அன்புடன் அந்தரங்கம்!
அன்பு சகோதரிக்கு —நான், 40 வயது, விவாகரத்தான பெண். எனக்கு, குழந்தைகள் இல்லை. பெற்றோர் வீட்டில் வசித்து வந்தேன். எனக்கு ஒரு அக்கா மற்றும் தம்பி உள்ளனர். அக்காவுக்கு திருமணமாகி, வேறு ஊரில் இருக்கிறாள்.என் கணவர், அடிக்கடி பெற்றோரிடம், 'இனிமேல், உங்கள் பெண்ணை அன்புடன் பார்த்துக் கொள்வேன்...' என்று கூறவே, அவருடன் அனுப்பி வைத்தனர்.ஆனால், அவர் வீட்டுக்கு சென்றதும், பழையபடி அடி, உதை, சந்தேக புத்தி என, கொடுமைப்படுத்த ஆரம்பித்தார். இதனால், மீண்டும் பெற்றோரிடமே வந்து விட்டேன்.இந்நிலையில், எனக்கு இரண்டாவது திருமணம் செய்து வைத்தனர். அவரும், விவாகரத்தானவர். ஒரு குழந்தை உள்ளது. அக்குழந்தை, அவரது முதல் மனைவியிடம் வளர்கிறது.இரண்டாவது கணவர் வீட்டுக்கு சென்ற பின் தான் தெரிந்தது, அவர் குடும்பத்தினர் கொடுமைக்காரர்கள் என்று. அவர்களது கொடுமைகளை தாங்க முடியாமல் தான், முதல் மனைவி, விவாகரத்து பெற்று சென்றுள்ளார்.திருமணமான சில நாளிலேயே, கணவரும், அவரது அம்மாவும் என்னை சித்திரவதை செய்ய ஆரம்பித்தனர். ஏதாவது ஒரு காரணம் சொல்லி, என்னை அடித்து, உதைப்பார், இரண்டாவது கணவர்.இதனால், வெறுத்து போய், பெற்றோர் வீட்டிற்கு வந்து விட்டேன். அவர்களும், என் நிலையை புரிந்து கொள்ளாமல், அவரிடமே சென்று வாழ அறிவுறுத்துகின்றனர்.கணவர் வீட்டாரிடம் சமாதானம் பேசி, மீண்டும் சேர்த்து வைக்க முயற்சித்தான், தம்பி. ஆனாலும், அவர்களது போக்கில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.இதனால், தற்சமயம், சகோதரி வீட்டில் தங்கியுள்ளேன். அங்கிருந்தே ஒரு நிறுவனத்தில் வேலைக்கு சென்று வருகிறேன்.திடீர் திடீரென்று என் கணவர், எனக்கு போன் செய்வார். எடுத்து பேசினால், சிறிது நேரத்திலேயே கோபமாக கத்த ஆரம்பித்து விடுவார்.தொடர்ந்து, சகோதரி வீட்டிலும் இருக்க முடியவில்லை. என்னை புரிந்து கொள்ளாத பெற்றோரிடமும் தங்க முடியாது. தம்பி தான், அவ்வப்போது ஆறுதலாக பேசுவான். அவனுக்கும் திருமணம் செய்ய, பெண் பார்த்து வருகின்றனர்.என்னால் பிரச்னை வரக்கூடாது என்று நினைக்கிறேன். குழப்பமாக உள்ளது. நல்ல தீர்வு சொல்வீர்கள் என்று நம்புகிறேன்.— இப்படிக்கு,உங்கள் சகோதரி.அன்பு சகோதரிக்கு —இந்தியாவில் விவாகரத்து சதவீதம், ௧க்கு கீழே தான் உள்ளது; அமெரிக்காவில், பாதிக்கு பாதி திருமணங்கள் விவாகரத்தில் முடிகின்றன. ஸ்பெயினில், 65 சதவீதம், பிரான்சில், 55 சதவீதம் விவாகரத்து நடக்கிறது. வாட்டிகன் நகரில் விவாகரத்தே கிடையாது.