உள்ளூர் செய்திகள்

விவாகரத்து!

வாசலையே பார்த்தபடி நின்றிருந்தாள் ஜானகி. வெளியே வந்த தங்கம், மருமகளைப் பார்த்து,''என்ன ஜானகி... யாரை எதிர்பாத்து காத்திட்டிருக்கே?'' என்று கேட்டாள்.''இன்னைக்கு வெள்ளிக்கிழமை இல்லயா... என் பேரன, உங்க பேரன் கதிர் கூட்டிட்டு வருவான்ல்ல... அதான் பாக்கிறேன்,'' என்றாள்.''ஓ... உன் பேரன் வர்ற நாளா... எனக்கு மறந்துடுச்சு. வயசாயிடுச்சுல்ல... அதான் வரவர எல்லாம் மறந்து போகுது,'' என்றவள், மெல்ல நடந்து ஹாலில் போடப்பட்டிருந்த சோபாவில் அமர்ந்தாள். வாசலில் கார் வந்து நிற்கும் ஓசை கேட்டது.மூன்று வயது பேரனை இடுப்பிலும், கையில் பார்சலுடன் வீட்டிற்குள் நுழைந்தாள் ஜானகி.''இதுல டாய்ஸ்... சாக்லெட் இருக்கு பாட்டி. டாடி வாங்கிக் கொடுத்தாரு,'' என்று கூறிய பேரனை ஆசையாக முத்தமிட்டாள் ஜானகி.''பெரிய பாட்டி...” என்று ஜானகியின் கையிலிருந்து நழுவி, தங்கத்திடம் ஓடி வந்தவனை, ''வாடா என் குட்டி பேரா...'' என்று கட்டித் தழுவினாள் தங்கம்.அலுவலகத்திலிருந்து களைத்துப் போய், வீட்டிற்குள் நுழைந்தார் ஜானகியின் கணவன்.''சிவராமா... உன் பேரன் வந்திருக்கான்; வீடே சந்தோஷமா இருக்கு,'' என்றாள் தங்கம்.''இனி ரெண்டு நாள் உன் பேரன் கதிர் முகத்தில மலர்ச்சியப் பாக்கலாம்மா... என்ன செய்யறது... எல்லாம் வாங்கி வந்த வரம். ஞாயிற்றுக்கிழமை மாலை, பிள்ளையக் கொண்டு போயி அவள் அம்மாகிட்டே விட்டுடுவான். அடுத்த வாரம் வரை, அவன் வரவுக்குக் காத்திருக்கணும்.''ஜாதகப் பொருத்தம், நாள் நட்சத்திரம் எல்லாம் பாத்து நல்லபடியா தான் கல்யாணம் செய்து வச்சோம். பெரியவங்கள கலந்துக்காம, இப்படி ரெண்டு பேரும் விவாகரத்து வாங்கி பிரிஞ்சுட்டாங்க. இப்ப இந்த மூணு வயசு பிள்ளைய ரெண்டு பேரும் பந்தாடறதப் பாத்தா மனசுக்கு வேதனையா இருக்கு,'' என்றார்.''என்னப்பா செய்யறது... அந்தக் காலத்தில பிள்ளைகள் பெத்தவங்கள மதிச்சு, அவங்க சொல் கேட்டு நடந்தாங்க. இப்ப இருக்கிற பிள்ளைங்க கிட்டே ஒரு வார்த்தை சொல்ல முடியலயே... நாலு வருஷ குடும்ப வாழ்க்கையில மனக்கசப்பு வந்து, பரஸ்பர விவாகரத்து வாங்கிட்டாங்க. என்னவோ போ. காலத்துக்கு ஏத்தபடி நாமளும் வாயை மூடிக்கிட்டு இருக்க வேண்டியதாப் போச்சு,'' என்றாள் தங்கம்.கதிரும், வனிதாவும், திருமணமான புதிதில், சந்தோஷமாகத்தான் இருந்தனர். அடுத்த ஆண்டே ஒரு ஆண் குழந்தை பிறந்தது. தனிக்குடித்தன வாழ்க்கையில், பிரியம் பலப்படும் என அவர்கள் நினைக்க, ஒருவருக்கொருவர் மோதல் தான் அதிகமாகியது.சிறுசிறு விஷயங்களுக்கெல்லாம் கோபித்துக் கொண்டு வனிதா பிறந்த வீடு செல்ல, கதிரும் பொறுமை இழக்க ஆரம்பித்தான்.சுபாவத்திலேயே சற்று ஆணவமாகப் பேசும் வனிதா, கணவன் தன்னை அடக்குவதாக நினைத்து அவன் சொல்லும் எல்லாவற்றுக்கும் எதிர்மறையாகப் பேச, பிரச்னை பெரிதாக, விலகுவது என்ற முடிவுக்கு வந்து இருவரும் பிரிந்தனர்.''மகள் வீட்டிற்கு வந்திருந்த தங்கத்திடம், அவள் மகள், ''அம்மா... நம்ப கதிர் கை நிறைய சம்பாதிக்கிறான். அவன் கல்யாணம் விவாகரத்தில் முடிஞ்சு போச்சு. அதுக்காக அவனுக்கு இனி வாழ்க்கையே இல்லேன்னு ஆயிடுமா... நல்ல பெண்ணாப் பாத்து கல்யாணம் செய்து வைப்போம்,'' என்றவள், ''அம்மா உனக்கு விஷயம் தெரியுமா... உன் பேரன் பெண்டாட்டி வனிதா, சேலத்துக்கு அவங்க மாமா வீட்டுக்கு வந்திருக்காளாம். உன் மாப்பிள்ள சொன்னாரு,'' என்றாள்.''நான் வனிதாவ பாத்துப் பேசணும், என்னை அவங்க மாமா வீட்டுக்கு அழைச்சுட்டுப் போறியா...'' என்று மகளிடம் கேட்டாள் தங்கம்.''உனக்கென்ன பைத்தியமா பிடிச்சுருக்கு... அவக்கிட்ட இனி உனக்கென்ன பேச்சு. பெரியவங்கன்னு மதிச்சு உன்கிட்ட ஒரு வார்த்தை கேட்டாளா... அவ இஷ்டத்துக்கு விவாகரத்து வாங்கிட்டுப் போனா. இனி அவளுக்கும், நமக்கும் என்ன சம்பந்தம். நீ ஏன் உன் மரியாதைய குறைச்சுக்கிட்டு அவளைப் போய் பாக்கணும்ன்னு நினைக்கிறே,'' என்றாள்.''எனக்கு அவளைப் பாத்து, நாலு கேள்வி கேட்டாதான் மனசு ஆறும். அதுக்கு இதுதான் சரியான சந்தர்ப்பம். தயவு செய்து என்னை அழைச்சிட்டுப் போ,'' என்றாள் தங்கம்.''பாட்டி... நீங்க என்கிட்டே என்ன கேட்கப் போறீங்கன்னு தெரியுது. என்னால, என் சுயத்தை இழந்து, உங்க பேரனுக்குக் கட்டுப்பட்டு அடிமை வாழ்வு வாழ முடியாது. கல்யாணமானாலே ஒரு பெண் கணவனுக்கு கட்டுப்பட்டவள்ன்னு நினைக்கிறாங்க. எங்க எதிர்பார்ப்பையெல்லாம் குறைச்சுக்கிட்டு அவங்களுக்கு ஏற்றாமாதிரி நாங்க வாழணும்ன்னு நினைக்கிறது தப்பு. அவருடைய திமிரான பேச்சு, அடக்கி ஆள நினைக்கிற ஆம்பிள்ளைத்தனம் இதெல்லாம் எனக்கு சுத்தமா பிடிக்கல. இஷ்டப்படி வாழற உரிமை எனக்கிருக்கு. என் சுதந்திரத்தை விட்டுக்கொடுத்து வாழ்ற அப்படி ஒரு வாழ்க்கை எனக்குத் தேவையில்லன்னு முடிவு செய்துதான் அதிலிருந்து வெளியே வந்துட்டேன்,'' என்றாள் வனிதா.''நாங்க அந்தக் கால மனுஷிங்க. நீ என்னென்னவோ சொல்ற. இதையெல்லாம் என்னால புரிஞ்சுக்க முடியாட்டியும் என் பேரன்கிட்டேயிருந்து நீ விலகி வந்தத வெற்றியா நினைக்கிறே. சுதந்திரமாக உணர்வதை என்னால புரிஞ்சுக்க முடியுது,'' என்றாள் தங்கம்.''ஆமாம் பாட்டி நிச்சயம் இது வெற்றிதான். கல்யாணங்கிற போர்வையில, என் மனசைக் கஷ்டப்படுத்தி, காலமெல்லாம் அவருக்கு ஏற்றவளாக என்னை மாத்திக்கிட்டு வாழறதுக்கு பதிலா, இப்ப நான் சுதந்திரமாக இருக்கேன். எனக்கு பிடிச்சத என்னால செய்ய முடியும். யாருக்காகவும் என்னை மாத்திக்கணும்ன்னு அவசியம் இப்ப எனக்கு இல்ல. என் மகனோடு என் நாட்கள் சந்தோஷமாகப் போகுது,'' என்றாள்.''சரி... உன் எதிர்காலத்தப் பற்றி யோசிச்சியா... இப்படியே கடைசி வரை இருக்கப் போறியா இல்ல இன்னொரு கல்யாண வாழ்க்கைய தேடிப்பியா?'' என்று கேட்டாள் தங்கம்.''இப்போதைக்கு அதைப் பத்தியெல்லாம் நினைச்சுப் பார்க்கல,''என்றாள் வனிதா.அவளை உற்றுப் பார்த்த தங்கம், ''அப்படியே நீ இன்னொரு கல்யாணம் செய்தாலும், அதுவும் உனக்கு தோல்வியில தான் முடியும். என்ன பாக்கிறே... உன் எதிர்பார்ப்புக்கு ஏத்த மாதிரி யாரும் கிடைக்க மாட்டாங்க. ஒரு ஆண் மகனை மனசார மனைவியாக ஏத்துக்கும் போது அவன் நிறை, குறைகளை சேர்த்துதான் ஏத்துக்கணும். அதுதான் இல்லற வாழ்க்கை. அந்தக் காலத்தில எங்களுக்குள் ஆண், பெண் சரிநிகர் சமானம் அப்படிங்கிற எண்ணமெல்லாம் இருந்ததில்ல.''சகலமும் அவர்தான்னு மனநிறைவோடு ஏத்துக்கிட்டோம். மனுஷனா பிறந்தா வேண்டாத குணங்கள், அடுத்தவருக்கு பிடிக்காத குணங்கள் இருக்கத்தான் செய்யும். கணவன் கிட்டே நமக்குப் பிடிக்காத குணங்கள் இருந்தாலும், அன்புங்கிற பாதையில் போகும்போது அதெல்லாம் கண்ணுக்கு தெரியாமல் மறைஞ்சிடும். ''நடந்து போற பாதையில சின்னச் சின்ன முட்கள் குத்தினால், அதை பெரிசுபடுத்தாம எடுத்து தூர எறிஞ்சுட்டு போற மாதிரி, சின்ன விஷயங்கள பெரிசுபடுத்தாம, 'இது அவர் சுபாவம்'ன்னு ஏத்துக்கிட்டு வாழப் பழகினோம்; அதனால, குடும்பங்க உடையாம இருந்துச்சு,'' என்று கூறிய தங்கத்தையே வெறித்துப் பார்த்தாள் வனிதா.''இப்ப நீ சொல்றியே... இந்த விவாகரத்து உனக்கு வெற்றி, சுதந்திரமாக இருக்குன்னு... அது தப்பு. இந்த விவாகரத்து ஒரு பெண்ணாக உனக்கு ஒரு தோல்வி. ஒரு ஆண்மகனை உன் அன்பால் கட்டி போட்டு வாழ தெரியாத உன் பெண்மைக்கு கிடைச்ச தோல்வி.''உன் பிள்ளைக்கு அப்பா, அம்மான்னு சேர்ந்து வாழ சந்தர்ப்பம் கொடுக்காத உன் தாய்மைக்கும் தோல்வி. எல்லாரையும் போல தாம்பத்யத்தை சந்தோஷமாக அனுபவிச்சு, வயசான காலத்தில் மகன், மருமகள், பேரன்னு கடந்த கால இனிய நினைவுகள மனசுக்குள் அசைபோட்டு வாழ்ந்துட்டு இருக்கேனே... அந்த சந்தர்ப்பம் உன் வாழ்க்கையில கிடைக்கப் போறதில்லன்னு தெரியும்போது, உனக்கு இந்த வாழ்க்கையே மிகப் பெரிய தோல்விதான்.''சரி நான் கிளம்பறேன்; என் மகன், என் பேரனுக்கு பொருத்தமான பெண்ணாக பாக்கிறதாக சொல்லியிருக்கான். இனியாவது அவனுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமையட்டும்,'' என்று கூறி நகர்ந்தவளின் கையைப் பற்றிய வனிதா, ''பாட்டி... நானும் உங்கள மாதிரி, என்னை மாத்திக்கிட்டு, என் கணவரோட நிறைகுறைகளை ஏற்று, அன்புங்கிற பாதையில் இணைஞ்சு வாழணும்னு ஆசைப்படறேன். அதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுப்பீங்களா?'' என்றாள் கண்கலங்க!வனிதாவை அன்புடன் அணைத்துக் கொண்டாள் தங்கம்.பரிமளா ராஜேந்திரன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !