சனிக்கு இங்கு வேலையில்லை!
சனி பகவானின் வாகனமான காகம், ஒரு ஊருக்குள் நுழைவதில்லை. அதனால், சனீஸ்வரர், தங்கள் ஊருக்குள் நுழைய மாட்டார் என, நம்புகின்றனர் ஆந்திர மாநிலம், கர்னுால் மாவட்டம், யாகந்தி கிராம மக்கள். இவ்வூரிலுள்ள, உமா மகேஸ்வரர் கோவிலில், வளரும் நந்தி இருப்பது, மற்றொரு விசேஷம்.சிவனை நேரில் காண, ஆசை கொண்டார், சித்தப்பா என்ற சிவ பக்தர். கடுமையாக தவமிருந்தார். அப்போது, ஒரு புலி வந்தது. அதைப் பார்த்து பரவசமடைந்தார். புலியின் வடிவில் வந்தது, சிவனே என நம்பியவர், 'நேனு சிவனே கண்டி...' (நான் சிவனைக் கண்டேன்) என, பரவசத்துடன் சத்தமிட்டார்.நேனு கண்டி என்ற பெயரே, யாகந்தி என, பிற்காலத்தில் அழைக்கப்பட்டது. இத்தலத்தின் பெருமையை உணர்ந்த விஜயநகர பேரரசர், ஹரிஹரபுக்கர், இங்கு, ஒரு கோவிலை எழுப்பினார். சிவனும், பார்வதியும் சேர்ந்திருக்கும் அர்த்தநாரீஸ்வர வடிவம், கருவறையில் உள்ளது.இக்கோவிலின் முக்கிய அம்சம், நந்தி. இது, 20 ஆண்டுகளுக்கு ஒருமுறை, 1.7 செ.மீ., வளர்கிறது. இந்த நந்தியின் அருகில் சில துாண்கள் இருந்தன. நந்தி வளர்ந்து கொண்டே வந்ததால், துாணில் இடித்து விடக்கூடாது என்பதற்காக, ஒரு துாண் அகற்றப்பட்டது. இந்த நந்தி வளர்வதை ஆய்வு செய்து, உறுதிப்படுத்தியுள்ளது, தொல்பொருள் துறை. நந்தி முன் உள்ள அறிவிப்பு பலகையில், 'இந்த நந்தியை, முற்காலத்தில், மக்கள் வலம் வந்து வணங்கினர். காலப்போக்கில் நந்தி வளர்ந்து விட்டதால், வலம் வரும் இடம் சுருங்கியது. சிரமப்பட்டே நந்தியை வலம் வந்தனர், மக்கள். இதன் காரணமாக, துாண் அகற்றி, இடம் தரப்பட்டுள்ளது...' என, குறிப்பிடப்பட்டுள்ளது.நந்தி செதுக்கப்பட்டுள்ள கல், வளரும் தன்மை உடையது என, தொல்பொருள் துறை தெரிவித்துள்ளது.வீர பிரம்மேந்திரர் எனும் முக்காலமும் உணர்ந்த ஞானி, இவ்வூரில் வசித்தார். 'கால ஞானம்' என்ற நுாலை எழுதியவர், 'உமா மகேஸ்வரர் கோவிலிலுள்ள நந்தியின் வளர்ச்சி என்று முழுமை அடைகிறதோ, அன்று, கலியுகம் முடியும்...' என, சொல்லியுள்ளார். இந்த ஊரில் தவமிருந்த ஒரு முனிவரின் உடமைகளை, காகங்கள் கொத்திச் சென்று எங்கேயோ கொண்டு போட்டன. அவற்றின் தொல்லை தாங்க முடியாமல் கோபமடைந்த முனிவர், 'இனி, இந்த ஊருக்குள் காகங்களே வரக்கூடாது...' என, சாபமிட்டார். அதிலிருந்து, இந்த ஊருக்குள் காகங்கள் வருவதில்லை.சனியின் வாகனம், காகம். எனவே, சனி பகவான், தங்கள் ஊர் பக்கம் தலை வைத்துக் கூட படுக்க மாட்டார் என்பதில், நம்பிக்கையுடன் உள்ளனர், இவ்வூர் மக்கள். சனி தோஷம் உள்ளவர்கள், இவ்வூருக்குள் சென்று, உமா மகேஸ்வரரை வணங்கி வந்தால், தோஷம் நீங்கும் எனவும் நம்புகின்றனர்.கர்னுாலில் இருந்து, 79 கி.மீ., துாரத்தில் (என்.எச்.40) பங்கனப்பள்ளி. இங்கிருந்து, பீப்புல்லி சாலையில், 14 கி.மீ., சென்றால், யாகந்தியை அடையலாம்.தி. செல்லப்பா