உள்ளூர் செய்திகள்

அன்புடன் அந்தரங்கம்!

அன்புள்ள அம்மாவுக்கு —நான், 35 வயதுள்ள ஆண். திருமணமாகி, இரு குழந்தைகள் உள்ளனர். தனியார் நிறுவனத்தில், பொறுப்பான பதவியில் உள்ளேன். மனைவி, இல்லத்தரசி.ஆரம்பத்தில், தம்பி, தங்கை, பெற்றோர், குழந்தைகள் என, கூட்டு குடும்பமாக தான் இருந்தோம்.என் அப்பா, ராணுவத்தில் பணிபுரிந்து, ஓய்வு பெற்றவர். புறநகரில் விசாலமான பெரிய வீடு கட்டி, அங்கு தான் வாழ்ந்தோம்.என் வீட்டினரை பார்த்தாலே, மனைவிக்கு பிடிப்பதில்லை. எதற்கெடுத்தாலும் என் தம்பி, தங்கைகளுடன் வாக்குவாதம் செய்வாள். என் பெற்றோரையும் மதிப்பதில்லை. மனைவியின் போக்கால், என் குடும்பத்தினர் கஷ்டப்பட நேர்ந்தது. எனவே, தனிக்குடித்தனம் வந்தேன். வார இறுதியில் ஒருநாள் மட்டும் சென்று பெற்றோரையும், உடன் பிறந்தவர்களையும் சந்தித்து பேசி வருவேன். குழந்தைகளை அழைத்துச் செல்ல மறுத்து விடுவாள்.அதேசமயம், தன் தம்பி, தங்கைகளை ஊரிலிருந்து வரவழைத்து, தன்னுடன் இப்போது தங்க வைத்துக் கொண்டிருக்கிறாள். அவர்களுடன் சகஜமாக நான் பேச வேண்டும், அவர்களுக்கு வேண்டியவைகளை செய்ய வேண்டும் என்று வற்புறுத்துகிறாள்.சமீபகாலமாக, என் பெற்றோரை சந்திக்க செல்ல விடுவதில்லை. ஏதாவது காரணம் சொல்லி நிறுத்தி விடுவாள்.இதனால், மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளேன். வேலையிலும் கவனம் செலுத்த முடியாமல் தவிக்கிறேன். என் மனைவியை திருத்த, நல்ல ஆலோசனை தாருங்கள், அம்மா.— இப்படிக்கு,உங்கள் மகன்.அன்பு மகனுக்கு —சில சுய நல பெண்களுக்கு நன்கு சம்பாதிக்கும் கணவன் மற்றும் வசதி படைத்த புகுந்த வீடு தேவை. ஆனால், கணவரின் பெற்றோர், நாத்தனார் மற்றும் கொழுந்தனார் தேவையில்லை. கணவர், வானத்திலிருந்து குதித்து, இவளுக்கு மட்டுமே சொந்தமானது போலொரு மாய கற்பனை. உன் மனைவியும் இவ்வகை தான்.இவ்வாறான பெண்களுக்கு, பிறந்த வீட்டு சொந்தங்கள் கொம்பு தேனாய் தித்திக்கும்; புகுந்த வீட்டு சொந்தங்கள், எட்டிக்காயாய் கசக்கும். இனி, நீ செய்ய வேண்டியவை... உன் மனைவியுடன் மனம் விட்டு பேசு.'அன்பு மனைவியே... இரு பக்க உறவுகளிடம் சுமூகமாக நடந்து கொள். என் வீட்டுக்காரர்களிடம், நீ எவ்வளவு கனிவாய் விருந்தோம்பலாய் நடந்து கொள்கிறாயோ அதைவிட பல மடங்கு, உன் வீட்டுக்காரர்களிடம் மகிழ்ச்சியாய் இதம் பதமாய் நடந்து கொள்வேன்.'என் வழி உறவுமுறைகளை எதிரிகளாய் பார்த்தால், நானும் அடாவடி பண்ண விரும்பவில்லை. இன்றையிலிருந்து நமக்குள் ஒரு எழுதப்படாத ஒப்பந்தம். இருபக்க உறவுகளை பரஸ்பரம் பேணி பாதுகாப்போம்...' என, பேசு* 'என் பெற்றோரிடம் நான் பேசுவதை தடுத்தால், விளைவுகள் விபரீதமாகும். எனக்கு உயிர் கொடுத்தவர்கள், சமுதாயத்தில் என்னை படித்தவனாக, அதிகாரம் உள்ளவனாக, மதிப்பிற்குரிய பிரஜையாக உலவ விட்டவர்கள்.'அவர்களிடம் பாராமுகம் காட்டி, நன்றி கொன்றவன் ஆகவேண்டுமா நான்? நீ, உன் பெற்றோரிடம் பேசுவது போல, நான், என் பெற்றோருடன் அளவளாவுவேன்...' என ஆணித்தரமாக கூறு* 'உன் சர்வாதிகாரம் தொடர்ந்தால் தனிக்குடித்தனத்தை தலை முழுகி, மீண்டும் கூட்டுக் குடும்பத்துக்குள் பிரவேசிப்பேன்...' என, மிரட்டு* 'என் சமாதான உடன்படிக்கையை ஒப்புக் கொள்ளா விட்டால், குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி, மனு செய்வேன். விவாகரத்துக்கு பின், என் பெற்றோர் மற்றும் பிறந்த வீட்டு உறவு முறைகளின் தொந்தரவு இல்லாமல் நீ சந்தோஷமாய் வாழலாம். எப்படி உன் வசதி?' என, குண்டை துாக்கிப் போடு* உன் மனைவியின் சுயநல வியாதியை, அதிரடி அதிர்ச்சி வைத்தியம் தான் குணமாக்கும். சகல ஹிட்லர் தனங்களையும் உதறி தள்ளி, முழுமையாய் உன்னிடம் சரணடைவாள், மனைவி* பிரச்னைகள் தீர்ந்த பின், நீயும், மனைவியும், இருபக்க சொந்தங்களுடன் குல தெய்வம் கோவிலுக்கு போய் வழிபட்டு வாருங்கள்.இனி எல்லாம் சுகம் சுகமே மகனே!— என்றென்றும் தாய்மையுடன், சகுந்தலா கோபிநாத்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !