அன்புடன் அந்தரங்கம்!
அன்பு சகோதரிக்கு —நான், 55 வயது பெண்மணி. என் கணவர் இறந்து விட்டார். எனக்கு ஒரே மகன். கல்லுாரியில் படித்து, சொந்தமாக கம்ப்யூட்டர் சென்டர் வைத்துள்ளான். கல்லுாரியில் படிக்கும் போது, ஒரு பெண், என் மகனுடன் நட்புடன் பழகி வந்தாள். வீட்டுக்கும் அடிக்கடி வருவாள். ஏதாவது விசேஷ தினம் வந்தால், என் வீட்டுக்கு வந்து விடுவாள். அவளுக்கு அம்மா மட்டும் தான். திருமணமான ஒரு அக்கா, வெளிநாட்டில் இருக்கிறார்.ஒருமுறை அவளது பிறந்தநாளின் போது, 'ஏதாவது விலை உயர்ந்த பரிசு வாங்கி கொடுக்கலாம்...' என்றான், மகன். நானும் சம்மதித்து, அவளுக்கு வைரக்கல் மோதிரம் வாங்கி பரிசளித்து, பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடினோம். அவனது அம்மா ஒருமுறை போன் செய்து, அவளுக்கு மாப்பிள்ளை பார்ப்பதாக கூறினார். அதைக்கேட்ட என் மகன், 'அப்செட்' ஆனான். அவளை விரும்புவதாக கூறி, அழுதான். 'உன் காதலை அவளிடம் தைரியமாக கூறு; சம்மதித்தால், நான் திருமணம் செய்து வைக்கிறேன்...' என்றேன்.மகனும், அவளிடம் தன் விருப்பத்தை கூறியிருக்கிறான். அவளுக்கு, சிங்கப்பூரில் வசிக்கும் மாப்பிள்ளை பார்த்திருப்பதாகவும், அவரைத்தான் திருமணம் செய்துக் கொள்ள போவதாகவும் கூறியுள்ளாள். அதுமட்டுமல்லாமல், இவனது பிஸினசை குறை கூறி, 'வசதியாக வாழ நினைக்கும் எனக்கு, உன் வருமானம் போதாது...' என கூறி, கிண்டல் செய்துள்ளாள்.இதைக் கேட்டு மனம் வருந்திய மகன், பைத்தியம் பிடித்தவன் போலாகி விட்டான். எதிலும் பிடிப்பில்லாமல், விட்டத்தை பார்த்தபடி உள்ளான்.சுறுசுறுப்பாக ஓடியாடி, சந்தோஷமாக வேலை செய்தவனை, இந்நிலையில் பார்க்கவே, பெற்ற வயிறு எரிகிறது.'யாருக்கு என்ன கெடுதல் செய்தோம்... ஏன் இந்த நிலை...' என, மனம் அழுது புலம்புகிறது.எதுவும் புரியாமல் தவிக்கும் என் மகனை, பழைய நிலைக்கு மீட்டெடுக்க, நீங்கள் ஒரு நல்வழி கூறுவீர்கள் என, நம்புகிறேன்.— இப்படிக்கு,உங்கள் சகோதரி.அன்பு சகோதரிக்கு —சிறு வயது மகனுக்கு விளையாட பொம்மைகள் வாங்கி கொடுத்தாய், உடுத்த வண்ண வண்ண ஆடைகள் வாங்கி கொடுத்தாய், தின்று மகிழ ஐஸ்கிரீம்களும், தின்பண்டங்களும் வாங்கிக் கொடுத்தாய். இப்போது, வாலிப வயது மகனுக்கு, விரும்பிய பெண்ணை மண முடித்து வைக்க துடிக்கிறாய். ஒரு தாயுள்ளத்தை இன்னொரு தாயுள்ளம் புரிந்து கொள்ளாதா என்ன?ஆனால், உன் மகன் மண முடிக்க விரும்பும் பெண், உன் மகனுக்கு பொருத்தமானவள் அல்ல. வாழ்நாள் முழுக்க ஒவ்வாமையை ஏற்படுத்தக் கூடியவள். உன் மகனை, அவள் மணந்த பின், அவளது சுயரூபம் வெளிப்பட்டிருந்தால், உன் மகனின் திருமண வாழ்க்கை இடியாப்ப சிக்கலாகி இருக்கும். அவள், மனதை காதலிப்பவள் அல்ல, பணத்தை காதலிப்பவள். ஒரு பேராசைக்காரியால் அம்பானியின் மகனை திருமணம் செய்தாலும் கூட மகிழ்ச்சியாய் வாழ முடியாது.நீ மாபெரும் தவறு செய்கிறாய். விரும்பியவள் கிடைக்காத சோகத்தில் சுருண்டு கிடக்கும் மகனுடன் சேர்ந்து, நீயும் புலம்புகிறாய். சுயபச்சாதாபம் என்னும் சிலந்தி வலையில் சிக்கி இருக்கும் மகனை, பிரம்மபிரயத்தனம் செய்து, அதனிலிருந்து மீட்க வேண்டும். சித்த மருந்துகளை ஒரு மண்டலம் நோயாளிக்கு புகட்டுவது போல, அறிவுரைகளையும், ஆலோசனைகளையும் மகனுக்கு தொடர்ந்து புகட்ட வேண்டும்.'மகனே... இவளை நீ வலுக்கட்டாயப்படுத்தி மணந்து கொண்டால், உன் வாழ்க்கை போர்க்களம் ஆகிவிடும். உன்னை விட வசதியான ஆணுடன் அவள் திருமண பந்தம் மீறிய உறவு வைத்துக்கொள்ள வாய்ப்பு உள்ளது. மனைவியின் பேராசைகளை நிறைவேற்ற, நீ தவறான வழிகளில் சம்பாதிக்க முனைவாய். அது, உன் எதிர்காலத்தை சூனியமாக்கி விடும். ஒரு குறிப்பிட்ட டிசைன் சட்டை கிடைக்காவிட்டால், வேறொரு டிசைன் சட்டை வாங்கி, அணிகிறோம். நாம் ஆர்டர் பண்ணிய உணவு தீர்ந்து விட்டால், வேறொரு உணவை ஆர்டர் பண்ணி சாப்பிடுகிறோம். ஒரு கோர்ஸ் கிடைக்காவிட்டால், வேறொரு கோர்ஸ் சேர்ந்து படிக்கிறோம். விரும்பிய பெண் கிடைக்காவிட்டால், கிடைத்த பெண்ணை மணந்து, சிறப்பான வாழ்வு வாழ்வதே புத்திசாலித்தனம். 'கம்ப்யூட்டர் சென்டரை ஒழுங்காக கவனிக்காமல், நீ பைத்தியக்காரனாய் கிடந்தால், உன் சமூக அந்தஸ்து இன்னும் சரியும். எந்த கம்ப்யூட்டர் சென்டர் வருமானத்தை, உன் காதலி கிண்டல் செய்தாளோ, அந்த வருமானம் அதலபாதாளத்திற்கு சரியும். சில பல மாதங்களில் சென்டரை நீ மூட வேண்டி வரும். குடும்ப செலவுக்கு பணம் இல்லாமல், நீயும், நானும் நடுத்தெருவில் நிற்போம். இது தேவையா மகனே?'அச்சடித்த காகிதமும், மஞ்சள் உலோகங்களும், பல்லாயிரம் சதுர அடி பூமியும் எல்லா சந்தோஷங்களையும் பரிசளித்து விடாது என்பதை உன் ஆக்கப்பூர்வமான வாழ்க்கை மூலம், உன்னை விட்டு போனவளுக்கு உணர்த்து. வியர்வையில் நனையாத பணம் இனிக்காது மகனே. விளையாட பொம்மை கிடைக்கவில்லை என, அழுது புரளாதே. வாழ்க்கையின் சித்தாந்தங்களையும், தத்துவார்த்தங்களையும் உணர்ந்து, கிட்டாதாயின் வெட்டென மற மகனே...' என, அறிவுரை ஊட்டு.இது உன் மகனுக்கு:இடையில் வந்தவள், இடையில் போனாள். கர்ப்பத்தில் சுமந்தவள் உதிரத்தை தாய்பாலாய் புகட்டிய தாயை பராமரிக்கவாவது, அவளை மகிழ்ச்சி படுத்தவாவது எழுந்து நில் மகனே. இரும்பு கதவை மூடிய இறைவன், தங்க கதவை திறந்து வைப்பான். சந்திர கிரகணத்திலிருந்து விடுபட்டு, அம்மா பார்த்து வைக்கும் பெண்ணை மணந்து, அம்மா கொஞ்ச, ஒரு பேரன் அல்லது பேத்தியை பெற்றுக் கொடு மன்னவனே!— என்றென்றும் தாய்மையுடன் சகுந்தலா கோபிநாத்.