உள்ளூர் செய்திகள்

அன்புடன் அந்தரங்கம்!

அன்புள்ள அம்மாவுக்கு —நான், 27 வயது பெண். எனக்கு இரு தங்கைகள். கல்லுாரியிலும், பள்ளியிலும் படிக்கின்றனர். அப்பா, குடி நோயாளி. அவருக்கு நிரந்தர வேலை ஏதும் இல்லை. நான், பள்ளி இறுதி வரையே படித்துள்ளேன். வீட்டிற்கு அருகில் உள்ள, ஏற்றுமதி நிறுவனம் ஒன்றில், சொற்ப சம்பளத்தில் வேலைக்கு செல்கிறேன். பல்பொருள் அங்காடி ஒன்றில் பணிபுரிகிறார், அம்மா.எங்கள் சம்பாத்தியத்தில் தான், குடும்பம் ஓடுகிறது. அப்பாவால், இனி எந்த பயனும் இல்லை என்று தெரிந்து விட்டது. நல்ல உடைகள் எடுக்க ஆசை வரும். இந்த பணம், தங்கைகள் படிப்பு செலவுக்கு உதவுமே என்று, அந்த ஆசையை மனதிற்குள்ளேயே புதைத்து விடுவேன்.என்னுடன் பணிபுரிவோர், 'இப்படியே எல்லா காலத்துக்கும் இருப்பாயா... உனக்கென்று கொஞ்சம் பணம் சேமித்து வைத்துக் கொள்... திருமணம் செய்து கொள்... தங்கைகள், படித்து முடித்ததும், அவரவர் வேலை, திருமணம் என்று, சென்று விடுவர். பிறகு உன்னை யார் பார்த்து கொள்வர்...' என்கின்றனர்.அம்மாவும், 'தங்கைகள் படித்துக் கொண்டே, பகுதி நேர வேலைக்கு செல்லட்டும்...' என்கிறார். ஆனால், எனக்கு தான் தங்கைகளை நடு ஆற்றில் விடுகிறோமோ என்று தயக்கமாக இருக்கிறது.நான் என்ன செய்ய வேண்டும் அம்மா.—இப்படிக்கு,உங்கள் மகள்.அன்பு மகளுக்கு —நாட்டு நாயை சிலர், விரும்பி வளர்ப்பர். ஆனால், அது, அன்னியர்களை கண்டோ, திருடர்களை கண்டோ குரைக்காது. ஒட்டுண்ணிகளால் பீடிக்கப்பட்டிருக்கும். சதா கால்களையும், உடம்பையும் நக்கிக் கொண்டிருக்கும். காற்று வரும் திசையில் முன்னங்கால்களில் முகம் புதைத்து, 24 மணி நேரமும் துாங்கியபடியே இருக்கும்.சாப்பாடு போட்டால் தின்று, மீண்டும் படுத்துக்கொள்ளும். சம்பாதித்து, மனைவி, மக்களை பாதுகாக்காமல், சதா குடித்து, வீட்டில் துாங்கும் குடிநோயாளி ஆண்களும், மேற்சொன்ன நாட்டு நாய் போன்றவர்களே.'குடி நோயாளி பெரியவரே... தினம் வேலைக்கு போகாமல் குடித்து, சதா படுத்துக் கிடக்க, இது மங்கம்மாள் சத்திரமல்ல... மனைவி, மூன்று மகள்கள் என, நான்கு பெண்கள் உழைக்க, நீர் ஆந்தை போல் சுணங்கி கிடக்கிறாயே... இது நியாயமா?'குடியை குறைத்து, தினம் வேலைக்கு போனால், இந்த வீட்டில் இருக்கலாம். இல்லையென்றால், 'டாஸ்மாக்' கடை வாசலிலேயே படுத்துக்கொள். இனி, இந்த வீட்டில் உனக்கு இடம் கிடையாது...' என, தயவு தாட்சண்யமின்றி, தகப்பனை அடித்து விரட்டு.உன் மூத்த தங்கைக்கு, வயது, 22 இருக்கக் கூடும். முதுகலை பட்டப்படிப்பு படிக்கிறாள் என நம்புகிறேன். இளைய தங்கைக்கு, வயது, 18, பிளஸ் 2 படிக்கிறாள் என, யூகிக்கிறேன்.அம்மாவின் யோசனை, சரி தான். தங்கைகள் படித்துக் கொண்டே பகுதிநேர பணிக்கு போகட்டும். ஆனால், அவர்கள் போகும் பணியிடம் பாதுகாப்பானதா என்பதை உறுதி செய். மூத்த தங்கை, முதுகலை பட்டம் முடித்து, முழு நேர பணிக்கு செல்லும்போதே, குடும்ப பாரத்தில் பாதியை அவளுக்கு மடைமாற்று.தரகர், பணியிட தோழியர் மற்றும் 'மேட்ரிமோனியல்' மூலமாகவோ, உனக்கு வரன் பார்க்க துவங்கு; தொலைதுார கல்வி இயக்ககம் மூலம், இளங்கலை பட்டப் படிப்பை படிக்க ஆரம்பி.சுயநலமில்லாத பொது நலம், அர்த்தமற்றது. 'அக்கா சம்பாதித்து, குடும்பத்தை காப்பாற்றுவாள், நாம் எவ்வித குடும்ப கவலையும் இல்லாது விட்டேத்தியாக இருப்போம்...' என, தங்கைகள் நினைத்து விடக்கூடாது. குடும்ப பொறுப்பை பகிர்ந்து கொடு; தங்கைகள், காதல் வலையில் விழுந்து, தவறான நபர்களை காதலித்து, வாழ்க்கையை சீர்குலைத்து கொள்ளாமல் இருக்க, தகுந்த அறிவுரை கூறு.மூத்த தங்கை, முதுகலை பட்டப்படிப்பை முடித்து, வேலைக்கு போகும் தருணத்தில், உன் திருமணம் நடக்க வேண்டும். உனக்கு வருகிற கணவன், உன் குடும்பத்திற்கு உதவுபவனாக இருத்தல் நல்லது. இல்லை என்றாலும் ஒன்றும் பாதகமில்லை.தொடர்ந்து, குடும்பத்தை, உன் பாதுகாப்பு வளையத்தில் வை. உறுதுணையாக இருந்து, தங்கைகளை வழி நடத்து. அம்மாவுக்கும், உனக்கும் ஆன தகவல் தொடர்பை வீரியப்படுத்து.இறக்கைகள் வளரும் வரை, கூட்டில் வைத்து பராமரித்தோம். இப்போது, இறக்கைகள் வளர்ந்து விட்டன. தங்கைகளை கூட்டை விட்டு வெளியே பறக்க விடு; இருவரும் வானில் சுதந்திரமாய் பறக்கட்டும். அவரவர் வாழ்க்கை அவரவருக்கு. வயிற்றுப் பையில் குட்டிகளை வைத்து, கங்காரு சுமப்பது போல, தங்கைகளை சுமக்காதே. உனக்கு இருக்கும் திறமை, தங்கைகளுக்கும் இருக்கும். எல்லாரும் வல்லவரே மகளே!— என்றென்றும் தாய்மையுடன், சகுந்தலா கோபிநாத்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !