தீயவைகளை நீக்கும் தீர்த்தம்!
நர்மதை ஆற்றின் கரையில் இருக்கும் ஓர் ஊரில், வேத- வேதாதங்களில் கரை கண்ட ஒருவர் இருந்தார். அவர் பெயர், கர்மபந்து; மனைவி, தருமசீலை. இவர்களுக்கு, ஒரு மகன் இருந்தான். அவனுக்கு, கல்வி, கேள்விகளையும் கற்பித்தனர்; தகுந்த வயதில் திருமணமும் நடத்தினர்.நல்லவிதமாக இருந்த பிள்ளையின் மனது, நாளடைவில், தீயவைகளின் பக்கம் சாயத் துவங்கியது. களவு, கள் உண்ணல், பொய் சொல்லல், விலைமாதர் தொடர்பு என, பட்டியல் நீண்டது. மனம் வருந்திய பெற்றோர், அறிவுரை சொல்லி பார்த்தனர்; பலன் இல்லை.அவன் செயல்களால் வெறுப்புற்ற ஊரார், அவனுக்கு, 'தருமலோபன்' என, பெயரிட்டு, ஊரை விட்டே துரத்தினர். போன இடத்திலும், தருமலோபன், தன் தீய குணங்களை தொடர்ந்து செய்து வர, அங்கிருந்தும் துரத்தப்பட, ஒரு காட்டிற்குப் போனான். அங்கும், களவை தொடர்ந்ததோடு, காட்டுவாசி பெண்களிடம் முறைகேடாக நடக்க ஆரம்பித்தான்.காட்டுவாசிகள், தருமலோபனை வெட்டி, தீயில் போட்டனர். பேயாக ஆனான், தருமலோபன். ஏற்கனவே, அக்காட்டிலிருந்த நான்கு பேய்களோடு சேர்ந்து, ஐந்தாவது பேயாக அலைய துவங்கினான். அக்காலத்தில், திருக்கானப்பேர் எனும் திருத்தலத்தில் எழுந்தருளியிருக்கும், காளீசுரர் எனும் சிவபெருமானை தரிசிப்பதற்காக, அந்த காட்டின் வழியே வந்தார், கவுதம முனிவர். பேய்கள் படும் துன்பத்தை கண்டு மனம் இரங்கி, காரணம் கேட்டார்.ஐந்து பேய்களும், தாங்கள் பேயானதற்கான காரணத்தை கூறின. 'பயப்படாதீர்கள்... வாருங்கள் என்னுடன். உங்கள் துன்பத்தை, நான் போக்குகிறேன்...' என்றார், கவுதம முனிவர். அவரை பின் தொடர்ந்தன, பேய்கள். ஓர் இடம் வந்ததும், 'இது, சுகந்தவனம் எனும், திருக்கானப்பேர். பெரும் சிவஸ்தலம். அதோ இருக்கிறதே, அது தான், மிக புனிதமான ருத்திர தீர்த்தம். இதில், மார்கழி மாத பவுர்ணமியன்று, கங்கை முதலான அனைத்துத் தீர்த்தங்களும் வந்து சேர்ந்து, தங்கள் தீவினைகளை போக்கிக் கொள்கின்றன.'இத்தீர்த்தத்தில் நீராடி, பித்ருக்களுக்கான கடன்களை செய்தால், அவர்கள், நரகத்தில் இருந்து கரையேறுவர். இத்தீர்த்தத்தை நினைத்தாலும், தீவினைகள் நீங்கும்...' என்றார்.அன்று, மார்கழி பவுர்ணமியாக இருந்ததால், தீர்த்தத்தில் முதலில் இறங்கி நீராடினார், கவுதமர்; அதன்பின், தீர்த்தத்தை எடுத்து, பேய்களின் மீது தெளித்தார். கொடூர வடிவம் நீங்கி, மங்கல வடிவம் பெற்று, கயிலையை அடைந்தன, பேய்கள். பேய்களை நம்புகிறோமோ, இல்லையோ, தீய குணங்கள், பெருமளவில் நம்மை ஆட்டிப்படைக்கின்றன. கவுதமர் வாக்குப்படி, மார்கழி பவுர்ணமியன்று, ருத்திர தீர்த்தத்தை மனதால் நினைத்தால் போதும். தீவினைகள் நீங்கும்; நல்லவைகள் ஓங்கும்! பி. என். பரசுராமன்