடு திரும்பினார், பத்மினி. தன்னை தனியாக விட்டு, தன் ஜோடி புறா சென்ற சோகம், கொஞ்சம் கொஞ்சமாக மறந்து வரும் நேரம், மீண்டும் ஒரு அதிர்ச்சிகரமான தகவல். தங்கை ராகினி, புற்றுநோயால் இறந்தது போன்று, அக்கா லலிதாவும் புற்று நோயால் இறந்த தகவல் வர, நிலைக்குலைந்து போனார், பத்மினி.மீதமுள்ள வாழ்வை இந்தியாவில் செலவிட எண்ணினார், பத்மினி.- தொடரும்.பத்மினி, ஹிந்தி படத்தில் நடித்த போது, நெருக்கமான இனிய தோழியானார், நர்கீஸ். அவர் எப்போது சென்னைக்கு வந்தாலும், பத்மினி வீட்டில் தான் தங்குவார். மணிக்கணக்கில் பேசி மகிழ்வர்.சபீதா ஜோசப்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !