உள்ளூர் செய்திகள்

அன்புடன் அந்தரங்கம்!

அன்பு அம்மாவுக்கு — எனக்கு, 20 வயதில் திருமணமானது. சந்தேக புத்தி கொண்ட கணவருடன், 15 ஆண்டுகள் நான் வாழ்ந்த வாழ்வு ரணகளம். இனி, முடியவே முடியாது என்ற நிலை வந்து, நான்கு ஆண்டுகளுக்கு முன் அவரை பிரிந்து, ஆறு வயது மகனுடன், தனியாக வாடகை வீட்டில் வசிக்கிறேன்; சட்டப்படி விவாகரத்து பெறவில்லை.அரசு நிறுவனம் ஒன்றில், தற்காலிக பணியாளராக, குறைந்த சம்பளத்தில் வேலை செய்கிறேன். இதற்கிடையில், குடிப்பழக்கத்துக்கு அடிமையான கணவர், மஞ்சள் காமாலை வந்து இறந்து விட்டார்.தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்த கணவரது வங்கிக் கணக்கில், வாரிசு என்ற இடத்தில், அவரது அப்பாவின் பெயர் இருக்க, எனக்குத் தெரியாமல் பெரும் தொகையை எடுத்துக் கொண்டார், மாமனார்.கணவர் பணிபுரிந்த அலுவலகத்தில், எனக்கு கிடைக்க வேண்டிய வேலையையும், ஏதோ தில்லுமுல்லு செய்து, கிடைக்காமல் செய்து விட்டனர்.பொருளாதார கஷ்டத்தில் இருக்கும் எனக்கு, சட்ட உதவியை நாட வழியில்லை.என் பெற்றோரும் வசதியில்லாதவர்கள். என் தம்பியின் ஆதரவில் காலம் கடத்தி வருவதால், அவர்களாலும் எனக்கு உதவ இயலவில்லை. நான் என்ன செய்யட்டும் அம்மா.— இப்படிக்குஉங்கள் மகள்.அன்பு மகளுக்கு — 'அரசு பணிகளில் கருணை அடிப்படையில் வேலை பெறுவது, உரிமை இல்லை வெறும் சலுகையே-...' எனக் கூறியிருக்கிறது, உச்சநீதிமன்றம்.உன் கணவர் பணிபுரிந்தது, தனியார் நிறுவனத்தில். தனியார் நிறுவனங்களில் கருணை அடிப்படையிலான பணியமர்த்தல்கள் கட்டாயம் அல்ல. தனியார் நிறுவன தலைமை விரும்பினால் கருணை அடிப்படையிலான பணிகள் தரப்படலாம்.நீ என்ன படித்திருக்கிறாய் என்பதை, உன் கடிதத்தில் குறிப்பிடவில்லை. கணவரின் கல்வித்தகுதி, அவர் என்ன பதவியில் இருந்தார்? தனியார் நிறுவனம் உனக்கு கருணை அடிப்படையில் ஆன வேலை கொடுப்பதானால் என்ன பதவியை உனக்கு கொடுத்திருக்கக் கூடும்.கணவரின் மரண சான்றிதழ் மற்றும் உனக்கும், உன் மகனுக்குமான வாரிசு சான்றிதழ் வாங்கி விட்டாயா?கணவரின் வங்கிக்கணக்கில் அதிகபட்சம் இரண்டு லட்சம் ரூபாய் இருந்திருக்கும் என, யூகிக்கிறேன். தீர ஆராயாமல் வங்கி பணத்தை, மாமனாருக்கு கொடுத்தது வங்கியின் குற்றம்.சட்டரீதியான வாரிசுகள் இருவர் இருக்க, உன் மாமனார், வங்கி பணத்தை துாக்கி சென்றதும் குற்றம். வங்கியையும், மாமனாரையும் பிரதிவாதிகளாக போட்டு உரிமையியல் வழக்கை நீ போடலாம். வழக்கின் முடிவு தெரிய பல ஆண்டுகள் ஆகும்.நீ, ஊர் பெரியவர்களுடன் சேர்ந்து, மாமனாரை சந்தி. வங்கி பணத்தை மூன்று பங்குகளாக பிரித்து ஒரு பங்கை அவரும், மீதி இரு பங்குகளை நீயும், உன் மகனும் எடுத்து கொள்ள சமரசம் பேசு.சமரசத்துக்கு ஒத்துக்கொள்ளவே செய்வார், மாமனார். கிடைக்கும் இரண்டு பங்கு பணத்தை மகனின் பெயரில் நிரந்தர வைப்பு தொகையாக போடு.நீ எத்தனை ஆண்டுகளாக அரசு நிறுவனத்தில் தற்காலிக பணியாளராக பணிபுரிகிறாய்? தொலைதுார கல்வி இயக்ககத்தில் சேர்ந்து மேலும் படி.கணவனை இழந்த பெண்களுக்கு தற்காலிக பணியை நிரந்தரமாக்கும் சட்டரீதியான வாய்ப்பு இருக்கிறதா என ஆராய். துறையின் மேலதிகாரிக்கு உன் பணியை நிரந்தரம் பண்ண சொல்லி, விண்ணப்பம் கொடு.இப்போது உனக்கு வயது, 40. உன் மகனுக்கு வயது, 10. ஐந்தாம் வகுப்பு படிப்பான் என நினைக்கிறேன். 40 வயதில் நீ போராடத் தொடங்கினால், 50 வயதில் அரசின் நிரந்தரப் பணியில் இருப்பாய்.உன் மகன் இளநிலை பட்டபடிப்பு முடித்திருப்பான். எந்த பிரிவை எடுத்து அவன் படித்தாலும் அதில் டாக்டரேட் பண்ணட்டும். உன், 56 வயதில், மகன் டாக்டரேட் முடித்து, விரிவுரையாளர் பணிக்கு போவான். நல்ல வரனாய் பார்த்து அவனுக்கு திருமணம் செய்து வை. பேரன், பேத்தியுடன் கொஞ்சி விளையாடு.மனதிண்மை இருந்தால் அனைத்து பின்னடைவுகளையும் தகர்த்து, இமயத்தில் கொடி நடலாம். — என்றென்றும்தாய்மையுடன், சகுந்தலா கோபிநாத்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !