அன்புடன் அந்தரங்கம்!
அன்புள்ள சகோதரி -கிராமத்தில் வசிக்கும் விவசாயக் கூட்டுக் குடும்பத்தைச் சேர்ந்தவள். எனக்கு இரு மகன்கள். மூத்தவனுக்கு, 25 வயதாகிறது. இளையவனுக்கு, 23. இப்போது பிரச்னை, என் மூத்த மகன் தான்.நல்ல உயரம். அதற்கேற்ற உடல். நல்ல நிறம். பார்க்க, நடிகர் அப்பாஸ் மாதிரியே இருப்பான். பள்ளி, கல்லுாரியெல்லாம் நன்றாகத்தான் படித்தான். ஐ.டி.ஐ.,ல் இன்ஜினியரிங் டிப்ளமோ முடித்தான். அதுவரை எல்லாம் நன்றாகவே போனது. அதன் பின்னரே ஆரம்பித்தது, பிரச்னை.முதல் முதலாக ஒரு கம்பெனியில் வேலைக்கு போனான். ஒரே வாரம், சூப்பர்வைசரை கை நீட்டி அடித்து விட்டான். மறு நிமிடமே வேலையை விட்டு நீக்கி விட்டனர். வீட்டில் வந்து எதுவும் சொல்லவில்லை.மறுநாள் காலை வேலைக்கு போகாததால், ஏன் என்று கேட்டேன். ஓங்கி என் கன்னத்தில் ஒரு அறை விட்டான். அதிர்ந்து போனேன். கன்னம் தடித்தது. மண்டை வலி தாங்க முடியாததால், மூலையில் சுருண்டு படுத்துக் கிடந்தேன்.என்னை எழுப்பி, 'வந்து சாப்பாடு போடு...' என்றான்.'சித்தியோ, பெரியம்மாவோ போடுவாங்க, சாப்புடு. நீ அடிச்ச அடி, மண்டைய உடைக்குது...' என்றேன்.'நடிக்காத. வந்து சாப்பாடு போடு...' என்றான்.அவன் கண்கள் சிறுத்து, முகம் மாறுவதை கவனித்த நான், பயந்து எழுந்து போனேன். இப்படித்தான் ஆரம்பமாயிற்று.அதன்பின், நாலைந்து வேலைகள். எல்லா இடங்களிலும் சக ஊழியர் மற்றும் மேனேஜர்களை அடிப்பது என்று தொடரவே, வேலை செய்வதையே விட்டு வீட்டுக்குள் முடங்கத் துவங்கினான்.வீட்டிலும் எல்லாருடனும் சண்டை. வீட்டிலுள்ள பொருட்களை உடைப்பது, கண்ணாடி ஜன்னல்கள், 'பிரிஜ், டியூப் லைட்' மற்றும் 'டிவி'யை உடைப்பது என்றிருக்கிறான். வீட்டிலுள்ளவர்கள் கண்டித்தால், அவர்களுக்கும் அறை விழும். அப்போது, அவனது முகமும், கண்களும் ஓநாய் மாதிரி ஆகிறது. யாருக்கும் அடங்குவதில்லை. நான்கு பேர் சேர்ந்தால் கூட, அவனை கட்டுப்படுத்த முடிவதில்லை. அந்நேரங்களில் பேசக் கூடாத கெட்ட பேச்சுகள் எல்லாம் பேசுகிறான். வாரத்தில் ஒருநாள் இப்படி ஆகிறான். மற்ற சமயங்களில் அமைதியாக அப்படி நடந்து கொண்டது கூட நினைவற்றவனாக இருக்கிறான். மிகவும் சாதுவான, அவனா இப்படி என்று மனம் பதறுகிறது. அவனது எதிர்காலம் குறித்து கவலை வருகிறது. என்ன செய்வதென்று புரியவில்லை.நான்கு நாட்களானாலும் குளிப்பதில்லை. அவனாக நினைத்தால் மட்டுமே ஷேவிங்கும், குளியலும்.ஒரு இள வயது பையன் இப்படி இருக்கிறானே என்று பெத்த வயிறு பற்றி எரிகிறது. அவனை நல்வழிப்படுத்த ஏதாவது தீர்வு சொல்லுங்களேன்.— இப்படிக்கு,சகோதரி.அன்புள்ள சகோதரிக்கு -உங்கள் கவலையும், வருத்தமும் நியாயமானதே. ஒரு இள வயது பையன் இப்படி இருந்தால் பெற்ற வயிறு பற்றி எரியத்தான் செய்யும். உள்ளுக்குள் அக்கினி குண்டமாக கணகணக்கும். அந்த நெருப்பை அணைத்து, அக்கினியை தணிக்கத்தான் வழி தேட வேண்டுமே தவிர வேறு இல்லை. சற்று பின்னோக்கி போய் நன்றாக யோசித்துப்பார். மகனின் மூன்று வயது, ஐந்து வயதிற்கு செல். அப்போதிலிருந்தே அவனிடம் இந்த குணம் எட்டிப் பார்க்க துவங்கியிருக்கும். லேசான பிடிவாதமும், முரட்டு குணமும் இருந்திருக்கும்.அடம் பிடிப்பதும், தனக்கு வேண்டியதை சாதித்துக் கொள்வதும் குழந்தைகளின் வழக்கம் தானே என்று விட்டிருப்போம். ஆனால், மேலை நாட்டினர் அப்படி விட மாட்டார்கள். நாலைந்து வயதே என்றாலும், சற்றே மாறுபாடாக நடக்க தலைப்பட்டால், உடனே குழந்தைகள் மன நல மருத்துவர்களை தேடி ஓடுகின்றனர்.ஒரு காலத்தில், மன நல மருத்துவர்கள் என்றால் பயமும், தயக்கமும் இருந்தது. பைத்தியக்காரர்களுக்கு மட்டும் சிகிச்சை தருபவர்கள் என்ற எண்ணம் இருந்தது.இப்போது அப்படி இல்லை. மன நல மருத்துவத் துறை வெகுவாக வளர்ச்சி பெற்றிருக்கிறது. தைரியமாக போய் சிகிச்சை பெற துவங்கி இருக்கின்றனர். மன நலமும், குண நலமும், குடும்ப வளமும் பெற்று திரும்பி வருகின்றனர்.ஆகவே, உங்கள் மகனை மன நல மருத்துவரிடம் அழைத்துப் போங்கள். இப்போது எல்லா மருத்துவமனைகளிலும் மன நல மருத்துவர் இருக்கிறார். அதுமட்டுமன்றி, அதற்கென தனி மருத்துவமனைகளும் உண்டு. சென்னை ஸ்டான்லி, கீழ்பாக்கம் ஆகிய அரசு மருத்துவமனைகளிலும், வேலுார் சி.எம்.சி., பாகாயத்திலும் உண்டு.உங்கள் மகனை பாதித்திருப்பது மன நோய். இது, சிறு வயதிலிருந்தே தொடர்வதாகவும் இருக்கலாம்.அவன் குளிக்காமலும், உடைகளை மாற்றாமலும், உடல் சுத்தம் பற்றி அக்கறையின்றியும் இருப்பதை பார்த்தால், 'ஸ்கிசோ ப்ரினியா' என்ற வியாதி இருக்கக் கூடும் என்பது, என் அனுமானம்.நான், மன நல மருத்துவரில்லை; வெறும் புத்தக அறிவு கொண்டே அனுமானிக்கிறேன். நிறைய டாக்டர்கள் சினேகிதர்களாக இருப்பதால் கேட்டறிந்த கேள்வி ஞானம் மட்டுமே.அவருக்கு ஏற்படுகிற கோபம், அடி, உதை என, வன்முறையில் ஈடுபடுவதை கேட்கும் போது, 'பைபோலார் டிசார்டர்' ஆக இருக்கக் கூடுமோ என, சந்தேகம் வருகிறது. இரண்டும் சேர்ந்ததாகவும் இருக்கலாம்.எதுவானாலும் கவலையோ, பயமோ வேண்டாம். இப்போது, மருத்துவத் துறை பெரிதும் வளர்ந்து விரிவடைந்து விட்டது. நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், உங்கள் மகனை, மன நல மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, சிகிச்சை மேற்கொள்ள வேண்டியதுதான். — என்றென்றும் தாய்மையுடன், சகுந்தலா கோபிநாத்.