இந்தியாவில், 10 ஆண்டுகளுக்கு முன், ௧,௦௦௦ திருமணங்கள் நடந்தால், 7.4 விவாகரத்துகள் ஆயின. மற்ற நாடுகளை விட, இந்தியாவில் விவாகரத்துகள் குறைவாக இருந்தாலும், நாம் அதிகம் கவலைப்படுகிறோம். எந்த திருமணமும் முறிந்து விடக்கூடாது என்கிற கலாசார ரீதியான விருப்பமே, நம்மிடம் மேலோங்கி நிற்கிறது.முதல் திருமணம் தோற்று விட்டால், இரண்டாவது திருமணத்தில் ஜெயித்து விடலாம் என, அனைவரும் நம்புகிறோம். ஆனால், இரண்டாவது திருமணத்தில் தான், விவாகரத்துகள் மிகமிக அதிகம்.இனி, நீ என்ன செய்ய வேண்டும் தெரியுமா...* சாட்சிகாரன் காலில் விழுவதை விட, சண்டைக்காரன் காலில் விழுவது மேல் என்பர். உன் கணவனிடம் மனம் விட்டு பேசு. 'நானும் விவாகரத்து ஆனவள். நீங்களும் விவாகரத்து ஆனவர். நாமிருவரும் மீண்டும் திருமணம் செய்து கொண்டது, மீண்டும் விவாகரத்து பெறுவதற்கா... நீங்களும், உங்கள் அம்மாவும் என்னை ஏன் கண்ணியமாக நடத்தக் கூடாது. போனில் பேசும் நீங்கள் சாந்தமாக பேசக் கூடாதா...'நாம், 'ஈகோ' போர் செய்யாமல் குடும்பம் நடத்தினால், நன்றாக இருக்கும். நான், ஓரிரு படிகள் இறங்கி வருகிறேன். நீங்களும், ஓரிரு படிகள் இறங்கி வாருங்கள். மகிழ்ச்சியாக வாழலாம். சமாதானத்திற்கு நீங்கள் தயார் இல்லை என்றால், முழுக்க விலகி கொள்வோம். உங்கள் வழி உங்களுக்கு, என் வழி எனக்கு...' என, பேசி பார்* நீ என்ன படித்திருக்கிறாய் என்பதை, கடிதத்தில் குறிப்பிடவில்லை. குறைந்தபட்சம், பிளஸ் 2 முடித்திருப்பாய். பட்டப்படிப்பை தொலைதுார கல்வி இயக்ககம் மூலம் படி. சொந்தக்காலில் நிற்க பார்* பிரச்னைகளுடன் பெற்றோர் வீட்டிலும், சகோதரி வீட்டிலும் எவ்வளவு காலம் இருக்க முடியுமோ, அவ்வளவு காலம் இரு* தம்பிக்கு திருமணமாகும் வரை, அவனுடைய, 'கஸ்டடி'யில் இரு. திருமணத்திற்கு பின், அவன் உன்னை பராமரிக்கிறேன் என கூறினால், மறுதலிக்காதே. அவனுடைய இளம் மனைவிக்கு தொந்தரவாக இல்லாமல், உதவியாக இருக்கலாம், நீ* பெற்றோர், சகோதரி, தம்பி கூட்டாக புறக்கணித்தால், வேலை பார்த்துக் கொண்டே, பணிபுரியும் பெண்கள் விடுதியில் பாதுகாப்பாக தங்கு* மூன்றாவது திருமணம் உனக்கு சரிப்பட்டு வருமா என, தீர்க்கமாக யோசி. ஏற்கனவே இரண்டு முறை விளையாடி விக்கெட்டை பறி கொடுத்து விட்டாய்; மூன்றாவது முறை விளையாடினால், குறைந்தபட்சம், 10 ரன்களாவது அடிக்க முடியும் என்ற சூழ்நிலை இருந்தால் மட்டுமே, களத்தில் இறங்கு.— என்றென்றும் தாய்மையுடன் சகுந்தலா கோபிநாத்.