அன்புடன் அந்தரங்கம்!
அன்புள்ள சகோதரி -தாங்க முடியாத துயரத்தில் தவித்து, அனலில் இட்ட புழுவாகத் துடிக்கிறேன். ஒருமையில் அல்ல, பன்மையில். நானும், என் மனைவியும் தவிக்கிறோம்; துடிக்கிறோம் என்பது தான் சரி. எங்களுக்கு ஒரே மகன். பல ஆண்டுகளாகக் குழந்தை இன்றி தவமிருந்து, கோவில் கோவிலாகச் சுற்றி வேண்டிப் பெற்ற மகன். வாராது வந்த மாமணி. நடந்தால் பாதங்கள் நோகும் என்று தோள் மீதும், மார்பு மீதும் சுமந்து வளர்த்த மகன்.அவனது ஒவ்வொரு நியாயமான ஆசையையும் பார்த்துப் பார்த்து நிறைவேற்றினோம். அவன் ஆசைப்பட்ட படிப்பை பள்ளி, கல்லுாரி என்று சேர்த்தோம். அவன் நினைத்த இடத்தில், வேலையும் கிடைத்தது. அழகான, அமைதியான குடும்பம்.கல்யாணம் செய்யலாம் என்று பெண் பார்த்த போது, 'இன்னும் ஒரு ஆண்டு போகட்டுமே...' என்றான். இப்போதிலிருந்து பார்க்க ஆரம்பித்தால் தான் அமையும் என்று, அறிந்த, தெரிந்த, அத்தனைப் பேரிடமும், 'நல்ல பெண்ணாக இருந்தால் சொல்லுங்கள்...' என, சொல்லி வைத்திருந்தோம்.இந்நிலையில் தான், எங்கள் அருமை மகனை, 'கொரோனா' தாக்கியது. ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றவன், வீடு திரும்பவில்லை. அவனது உடலைக் கூடக் காண முடியவில்லை. சடலங்களோடு சடலமாக சவக்குழியில் தள்ளப்பட்ட செய்தி மட்டுமே வந்தது.அதிலிருந்து நடைபிணமாக வாழ்கிறோம்.சகோதரி... தாங்க முடியவில்லை, மீள முடியவில்லை; என்ன செய்வதென்று தெரியவில்லை. யாருக்காக, எதற்காக வாழவேண்டும் என்று, மனம் தளர்ந்து விட்டது.எங்களுக்கு ஒரு வழி காட்டுங்கள். மீளும் மார்க்கம் கூறுங்கள்.— இப்படிக்கு,உங்கள் உடன்பிறவா சகோதரன்.அன்பு சகோதரரே -உங்கள் பாரம் பெரிது, ஆற்ற முடியாதது, இறக்கி வைக்க இயலாதது; யாராலும் வாங்கிக் கொள்ள முடியாததும் கூட!'புத்திர சோகம் நிரந்தரம்...' என்றொரு வடமொழி வாக்கியம் உண்டு. எல்லா சோகத்திலும் பெரிய சோகமும் அதுதான். தாங்கள் மட்டுமல்ல, எத்தனையோ பேர் இதை அனுபவித்திருக்கின்றனர்.ராமன் காட்டுக்குப் போனதையே தாங்க முடியாது கதறினவர் தான், தசரத சக்கரவர்த்தி. அந்தப் பிரிவின் சோகம் தாங்காமல் உயிர் விட்டவர். அந்தப் பிரிவே தாங்க முடியாதவரானார் பாராளும் சக்ரவர்த்தி என்கிற போது, நாமெல்லாம் சாதாரணம் தான்.ஆனால், ஒரு யுத்தம் வருகிற போது, தன் ஒரே மகனைப் போருக்கு அனுப்பும் வீர மங்கையரெல்லாம் இருந்திருக்கின்றனர்; இன்னமும் இருக்கின்றனர்.தன் மகன், புற முதுகிட்டு ஓடாமல், மார்பில் அம்பு பட்டே இறந்திருக்கிறானா என்று தெரிந்து கொள்ள, போர்க்களத்தில் பிணங்களைப் புரட்டிப் பார்த்த அன்னையர்களின் கதைகளையெல்லாம் படித்திருக்கிறோம்.இந்த, 'கொரோனா' என்பதும், ஒரு வகைப் போர் தான். மனித இனத்தின் மீது தொடுக்கப்பட்ட போர். ஏழை, பணக்காரன் என்ற வித்தியாசம் இல்லாமல் வந்தது தான். ஏராளமான உயிர்கள் பறி போயின.அப்படி போன உயிர்களின் அத்தனை ஆத்மார்த்தமான உறவுகளும் இப்படிக் கதறினவர்கள் தான். ஆனால், கொஞ்சம் கொஞ்சமாக தாங்களும் தேறி, கூட இருந்தவர்களையும் தேற்றியபடி வாழப் பழகிக் கொண்டு விட்டனர்.போனவர்களுடன் அவர்களுக்குப் பிரியமானவர்களும் போவது என்றால், இந்த உலகமே மயான பூமியாகிவிடும். நமக்குப் போட்டிருக்கும் நாள் வரை, நாம் வாழ்ந்தாக வேண்டியவர்கள். நாம் வாழ்வது மட்டுமின்றி சேர்ந்தவர்களை வாழ வைக்க வேண்டிய கடமைப்பட்டவர்கள்.நீங்கள், ஆக்கப்பூர்வமாக யோசிக்க வேண்டும். யாருக்காவது பயனுள்ள வாழ்க்கை வாழ நினைக்க வேண்டும். இதே, 'கொரோனா'வில் பெற்றோரைப் பறி கொடுத்த குழந்தைகள் இருப்பர். அவர்களில் யாரையாவது தத்து எடுத்து, வாழ வைக்கலாமே. பெற்றோரை இழந்த பிஞ்சு இதயங்களுக்கு, நீங்களும், உங்கள் மனைவியும் பெற்றோர் ஆகலாமே! யோசியுங்கள்... உங்கள் வீட்டில் அழைத்து வந்து வைத்துக் கொள்ளாமல் போனாலும், அவர்களுக்கு ஆகும் செலவை ஏற்கலாம்; அவர்களைப் படிக்க வைக்கலாம்; அந்தப் பெண்ணுக்கோ, பையனுக்கோ கல்யாணம் செய்து கொடுக்கலாம். உங்கள் மகனுக்கு செய்ய நினைத்ததை அவர்களுக்குச் செய்து, ஆத்ம திருப்தி அடையலாம்.நாம் வாழ்வது மட்டுமல்ல வாழ்க்கை; மற்றவர்களை வாழ வைப்பதும் அர்த்தமுள்ள வாழ்க்கை தான்.இழந்ததையே நினைத்து, நீங்களும் வருந்தி, மற்றவர்களையும் வருத்தப்படுத்தாமல், நீங்களும் வாழ்ந்து, மற்றவர்களையும் வாழ வைக்கும் அர்த்தமுள்ள வாழ்க்கையாக மாற்றிக் கொள்ளலாம்.மாற்றிக் கொள்ளுங்கள் சகோதரரே... அன்பை விதைத்தால் அன்புவளரும். — என்றென்றும் பாசத்துடன், சகுந்தலா கோபிநாத்.