உள்ளூர் செய்திகள்

அன்புடன் அந்தரங்கம்!

அன்பு சகோதரிக்கு —என் வயது, 56; என் கணவரின் வயது, 65. எங்களுக்கு மூன்று பெண், இரு ஆண் பிள்ளைகள். என் கணவர் பணியில் இருக்கும் போதே, என் மூன்று பெண்களுக்கும் திருமணம் முடித்து விட்டேன். அரசு பணியில் உள்ள என் பெரிய மகனுக்கு, அரசு வேலையில் உள்ள பெண்ணை திருமணம் செய்து வைத்தோம். அவளுக்கு அப்பா இல்லை; அம்மாவும், இரு தம்பிகளும் மட்டுமே! திருமணத்திற்கு முன், மிகவும் நல்லவளாகவே தெரிந்தாள்.திருமணத்திற்கு பின், காலை டிபன் முதல், மதிய சாப்பாடு வரை செய்வதுடன், அவளுக்கு தலைவாரி, பூ வைத்து வேலைக்கு அனுப்புவேன். நாங்கள் அனைவரும் அவளிடம் பாசமாகத்தான் இருந்தோம். ஆனாலும், திருமணம் ஆன, மூன்றாவது மாதம் தனிக்குடித்தனம் சென்று விட்டாள். எங்களிடம் பேசுவதோ, நல்லது, கெட்டது என்று எந்த நிகழ்ச்சிகளுக்கும் வருவதோ இல்லை. என் மகன் மட்டும் வந்து போகிறான். எட்டு வயதில் பெண் குழந்தை உள்ளது. அவளையும் எங்களுடன் சேர விட மாட்டாள்.என் மகன் சம்பளத்தில் தான், குடும்பச் செலவு செய்ய வேண்டும். அவளது சம்பளத்தில் நகை மற்றும் வீடு வாங்கி, அவள் பெயரில் பதிவு செய்துள்ளாள். வீட்டு வேலைகள் முதல், குழந்தைக்கு சாப்பாடு செய்து, குளிப்பாட்டி பள்ளிக்கு அனுப்புவது வரை, என் மகன் தான் செய்கிறான். அத்துடன், அவன் அலுவலகத்தில் வேலை செய்யும் பெண்களுடன் அவனை இணைத்து, தகாத வார்த்தைகளில் திட்டுவதுமில்லாமல், அசிங்கமான வார்த்தைகளில், 'மெசேஜ்' அனுப்புகிறாள்.அடிக்கடி, 'வீட்டை விட்டு வெளியே போய்விடு; நான் ஒரு இன்ஜினியரையோ, டாக்டரையோ திருமணம் செய்து கொள்கிறேன்...' என்று கூறுகிறாள். இவ்வளவையும் பொறுத்து, மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளான் என் மகன். அவன் திருப்பி ஏதாவது பேசினால், நடுத் தெருவிற்கு வந்து, சாமி வந்தவள் போல் மண்ணில் புரளுகிறாள். இதனால், அவளிடம் யாரும் எதுவும் கேட்க முடியவில்லை. இதையெல்லாம் நினைத்து, நாங்கள் மிகுந்த மன உளைச்சல் அடைந்துள்ளோம்.அன்பு சகோதரியே... என் மகனின் எதிர்கால வாழ்க்கையை நினைத்து புலம்பும் அபலைத் தாயான எனக்கு, இப்பிரச்னைக்கு நல்ல முடிவை சொல்லுங்கள்.— இப்படிக்கு,பெயர் சொல்ல விரும்பாத வாசகி.அன்பு சகோதரிக்கு —நீ, உன் மருமகள் மீது வாசித்த குற்றப்பத்திரிகையை முழுக்க படித்தேன். உன் மருமகளிடம் கேட்டால், அவள் உன்னைப் பற்றி குறை கூறுவாள். இருதரப்பு வாதங்களையும், தக்க சாட்சிகளுடனும், ஆதாரங்களுடனும் கேட்டால், ஒரு வேளை, நடுநிலையான தீர்ப்பை கூறலாம்.கல்யாணத்திற்கு முன், நல்லவளாக, தேவதையாக தென்பட்ட உன் மருமகள், திருமணத்திற்கு பின், மாறி விட்டாள் என்கிறாய். காதலிக்கும் போது, பெண்கள், காதலனுக்கு சாக்லேட் பேபி முகத்தை காட்டுவது போல, பெண் பார்க்கும் படலத்தில், மாப்பிள்ளை வீட்டாருக்கு, சின்ட்ரெல்லா முகத்தை காட்டி ஏமாற்றுகின்றனர் பெண்கள்.தற்காலத்து இளம் பெண்களில் சிலர், யாரிடமும் நன்றி பாராட்டுவதில்லை. 'எங்கு போனாய், எதனால் தாமதமாக வருகிறாய், மொபைல் போனில் யாரிடம் பேசினாய்...' என்பது போன்ற குறுக்கு கேள்விகளை கேட்கும் கணவனை, அவர்களுக்கு பிடிப்பதில்லை. நகை, பணம், கார் மற்றும் பிளாட் என இப்படி பல வேண்டும் அவர்களுக்கு! பெத்த தாய், ஆயா வேலையும், மாமியார், தத்து ஆயா வேலையும் பார்க்க வேண்டும். மொத்தத்தில், இவ்வகை பெண்கள், பெண்ணாதிக்கவாதிகள்; சுயநலவாதிகள்!உன் மருமகளின் அடாவடி செயல்களுக்கு, உன் மகன் ஒத்து போகும் போது, இடையில் நீ ஏன் கவலைப்படுகிறாய்? எட்டு வயதில் மகளை உடைய ஒரு பெண், டாக்டர் அல்லது இன்ஜினியரை மறுமணம் செய்து கொள்வேன் என, கணவனை மிரட்டுவது பாவ்லா!சொத்துகளை, ஆண்கள் தங்கள் பெயரில் வாங்கும் போது கருத்து கூறாத நாம், ஒரு பெண், தன் சம்பாத்தியத்தில், வீடு மற்றும் நகை வாங்கினால், குறை கூறுவது ஏன்?உனக்கு பிடிக்காத மருமகளை அசட்டை செய். அவளை பார்க்காதே, அவளை பற்றிய நல்லது, கெட்டதுகளை கேளாதே, அவளை பற்றி பேசாதே! கணவன் ஓய்வூதியத்தை வைத்து, சுதந்திரமாக, நிம்மதியாக வாழ்; உன் மகனோ, மருமகளோ அவரவர் வாழ்க்கையை அவர்களே வாழட்டும்.நல்லதும், கெட்டதும் கலந்தவர்கள் தான் மனிதர்கள். சமய சந்தர்ப்பங்களே ஒருவரை நல்லவர், கெட்டவராக மாற்றுகின்றன. உன் மருமகளிடம், பத்தில், ஆறு கெட்ட குணங்கள் இருந்தால், நான்கு நல்ல குணங்களும் இருக்கும்.உன் மருமகளைப் பற்றி, உன் கணவர், மகன்கள் - மகள்கள், உறவினர்கள், அண்டை அயலார் மற்றும் உடன் பணிபுரிவோர் என்ன கருத்து வைத்திருக்கின்றனர் என்பதை கேட்டறி. பெரும்பான்மையோரின் அபிப்ராயமே, உன் மருமகளின் மெய்யான சுயரூபம். மொத்தத்தில், கடவுளின் மீது பாரத்தை போட்டு அமைதிப்படு. எல்லாம் நல்லதே நடக்கும்!— என்றென்றும் தாய்மையுடன்சகுந்தலா கோபிநாத்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !