உள்ளூர் செய்திகள்

அன்புடன் அந்தரங்கம்!

அன்புள்ள அம்மாவுக்கு —என் வயது, 28. படிப்பு, எம்.ஏ., மெல்லிய உடல்வாகு கொண்டவள். மாநிறம், அழகி என்று சொல்ல முடியாவிட்டாலும், பார்க்கும்படி இருப்பேன். சோடா புட்டி கண்ணாடி வேறு போட்டிருப்பேன்.தோழியர் என்று யாரும் இல்லை. படிப்பில் கெட்டிக்காரியாக இருப்பேன். பாட சம்பந்தமான குறிப்புகளை, 'காப்பி' அடிக்க மட்டுமே, என்னுடன் பேசுவர், சக மாணவியர்.ஆண் - பெண் என, இரு பிரிவினரும் இணைந்து படிக்கும் கல்லுாரியில் தான் படித்தேன். வகுப்பு தோழியர் சக மாணவர்களுடன் சகஜமாக பேசி, பழகுவதை பார்க்கும் போது, ஏக்கமாக இருக்கும். இந்நிலையில், மற்றொரு பாட பிரிவில் படிக்கும் மாணவன் ஒருவன், என்னுடன் பேச ஆரம்பித்தான். படிப்பு, குடும்பம் பற்றி எல்லாம் அக்கறையாக விசாரிப்பான். பாடத்திலும் சந்தேகம் ஏற்பட்டால், தீர்த்து வைப்பான். பல விஷயங்களை பற்றி பேசுவான்.வீடு, கல்லுாரி, பாடப்புத்தகம் என, குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டிய எனக்கு, வெளி உலகத்தை அறிமுகப்படுத்தியவன், அவன் தான்.மேற்கொண்டு என்ன படிக்க வேண்டும்; எந்த துறையில் வேலைவாய்ப்பு அதிகம் உள்ளது; போட்டி நிறைந்த உலகில், எந்த மாதிரியான தகுதிகளை வளர்த்துக் கொள்வது; எவ்வாறு திறமைகளை மேம்படுத்துவது போன்ற பல விஷயங்களை சொல்லி சொல்லி, எனக்குள் இருந்த தாழ்வு மனப்பான்மையை போக்கினான்.பசுமை நிறைந்த கல்லுாரி காலம் முடிவுக்கு வரும் நாளும் வந்தது. மொபைல் எண்ணை பரிமாறியபடி, பிரியா விடை பெற்றோம்.இன்று அவன் வழிகாட்டலில், போட்டி தேர்வுகள் எழுதி, மத்திய அரசின் கீழ் இயங்கும் நிறுவனம் ஒன்றில், பொறுப்பான பதவியில் உள்ளேன். அவன் கொடுத்த மொபைல் எண்ணுக்கு தொடர்பு கொண்டால், வேறு யாரோ எடுக்கின்றனர்.அவன் எங்கிருக்கிறான், எவ்வாறு சந்திப்பது என, புரியவில்லை. நாங்கள் படித்த கல்லுாரியில், அவன் படித்த டிபார்ட்மென்ட்டுக்கு சென்று விசாரிக்க முற்பட்டேன். அவர்கள் ஒரு முகவரியை கொடுக்க, அங்கும் சென்று பார்த்து விட்டேன். வடமாநிலம் ஏதோ ஒன்றுக்கு, குடும்பத்துடன் சென்று விட்டதாக அங்கு இருப்போர் கூறினர்.என் வாழ்க்கையில் நம்பிக்கை ஒளி ஏற்படுத்தி, என்னை ஒரு உன்னத நிலைக்கு கொண்டு வந்த அவனை சந்திக்க விரும்புகிறேன்; ஆனால், எப்படி என்று தெரியவில்லை. வலைதளங்கள் எதிலாவது அகப்படுவானா என்று தேடியும் பார்த்து விட்டேன். ஹூம்... பயனில்லை.அவனுக்காக என் திருமணத்தையும் தள்ளி போட்டு வருகிறேன். அவன், என்னை நல்ல தோழியாக நினைக்கவில்லையா... என்னுடன் பழகியதெல்லாம் பச்சாதாபத்தில் தானா... மன உளைச்சலில் உள்ளேன். தக்க ஆலோசனை தாருங்கள் அம்மா!— இப்படிக்கு,உங்கள் மகள்.அன்பு மகளுக்கு —உன்னிடம் பழகிய நண்பன், தலைமை பண்பு உடையவன். பிறருக்கு ஆலோசனை வழங்குவதில் ஆர்வமுள்ளவன். குறிப்பாக, பெண் தோழியரை ஏற்படுத்திக் கொள்வதில் பெரியதொரு ஈடுபாடு கொண்டவன். கிரிஜாவிடமும் சரி, வனஜாவிடமும் சரி சமமான அக்கறை தான் காட்டுவான். அவன் இருக்கும் இடத்தில் இருப்பவருடன் நட்பாக பழகுவான். துாரத்தே விலகிப் போனால், பழையவர்களை மறந்து, புதியவர்களுடன் நட்பு பாராட்டுவான். உன்னுடன் அவன் நட்பாய் பழகினானே தவிர, 'உன்னை காதலிக்கிறேன்' என வாயால் கூறினானா அல்லது உடல் மொழியால் உணர்த்தினானா?கரையோரம் வந்து விளையாடிப் போன டால்பினை, கடலுக்குள் தேடி கைகுலுக்க முடியுமா... குண்டூசி தயாரிக்கும் தொழிற்சாலையில், காணாமல் போன ஒரு குண்டூசியை கண்டுபிடிக்க முடியுமா... மழைக் காலத்தில் பூத்த வானவில்லை, கோடை காலத்தில் தேடி அலைதல் முறையா...அவனை எதற்கு தேடுகிறாய்... தேடியவன் கிடைத்து விட்டாலும், என்ன பெரிய அற்புதம் நடந்து விடப் போகிறது... 'யார் நீங்கள்? உங்களை, எனக்கு ஞாபகமில்லையே... (பழையவைகளை நினைவூட்டிய பின்) ஓ... நீங்களா... என்னை கண்டுபிடிக்க ஏன் இத்தனை சிரமப்பட்டீர்கள்... என்னுடைய ஆலோசனைகளை சிரமேற்கொண்டு நிறைவேற்றி, நல்ல பணியில் இருக்கிறீர்கள். மகிழ்ச்சி! எனக்கு திருமணம் ஆகிவிட்டது. என் மனைவியும் பணிபுரிகிறாள். மூன்று வயதில் மகனும், எட்டு மாத குழந்தையாய் மகளும் உள்ளனர். பத்திரமாக ஊருக்கு கிளம்புங்கள்...' என்பான். பிரம்மபிரயத்தனம் பண்ணி அவனை கண்டுபிடித்து, அவனிடம் அவமானப்படப் போகிறாயா?அவன், உன்னை நல்ல தோழியாக பார்க்கவில்லை. நட்பு வட்டத்தில் இருக்கும் ஒருத்தியாக நினைத்தே பழகியுள்ளான். உன்னிடம், அவனுக்கு பச்சாதாபம் ஏதுமில்லை; வெறும் ஆர்வம் தான்.சினிமா பார்த்து, மனதிற்குள் வீண் கற்பனைகள் வளர்த்துள்ளாய். ஏழெட்டு மணிநேர ரயில் பயணத்தில் ஒரே பெட்டியில் பயணிக்கும் இருவர், நட்பாய் பழகுவர், உணவு பரிமாறி கொள்வர். பெர்த்துகளை விட்டுக் கொடுப்பர், கைபேசி எண்களை தந்து கொள்வர். ரயில் பெட்டியிலிருந்து இறங்கியவுடன் இவர் யாரோ... அவர் யாரோ? கைபேசி எண்ணை வைத்து, முகவரி கண்டுபிடித்து, வீடு தேடி போய் கை குலுக்கினால், முகம் சுளிப்பர்.யதார்த்த உலகில் வாழப் பார் மகளே. முகநுால் நண்பர்களை நம்பாதே. 'வாட்ஸ் ஆப்' குறுஞ்செய்திகளில் மயங்காதே. டுவிட்டரில் கரைந்து போகாதே. இனி, நீ என்ன செய்ய வேண்டும் தெரியுமா?* நண்பனின் நினைவுகளுக்கு நிரந்தர குட்பை சொல்லி, உனக்கான வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழப் பார். பதவி உயர்வுக்காக மேலும் உழை. கல்வித்தகுதியை உயர்த்திக் கொள்.* உன் பங்குக்கு குறைந்தபட்சம், நுாறு ஆண் - பெண்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டி, 'கேரியர் கவுன்சிலிங்' கொடு.* உன் பெற்றோர் பார்த்து வைக்கும் வரனை திருமணம் செய்து, சிறந்த குடும்ப தலைவியாக விளங்கு.* இலக்கியங்களையும், சினிமாக்களையும், சின்னத்திரை சீரியல்களையும் பொழுதுபோக்காய் பார். வாழ்க்கையுடன் பொருத்தி பார்த்து அல்லலுறாதே.* ஆணுடனோ, பெண்ணுடனோ விழுந்து விழுந்து நட்பு பாராட்டி காயப் படாதே. ஆரோக்கியமான இடைவெளி விட்டு பழகு. நட்பு தொடர்ந்தால் சந்தோஷம், நட்பு பிரிந்தால் அதே சந்தோஷம்.* ஏட்டு கல்வியை விட, வாழ்க்கை கல்வியை முழு மூச்சாய் கற்றுக்கொள்.* வரப்போகும் கணவனிடம், நண்பனை தேடி அலைந்ததைப் பற்றி மூச்சு விடாதே.* மெய்யான காதல் எது என்பதை, திருமணத்திற்கு பின் உணர்வாய். அப்போது, நண்பனை தேடி அலைந்த நாட்களை கேலியும், கிண்டலுமாய் பார்ப்பாய், உணர்வாய்.— என்றென்றும் தாய்மையுடன் சகுந்தலா கோபிநாத்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !