சகலகலா வல்லி பானுமதி (3)
கேள்வியின் நாயகி!'காதலர்கள் என்றால், கண்டிப்பாக, 'டூயட்' பாடியே தீரவேண்டும்; அவர்களைக் கட்டிப் புரள விட்டு, சடுகுடு ஆடச் செய்ய வேண்டும் என்பதெல்லாம் கொஞ்சம், 'ஓவர்' என்று தான், நான் நினைக்கிறேன்.'காதல் என்பது, இதயத்தின் மெல்லிய உணர்வு... அதை ஏன் இப்படிக் காட்ட வேண்டும்? 'பொருத்தமான இடத்தைத் தேர்ந்தெடுத்து, அதற்குப் பொருந்தும் வகையில் இசையும் அமைத்து, பாட்டைப் போட்டால், ரசிகர்களால் நிச்சயம் வரவேற்கப்பட்டு, பாட்டும், 'ஹிட்' ஆகும்...' என்பார், இயக்குனர் பானுமதி. எதைச் செய்தாலும் திருத்தமாக, அழகாக, செய்வனத் திருந்த செய்ய வேண்டும் என்பதில், கறாராக இருப்பார். தன்னிடம் கதைச் சொல்ல வரும் இயக்குனர், கதாசிரியரிடம் நிறைய கேள்வி கேட்பார்; தெளிவான பதில் கிடைத்த பின்பே சம்மதிப்பார்.தெலுங்கில் அவர் நடித்திருந்த, நள தமயந்தி படத்தை, தமிழில் அதே பெயரில், மொழி மாற்றம் செய்து தரும் பொறுப்பை, அப்போது, வளர்ந்து வரும் கதை வசனகர்த்தாவிடம் தந்தனர். தெலுங்கில் தான் ஏற்ற வேடத்திற்கு, தமிழில் பேச வந்தார், பானுமதி. 'யார் வசனகர்த்தா...' என்று கேட்டார்.'இவர் தான்...' என்று அறிமுகம் செய்தனர். அவர், பார்க்க ஒல்லியாக, சின்னப் பையன் போல இருந்தார். இவரா என்ற சந்தேகம் வர, அவரை சோதித்து பார்க்க, கேள்விகளை கேட்டார். 'உங்க பேர் என்ன?''ஆரூர்தாஸ்...''உங்களுக்கு, 'டப்பிங் டெக்னிக்' தெரியுமா?''நல்லாத் தெரியும்...''எப்படி?' 'தஞ்சை ராமையாதாஸ்கிட்ட உதவியாளராக இருந்து, கத்துக் கிட்டேன்...' 'ஒங்களுக்கு இது எத்தனாவது படம்?' 'மூன்றாவது படம்...'இப்படி, கேள்வி மேல் கேட்டு, சோதித்து பார்த்த பின் தான், அவரை, வசனம் எழுத அனுமதித்தாராம்.'நம்மையே இவர் சோதிக்கிறாரே...' என்று எண்ணாமல், பொறுமையாக, தன் மொழி ஆளுமையை புரிய வைத்தார், ஆரூர்தாஸ். ஒரு மணிநேரத்துக்குள் முதல், 'ரீல்' முழுவதும், 'டப்பிங்' பேசி முடித்தார்.'இவ்வளவு நேரம் நான், 'டப்பிங்' பேசுனதே கிடையாது. உங்க வசனங்கள், ரொம்ப சரளமாகவும், 'லிப்'புக்கு சரியாக, 'ஸிங்க்' ஆகுற மாதிரியும் இருக்கு... அதோட, கேட்டவுடனே, 'டக்டக்'குன்னு, மாற்று வசனங்களையும் சொல்லிடுறீங்க... உங்களுடைய வசனங்களை கேட்க ரொம்ப சந்தோஷமாயிருக்கு...'- என்று, பாராட்டினார்.இது தான், பானுமதி.இதே வசனகர்த்தாவை, நீண்ட காலத்துக்குப் பிறகு, பூவும் பொட்டும் படத்தின் கதையை சொல்ல, பானுமதி வீட்டுக்கு அழைத்துப் போனார், தயாரிப்பாளர் வாசுமேனன். 'அம்மா... இவர் தான், ஆரூர்தாஸ்...' என்று தயாரிப்பாளர் சொல்ல, 'நான் நடித்த, நள தமயந்தி படத்துக்கு, நீங்கதானே வசனம் எழுதுனீங்க... 'இப்போ, நீங்க ரொம்ப பெரிய ஆளாயிட்டிங்க... எம்.ஜி.ஆர்., - சிவாஜி படங்களுக்கு வசனம் எழுதி, 'சக்சஸ்' பண்றீங்க... நீங்க வசனம் எழுதிய, பாசமலர் படத்தை, ரெண்டு முறை பார்த்து நானே கலங்கிட்டேன்...' என்று மெச்சினார். தயாரிப்பாளரிடம், 'கதையெல்லாம் ஒண்ணும் கேட்க வேண்டியதில்லே... எனக்கும், இவருக்கும், ஏற்கனவே நல்ல, 'அண்டர்ஸ்டேண்டிங்' இருக்கு... படப்பிடிப்பு தளத்துல அப்பப்போ கேட்டுக்குறேன். ஆல் த பெஸ்ட்...' என்று, மகிழ்ச்சியோடு அனுப்பி வைத்தார்.கதையே கேட்காமல், பானுமதி நடிக்க சம்மதித்ததைப் பார்த்து அசந்து போனார், தயாரிப்பாளர்.காரில் போகும்போது, 'தம்பி... சத்தியமா என்னால் நம்பவே முடியல... இப்படி நடக்கும்ன்னு நினைக்கவே இல்லை. 'அந்தம்மாவை ஏன் போட்டீங்க'ன்னு சொல்லி, நிறைய பேர் என்னை, 'டிஸ்கரேஜ்' பண்ணுனாங்க... நானும் ரொம்ப குழம்பித் தான் போயிருந்தேன்.'அந்தம்மா, உங்க மேல வைச்சிருக்கிற மரியாதையை பார்த்து, அசந்து போனேன். இப்படி சுலபமா முடியும்ன்னு தெரிஞ்சிருந்தால், உங்களையே இயக்குனராக்கி இருப்பேன்...' என்றார், தயாரிப்பாளர்.அடுத்தவர்களின் திறமையை மதிக்கத் தெரிந்தவர், பானுமதி. அதேசமயம், பிறர் சொல்வதற்கெல்லாம் தலையாட்ட மாட்டார். தன்னை யாரும் கட்டுப்படுத்துவதை அனுமதிக்க மாட்டார்; நிர்ப்பந்தத்துக்கு பணிய மாட்டார். பிடிக்கலேன்னா பிடிக்கல தான். இது தான் அவரது சுபாவம். அவரைப் புரிந்து கொண்டவர்களுக்கு, நல்ல பெண்மணி.பாட்டு போட்டி, நடன போட்டி, நடிப்பு போட்டி உண்டா... அதுவும், இரு நடிகையருக்கு... அப்படியொரு போட்டி, சவுகார்ஜானகி, பானுமதியிடையே நடந்தது. வென்றது யார்?தன் வீட்டில் மிக அழகாக கொலு வைப்பார், பானுமதி. அவரே, கொலு மேடையை அலங்காரம் செய்வார். இதில், அவருக்குப் பிடித்த பொம்மைகள் அதிகம் இருக்கும்.தம் வீட்டு கொலு விழாவுக்கு, ஏவி.எம்., எஸ்.எஸ்.வாசன் மற்றும் சின்னப்பா தேவர் குடும்பத்தார் அனைவருக்கும் அழைப்பு விடுப்பார். அவர்களும் பங்கேற்று சிறப்பிப்பர். பக்தி மணம் கமழும் பாடல்களை பாடி, உள்ளம் உருக வைப்பார், பானுமதி.— தொடரும்சபீதா ஜோசப்