உள்ளூர் செய்திகள்

உயிரோடு உறவாடு... 17

முன்கதை சுருக்கம்: நடிகர் சுஜீத் நிகழ்ச்சி சிறப்பாக முடிய, தமிழ்ச்செல்வி மற்றும் ரிஷியை அழைத்த, எம்.டி., பதவி உயர்வு மற்றும் நிரந்தர பணியாளராக மாற்றி உத்தரவிட்டார். சுகுமாரை, தமிழ்ச்செல்வி பார்க்க வந்தபோது, அவனை துாண்டி விட்டார், ஜனா-மிக உருக்கமாய், சுகுமாரை பரிதாபமாக பார்த்தபடியே, ''சாரி சுகுமார்... ரியலி ஐ ஆம் வெரி சாரி...'' என்றாள், தமிழ்.தொடர்ந்து பேச விருப்பம் இருந்தபோதிலும், ஜனா அருகில் இருப்பது அவளைத் தடுத்தது. தங்களுக்கு விபத்து ஏற்படுத்த, ஜனா செய்த சதியும் நினைவில் வந்து, கோபமும் உள்ளுக்குள் பொங்க ஆரம்பித்தது.''சரி சரி... எல்லாம் முடிஞ்சுச்சா, இல்ல இன்னும் இருக்கா?'' என்று, சற்று எரிச்சலுடன் கேட்டான், சுகுமார்.''முடிஞ்சுச்சு... பை த பை, இன்னிக்கு எனக்கும், ரிஷிக்கும் ஒரு விபத்து வேற... நாங்க இந்த நிகழ்ச்சி நடத்துறது பிடிக்காம, சினிமால வர்ற மாதிரியே, ஒரு அடியாள் கும்பலை ஏவி விட்டு, ஒருத்தர் எங்கள தடுக்கப் பார்த்தாரு. நானும், ரிஷியும் அதுல தப்பிச்சதே பெரும்பாடு,'' என்று, ஜனாவின் சதியையும் அவர் முன்னிலையிலேயே போட்டு உடைப்பது போல பேசினாள், தமிழ்.ஜனாவுக்கு தொண்டையில் விசுக்கென்று முள் ஏறியது போல் இருந்தது. அதேசமயம் சுகுமார், அவள் சொன்னதைக் கேட்டு அதிர்ச்சியடையாமல், ''ஆமா... நீ எங்க போனாலும் அவன் கூட தான் போவியா?'' என்று கேட்டான்.அந்த ஒரு கேள்வி, சுகுமாரின் அப்போதைய மனநிலையை அவளுக்கு புரிய வைத்தது.மெல்ல எழுந்து நழுவப் பார்த்தார், ஜனா. அதை கவனித்தவள், ''என்ன சார்... கிளம்பிட்டீங்க,'' என்று நழுவியவரை இழுத்துப் பிடித்தாள்.ஜனாவும், சற்று திணறலோடு நின்றார்.''நிகழ்ச்சி பத்தி எதுவும் சொல்லலியே சார்... உங்களுக்கு ஒண்ணு தெரியுமா, எம்.டி., கூப்பிட்டு பாராட்டினார். சும்மா வார்த்தைகளால மட்டுமில்ல, எங்க இரண்டு பேர் வேலையையும், நிரந்தரம் பண்ணிட்டார். அதுமட்டுமில்ல, எங்களுக்கு, 'புரொடக் ஷன் மேனேஜர்'ங்கிற பதவியும் கொடுக்கப் பட்டிருக்கு.''நாங்க, எம்.டி.,யை பார்த்துட்டு வெளியே வந்தவுடனேயே, இதை உங்களுக்கு தான் முதல்ல சொல்லணும்ன்னு நினைச்சேன், சொல்லிட்டேன். உங்களுக்கு இப்ப ரொம்ப, 'ஜில்'லுன்னு இருக்குமே?'' என்று அவள் கேட்ட விதத்தில், நிறைய உள்குத்துகள் இருந்தன.ஜனாவிடம், அதிர்ச்சி தன்னை இரண்டால் பெருக்கிக் கொண்டது. அதைக் கேட்ட சுகுமாருக்கும் கூட, அதிர்ச்சியாக இருந்தது.''என்ன நீ, என்னமோ நிரந்தரமா இங்கேயே குப்பை கொட்டப் போற மாதிரி பேசறே... என் கேள்விக்கு பதில் சொல்லாம இவர்கிட்ட பேசிக்கிட்டிருக்கே?'' என்று, அவள் முன் நேருக்கு நேராக வந்து நின்றான்.''நான், உங்களுக்கும் சேர்த்து தான் பேசிக்கிட்டிருக்கேன், சுகுமார்,'' என்று, அவள், அவனை சமாளித்த நேரத்தில், வேகமாக அங்கிருந்து விலகி போய் விட்டார், ஜனா.''நல்ல மனுஷன்... நீ கொடுக்க தவறின மரியாதையை அவர், எனக்கு கொடுத்தார். இனியாவது நீ என் கூட தடையில்லாம பேசணும்ன்னு தான் நாகரிகமா ஒதுங்கிப் போறாரு. நீ என்னடான்னா அவரை இழுத்து வெச்சு பேசறே? ஆமா, என் கேள்விக்கு நீ பதில் சொன்னியா?'' சுகுமார், ஜனாவை மிக நாகரிகமானவர் போல் புரிந்துகொண்டு பேசிய விதம், தமிழ்ச்செல்வியை கலவரப்படுத்தியது.''சுகுமார்... எங்களுக்கு நடந்த விபத்துக்கு காரணமே, இந்த மனுஷன் தான். அடியாட்களை ஏவி, எல்லாத்தையும் பண்ணிட்டு, இங்க உங்ககிட்ட, 'ஜென்டில் மேன்' மாதிரி நடிச்சுகிட்டிருக்கார். அது தெரியாம, நீங்க அவரை நல்ல மனுஷன்கிறீங்க,'' என்று, சற்று காட்டமாகவே பதில் சொன்னாள், தமிழ்ச்செல்வி.''என்ன புள்ள... என் வாயை அடைக்க, புதுசு புதுசா ஏதேதோ சொல்றே... உங்க ரெண்டு பேரை பத்தியும் அவர் எல்லாம் சொன்னாரு... அதை தெரிஞ்சுகிட்டு அந்தாளை நான் நம்பிடக் கூடாதுன்னு என்கிட்ட நீ தப்பா சொல்றியா?''''எங்கள பத்தி சொன்னாரா... அப்படி என்ன சொன்னார்?''''அது எதுக்கு இப்ப... நான் சட்டுன்னு கிளம்பி வந்ததும், ஒரு வகையில நல்லதா போச்சு. நீ என்னை எவ்வளவு மதிக்கிறேங்கறதும் நல்லா தெரிஞ்சு போச்சு.''''தயவுசெய்து இப்படியெல்லாம் புரியாம எதையாவது பேசாதீங்க, சுகுமார். நிகழ்ச்சி நல்லபடியா நடந்து முடியற, 'டென்ஷன்'ல இருந்தேன். என்னால அப்படி இப்படி நகர முடியல. அதனால தான் ரிஷியை அனுப்பி, சமாளிச்சேன். நிகழ்ச்சி முடிந்ததும் பேசிக்கலாம்ன்னு நினைச்சேன்; இப்ப பேசிக்கிட்டும் இருக்கேன். இது ஒரு தப்பா?''''நீ என்னை மதிக்காதது கூட, எனக்கு பெரிசா தெரியலை, தமிழ். அந்த ரிஷியை அனுப்பின பாரு, அதான் எனக்கு எரிச்சல தருது. அவன் பாட்டுக்கு, தோசையை தின்னுடான்னு விட்டுட்டு போயிட்டான். கடைசியில ஜனா சார் தான் தேடி வந்து, கம்பெனி கொடுத்தார். நேரா நிகழ்ச்சி நடக்கிற இடத்துக்கும் கூட்டிக்கிட்டு போய், சுஜித் சார்கிட்டயும் அறிமுகம் பண்ணி, மனுஷன் பட்டய கிளப்பிட்டாரு.''நீ என்னடான்னா அந்த நல்ல மனுஷன நான் நம்பிடக் கூடாதுன்னு, 'ஆக்சிடெண்ட்' பண்ணார், ஆட்டுகுட்டி பண்ணார்ன்னு அடிச்சு விடறே... என்னை என்ன கேணப்பயன்னு நினைச்சுட்டியா?''தமிழின் பேச்சை துளி கூட பொருட்படுத்தாமல் சுகுமார், தன் ஆத்திரத்தை முன் நிறுத்தி பேசியது, அவளை கொந்தளிக்கச் செய்தது. சில வினாடிகள் பேச்சே வரவில்லை. அப்போது, கச்சிதமாக ரிஷியும், தமிழை தேடி, அங்கு வந்தவன், ''ஏய் தமிழ்... நீ இங்க இருக்கியா? நான் கேபினுக்கெல்லாம் போய் தேடிட்டு வரேன்,'' என்றான்.தமிழிடம் ஒரு கனத்த மவுனம். சுகுமாரோ அவனை ஒரு மாதிரி பார்த்தவனாய், ''ஆமா... நீ இவளை விட மாட்டியா... எப்ப பார் இவ பின்னாடி தான் சுத்திகிட்டே இருப்பியா... நாங்க பேசிக்கிட்டிருக்கோம்ல... நான் இங்க வந்ததுக்கு பிறகு, இவளே இப்பதான் என் கூட பேசறா... அது கூட உனக்கு பிடிக்கலியா?'' என்று, முகத்தை ஒரு மாதிரி வைத்துக் கொண்டு கேட்டான்.சற்று பொறி கலங்கியது, ரிஷிக்கு.முதலில் அந்த ஒருமை... அடுத்து, 'இவளை நீ விடமாட்டியா?' என்று கேட்ட தொனி...பதிலுக்கு என்ன பேசுவதென்றே தெரியாமல் தமிழ்ச்செல்வியை பார்த்தவனை, அவளும் பரிதாபமாக பார்த்தாள். அதன்பின் சுதாரித்த ரிஷி, ''வெரி சாரி சார்... நான் வரேன்,'' என்று திரும்ப துவங்கினான்.அவன் விலகவும், சுகுமாரும் தமிழை ஏறிட, அவளிடம் கொந்தளிப்பு.''என்ன பார்க்கறே?''''இல்ல சுகுமார், நீங்க பேசறது எதுவுமே சரியில்ல. ரிஷி, என் வெல் விஷர்... அவரை அவன் இவன்னு பேச உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை.''''அடேங்கப்பா... அவன் இங்க ஒரு கேமராமேன் தானே... மாசம் என்ன, 20 ஆயிரம் ரூபா சம்பாதிப்பானா... நான், 2 லட்சத்துக்கு மேல சம்பாதிக்கிறவன். இவனை, நீ வா போன்னு பேசுவே... ஆனா, நான் பேசக் கூடாதா... ஆமா, நான் தெரியாம தான் கேட்கிறேன், உனக்கு நான் பெரியவனா, இல்ல அவனா?''''இப்படியெல்லாம் தர்மசங்கடமான கேள்வி கேட்டு என்னை சங்கடப்படுத்தாதீங்க... கொஞ்சம் நாகரிகமா பேசுங்க.''''நான் என்ன, இப்ப உன்ன வாடி போடின்னா பேசிகிட்டுருக்கேன்?''''உங்களுக்கு நான் சொல்ல வர்றதே புரியலியா... என் வாழ்க்கையில ரொம்ப சந்தோஷமான நாள், இந்த நாள். உங்களால அந்த சந்தோஷம் ரணமாயிடுமோன்னு இப்ப எனக்கு பயமா இருக்கு, சுகுமார்,'' மிகுந்த உணர்ச்சி பெருக்கோடு சொன்னவளை உற்று சில வினாடிகள் பார்த்தான், சுகுமார்.''சரி, நான் கிளம்பறேன்... உன் சந்தோஷத்தை நீ நல்லா கொண்டாடிக்கோ. நீயா எப்ப வந்து என்கிட்ட பேசறேன்னு பார்க்கறேன். வரேன்,'' என்று, சொன்ன வேகத்தில் விறுவிறுவென்று திரும்பி நடக்கத் துவங்கினான்.''நில்லுங்க சுகுமார்,'' என்கிற தமிழின் குரல் எடுபடவே இல்லை.பைக் வந்து நிற்கும் சத்தம் கேட்டு எட்டிப் பார்த்தாள், மாமி. 'ஹெல்மெட்'டை இடுப்பில் வைத்தபடி, மாடிப்படி ஏறத் துவங்கியிருந்தான், ரிஷி.''ரிஷி, என்னப்பா மாமியை பார்க்காமலே போறே?''''சாரி மாமி... கொஞ்சம் டென்ஷன்!''''அதான் பிரமாதமா பண்ணிட்டியே... இன்னும் என்ன, 'டென்ஷன்!' எனக்கு இங்க இதுவரை எத்தனை போன் தெரியுமா?''''அப்படியா மாமி.''''என்ன நீ... அப்படியான்னு சாதாரணமா கேட்கறே, சும்மா சொல்லக் கூடாது உன் ப்ரெண்ட... பிச்சு ஒதறிட்டா.''''அவகிட்ட சொல்றேன் மாமி.''''என்னாச்சு உனக்கு... சுரத்தே இல்லாம எல்லா கேள்விக்கும் பதில் சொல்றே... ஒருவேளை, விபத்து நடந்ததன் விளைவோ... இப்ப எப்படி இருக்கு கால்?''''சில சம்பவங்கள் முன்னால விபத்தெல்லாம் ஒண்ணுமேயில்ல. எனக்கு எப்பவுமே ஒரு ராசி உண்டு, மாமி. ஒரு நல்லது நடந்தா உடனேயே ஒரு கெட்டது நடந்து, அந்த நல்லதோட சந்தோஷத்தை விழுங்கிடும்.''''ரிஷி... அப்படி என்ன நடந்தது, யார் என்ன சொன்னா?''''ப்ளீஸ் மாமி... இப்ப நான் எதையுமே பேசற நிலைல இல்ல. பிறகு பேசறேன்,'' என்று சொல்லி, படி ஏற துவங்கினான், ரிஷி.வியப்புடன் பார்த்தபடியே நின்றாள், மாமி. மாடி அறைக்குள் நுழைந்தவன், ஒவ்வொன்றாய் கழற்றி எறியத் துவங்கினான். பதவி உயர்வு கடிதத்தையும் கட்டில் மேல் வீசி எறிந்தவன், லுங்கிக்கு மாறி, கடிதத்தை எடுத்து திறந்து, விரித்து படிக்கலானான்.சம்பளம், 60 ஆயிரம் சொச்சம். அது போக, பல சலுகைகள். உள்ளபடியே வானில் மிதக்க வேண்டிய நேரம். ஆனால், சுகுமார் என்கிற ஒருவனின் பேச்சு எல்லாவற்றையும் சுக்குநுாறாக்கி விட்டிருந்தது.கச்சிதமாய் தமிழ்ச்செல்வியிடமிருந்து அப்போது போன். அடிக்கட்டும் என்று விட்டு விட்டு, பாத்ரூம் பக்கம் போய் வந்தான். ஒருமுறை அடித்து ஓய்ந்த அது, இரண்டு மூன்று என்று தொடரவும், ஒரு கட்டத்தில் எடுத்து மெல்ல காதைக் கொடுத்தான்.மறுபுறத்தில், ''வெரி சாரி ரிஷி...'' என்று, ஆரம்பித்த தமிழ்ச்செல்வி, ''என்ன ரிஷி, நான் சாரி சொல்லியுமா உன் கோபம் அடங்கல?''''இல்ல தமிழ்... கோபமெல்லாம் இல்ல, வருத்தம். சாதாரண வருத்தமில்ல, ரொம்பவே வருத்தம். எப்படி இந்த மனுஷனோட நீ வாழப் போறேங்கிற வருத்தம். கரெக்ட்... இப்ப எனக்குள்ளேயும் அதான் தமிழ் கேள்வி. போகட்டும், சமாதானப்படுத்தினியா... இப்ப எங்க இருக்காரு... உன் கூடதானா?''''எந்த லேடீஸ் ஹாஸ்டல்ல உள்ள விடுவாங்க... நீயும் கேட்கறே, அவர் அப்பவே என்கிட்ட கோவிச்சுகிட்டு போயிட்டாரு.''''ஓ... கடைசி வரை சமாதானமாகலையா?''''ஜனா சார் நம்பள பத்தி ரொம்ப தப்பா ஏதோ சொல்லியிருக்காரு... அந்த மனுஷனை, 'ஜென்டில்மேனா'வும் சுகுமார் நினைக்கிறாரு.''''நினைச்சேன்... அந்த ஆளை இனியும் விட்டு வெச்சா நம்மள விட கோழை, இந்த உலகத்துல இருக்க முடியாது.''''ஐயோ, என்ன பண்ணப்போறே?''''பைக்கை ரிப்பேருக்கு விட்டிருந்த, 'மெக்கானிக் ஷெட்'டுக்கு போயிருந்தேன். அங்க இருந்த மெக்கானிக் மூலமா, நம் மேல மோத பார்த்த கார்க்காரன் பத்தி ஒரு, 'க்ளூ' கிடைச்சது. ஜார்ஜ்டவுன்ல முனிராஜ்ன்னு ஒரு ரவுடி இருக்கானாம்... அவன் கூட்டத்த சேர்ந்தவங்க தான், நம்பள கொல்ல முயற்சி செய்தவங்க. மெக்கானிக் நல்லா கவனிச்சிருக்காரு,'' என்றான்.''கூலிப்படையா?''''கரெக்ட்... அந்த ஆளை போய் நாளைக்கு பார்க்க போறேன்.''''என்ன சொல்றே ரிஷி, நீ?''''ஏன் பயப்படறே... நம்ம கையில மீடியா இருக்கு... தலைல மூளை இருக்கு... நெஞ்சத்துல நேர்மையும், தைரியமும் இருக்கு... எதுக்கு பயப்படறே?''''தப்ப ஒத்துக்குவாங்கன்னு நம்பறியா?''''சட்டையில, பட்டன் கேமராவோடல்ல போகப் போறேன். அதுக்கு பிறகு, என்ன நடக்குதுன்னு நீயும் பொறுமையா இருந்து கவனி. இப்போதைக்கு, 'ஆர்டர் லெட்டரை' பார்த்து சந்தோஷப்படு. சுகுமார் விஷயத்தை பின்னால பேசிக்கலாம். ஜனா ஒரு கிரிமினல்ன்னு நிரூபிச்சுட்டாலே எல்லா பிரச்னையும் சரியாயிடும்...''நான் இதை எனக்காக செய்யல தமிழ். உனக்காக, குறிப்பா, ஜனாவை, 'ஜென்டில் மேன்'னு சொன்ன சுகுமாருக்கு உண்மை தெரியணும்ங்கறதுக்காக,'' ரிஷியின் கருத்தை, தமிழாலும் மறுக்க முடியவில்லை.''அப்படின்னா நானும் உன் கூட வரேன்,'' என்றாள், சற்று தைரியமான குரலில்.— தொடரும்இந்திரா சவுந்தர்ராஜன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !