உள்ளூர் செய்திகள்

அவள் என்கிற அதிசயம்!

இந்த தினம் மட்டும் பிரமாதமாக அமைந்து விட்டால் போதும் என்று நினைத்துக் கொண்டான், தினகர்.அவன் அளிக்கப் போகும் முக்கியமான, 'பிரசண்ட்டேஷன்!' தெளிவாக, சுருக்கமாக ஏன் சுவையாகவும் அவன் விளக்க வேண்டும். வருபவன் பால் நியூமன், ஆஸ்திராலியாவின் மிகப் பெரிய வணிக முதலாளி. அவன் மனம் கவரும் வகையில், இந்த, 'பிரசண்டேஷன்' அமைந்து விட்டால் போதும்.கம்பெனிக்கு மிகப்பெரிய வாய்ப்பு கிடைக்கும். இந்தியாவின் அத்தனை முன்னணி நிறுவனங்களும் எதிர்பார்த்து காத்துக் கிடக்கின்றனர். பால் நியூமன் கடைக்கண் பார்வைக்காக, தவம் கிடக்கின்றனர், சி.இ.ஓ.,க்கள். எப்படியோ அவன், இவர்களுக்கு அருள் பாலித்து விட்டான்.அதுவும், சென்னைக் கிளைக்கு பொன்னான வாய்ப்பு. தாம்பாளத்தில் வைத்து தினகர் கையில் கொடுத்திருக்கின்றனர். வயதும், அனுபவமும் குறைவு தான். இருந்தாலும், இந்த, 10 ஆண்டுகளில் நிறுவனத்திற்கு அவன் அளித்த பங்களிப்பு மிக அருமையானது.வர்த்தக ரீதியில் எங்கோ உயரத்திற்குக் கொண்டு போனது. ஊழியர் பராமரிப்பு, மருத்துவம், சம்பள விகிதம் என்று அவன், சென்னைக் கிளையை சொர்க்கம் போல ஆக்கியதற்கு, தலைமை நிர்வாகம் கொடுத்திருக்கிற மிகப்பெரிய வாய்ப்பு இது.உணவு மேஜையை வேகமாக சுத்தம் செய்தபடி, ''தினா... ஒரு உதவி பண்ணுங்களேன், இன்ஷுயூரன்ஸ் கட்டறதுக்கு, இன்னிக்கு கடைசி நாள். 'ஆன்லைன்'ல பண்ண முடியலே. நீங்க போற வழியில இந்த வேலையை முடிச்சுடுங்க ப்ளீஸ்,'' என்றாள், திவ்யா.''என்ன சொல்ற, இன்னிக்கு எனக்கு ரொம்ப முக்கியமான வேலை இருக்கு. 10:00 மணிக்கு நான், தாஜ்ல இருக்கணும்; சாரி, திவ்யா,'' என்றான்.''என்ன தினகர் இப்படி சொன்னா எப்படி? எனக்கும் இன்னிக்கு, 'ஜட்ஜ்மென்ட் டே' மாதிரி தான். இண்டர்வியூ... எட்டு வருஷ உழைப்புக்கு இன்னிக்குதான் பலன் கிடைக்கப் போகுது.''''இல்ல திவ்யா... பொறுமையா சொல்றேன், இன்னிக்கு ரொம்ப முக்கியமான, 'பிரசண்ட்டேஷன்!' வெளிநாட்டு நிறுவனம், குளோபல் வர்த்தகம்... நான் சரியா துாங்கி மூணு நாளாச்சு தெரியுமா?''''தினமுமா உங்களுக்கு வீட்டு வேலை கொடுக்கறேன், நானே தானே எல்லாம் செய்றேன்... என் ஆபிஸ் வேலை மட்டும் கம்மியாவா இருக்கு? ப்ளீஸ் தினகர்... இந்த பிரீமியம் ரொம்ப முக்கியம், எனக்காக இதை மட்டும் பண்ணுங்க.''அவன் பொறுமையிழந்து, துண்டை எடுத்துக் கொண்டு அருகில் வந்து நின்றான்.''ஏன் திவ்யா, புரிஞ்சுக்காம பேசற. தெளிவாத்தானே சொல்றேன்... மிகப்பெரிய வாய்ப்பு இது, தப்பித் தவறி சின்ன சொதப்பல் ஏற்பட்டாலும், மொத்தமா கவுந்துடும். அப்புறம் என் நிலைமை மோசமாகும். கம்பெனியில இவ்வளவு நாள் கட்டிக் காப்பாத்தின மதிப்பு, மரியாதை எல்லாம் போயிடும். புரிஞ்சுக்கோ,'' என்றான்.அவள் முகம் மாறி, தயிர் பாத்திரத்தை வேகமாக வைத்தாள். தயிர் சிந்தியது.''தினகர், ரொம்ப சுயநலம் இது. எப்பவோ ஒரு முறை முடியலேன்னு தானே உதவி கேட்கிறேன். அப்பக்கூட இப்படி கடுமையா பேசினா என்ன அர்த்தம்? அப்போ, உங்க வேலையும், உங்க, 'அப்பாயின்மென்ட்'டும் தான் முக்கியம்.'என், 'கமிட்மென்ட்ஸ்' மேல, உங்களுக்கு அக்கறையே இல்லையா... நானும் தானே கஷ்டப்பட்டு இன்ஜினியரிங் படிச்சு, பெரிய கம்பெனியில நல்ல பதவில இருக்கேன். எனக்கும் தானே மதிப்பு, மரியாதை எல்லாம் முக்கியம்?'' என்று கூறிய திவ்யாவுக்கு, மூச்சு வாங்கியது.''இதோ பார் திவ்யா, நீ பண்றதெல்லாம் உனக்காக. ஒரு நாள் கூட, நான் உன்னை வேலைக்குப் போ, பணம் சம்பாதி, வீட்டு செலவுகளுக்கு, 'ஷேர்' பண்ணுன்னு சொன்னதே இல்லை. என் வருமானமே மிகப் பெரிதா இருக்கு.''நீ, ராணி மாதிரி வீட்டில் ஜாலியா, சந்தோஷமா வாழலாம். நீதான் வேலை வேலைன்னு ஓடற. இப்பவும் ஒண்ணும் கெட்டுடல, வேலையை விட்டுட்டு நிம்மதியா இரு. இன்னிக்கு என் மனநிலை ரொம்ப முக்கியம். என்னை அமைதியாக இருக்க விடு.''அவள் இதழ்கள் துடித்தன. ஏதோ சொல்ல வந்த சொற்களை உள்ளேயே வைத்துக் கொள்வது தெரிந்தது. இமைகள் ஈரமாவதை யாரும் பார்த்து விடக் கூடாது என்று நினைத்து, சரேலென திரும்பி பின்பக்கம் போனாள், திவ்யா.அன்றைய நாள் நினைத்ததைப் போலவே அருமையாக நகர்ந்து முடிந்தது. உண்மையிலேயே தினகரின் உரையால் கவரப்பட்டு விட்டார், பால் நியூமன். இனிமையான உரையாடல், சுவையான தென்னிந்திய உணவு, கையெழுத்தான ஒப்பந்தங்கள், புதிய நட்பு என்று, ஒரு அதிசயம் தொடர்ந்து நிகழ்ந்ததைப் போல் இருந்தான்.தினகரை பாராட்டித் தள்ளியது, சென்னை நிர்வாகம். உடனடியாக மிகப் பெரிய ஊக்கத்தொகையை அன்பளிப்பாக அளித்து அசத்தியது, தலைமை அலுவலகம்.திவ்யாவை அழைத்துச் சொல்லலாம் என்று நினைத்தபோது, மொபைல் போனில் அக்கா அழைத்தாள்.''ஹலோ அக்கா... எப்படி இருக்கே? சாரி உன்னைப் பார்த்து ஒரு வாரமாச்சு,'' என்றான். ''ஆமாம்பா... இந்த வழியாகத்தானே போறே வர்றே. எனக்கும் உன்னைப் பார்க்கணும்ன்னு ஆசையா இருக்கு. ஜஸ்ட் ஒரு பத்து நிமிஷம் வந்துட்டுப் போயேன்,'' என்றாள்.''சரிக்கா... மாமா இருக்காரா? அவரையும் பார்த்து ஒரு மாசமாச்சு,'' என்றான்.''அவரா, இந்நேரம் வியன்னால இருப்பார். மதியம் பெல்ஜியத்துல இருந்தார். கம்பெனி ஒர்க் ஷாப்... இப்போ அவர், 'சவுத் ஹெட்' இல்லையா, ரொம்ப, 'பிசி!' சம்பளமும் அள்ளிக் கொடுத்து, நல்லா உலகம் சுத்தவும் வைக்கிறது கம்பெனி,'' என்று சொல்லி சிரித்தாள், அக்கா.''சூப்பர்க்கா... இதோ கிளம்பி வர்றேன்,'' என்று எழுந்தான்.''வாடா கண்ணா, உட்காரு. ஒரு அஞ்சு நிமிஷம், இதை முடிச்சுட்டு வந்துடறேன்,'' என்று அவனை இதமாக அணைத்து, கையில் எலுமிச்சை சாறு கொடுத்து உட்கார வைத்தாள்.''என்னக்கா வேலை, நான் உதவட்டுமா?''''பெரிசா ஒண்ணும் இல்லப்பா, நேற்று, குழந்தைகளுக்கு, 'சர்ப்ரைஸ் டெஸ்ட்' வெச்சிருந்தேன். அந்த விடைத்தாள் திருத்தறேன். இதோ முடிஞ்சுடும்,'' என்றாள்.எலுமிச்சை சாற்றைக் குடித்து முடித்தான், தினகர். வீடு இன்னும் பளபளப்பாக மாறியிருந்தது. சுவர்களை விலை உயர்ந்த ஓவியங்கள் அலங்கரித்திருந்தன. அரேபிய பேரீச்ச மரத்தின் சிற்பம். திரைச்சீலைகளின் மென்மை. வாசலில் நின்ற, ஆடி கார். அக்காவின் புதிய ஸ்கூட்டி.புன்னகையுடன், ''உனக்காக தவலை அடை பண்ணியிருக்கேன். திவ்யாக்கும் பிடிக்கும். நீ சாப்பிட்டுட்டு அவளுக்கும் எடுத்துட்டுப் போறியா தினா,'' என, எதிரில் உட்கார்ந்தாள் அக்கா.''அக்கா... புரியலேக்கா,'' என்றான்.''என்னது, என்ன புரியல?''''பெண்கள் மனது.''''இன்னும் அந்தப் பாடல் உயிரோடு இருக்கு. கிரேட்!'' என்று சிரித்தபடி, 'பெண்ணோடு தோன்றி பெண்ணோடு வாழ்ந்தும் பெண் மனது என்னவென்று புரியவில்லையே...' பாடினாள், அக்கா.''நிஜமாத்தான் அக்கா,'' என்று பெருமூச்சு விட்டபடி சொன்னான், தினகர்.''மாமா, கோடியில் சம்பாதிக்கிறார். வீட்டுல எல்லா வசதியும் இருக்கு. குழந்தைகளும் வெளிநாட்டுல படிக்கிறாங்க. நீ என்னக்கா இன்னும் ரெண்டாங்கிளாஸ் குழந்தைகளுக்கு டீச்சர் வேலை பார்க்கற? தொண்டை தண்ணி வத்த தினமும் ஒவ்வொரு வகுப்பிலும் பாடம் எடுக்கற. ஏன் அக்கா இந்த கஷ்டம் உனக்கு?''''பெண் என்கிறவள் பணத்துக்காக மட்டும் தான் வேலைக்குப் போகிறாள்ன்னு நீயும் நினைக்கிறீயா தினா?''''ஆமாம்!''''இல்ல தினா, நிச்சயமா இல்ல. அது மட்டுமே காரணம் இல்ல. இது ஒரு தன்னம்பிக்கை கண்ணா... கற்ற கல்விக்கு நாம் செலுத்துகிற மரியாதை. நம்மை பல சிரமங்களுக்கு நடுவிலேயும் படிக்க வெச்ச பெற்றோருக்கு காட்டுகிற நன்றி.''''என்னக்கா சொல்ற?''''ஆமாம் கண்ணா... சமையல் அறையில் மட்டும் அடைந்து கிடந்த பாட்டிகள், ஹால் வரைக்கும் வர அனுமதிக்கப்பட்ட அம்மாக்கள். அவர்கள் வீட்டைப் பார்த்துக் கொண்டனர். ஆனால், உள்ளே கண்ணீர் விட்டனர். அன்பு என்ற கண்ணாடிக் குடுவைக்குள் அடைந்து கிடப்பதை உணர்ந்து, வேதனைப்பட்டனர்.''அடுத்த தலைமுறை பெண்கள் மேல், இந்த அடிமை வாழ்க்கை திணிக்கப்படக் கூடாது என்று நினைத்தனர். அதனால் தான், பெண் கல்வி சாத்தியமானது. ஆண்கள் மேல் நான் குற்றம் சொல்லல. ஆனால், பெண் என்பவளும் தனி மனுஷி தானே... அவளுக்கும் கவுரவம் வேணும் தானே...''அதை அவள் கல்வியால், பணியால், ஊதியத்தால், பதவியால் அடையணும் என்ற கனவு நியாயம் தானே? அம்மா தான் சண்டை போட்டு வாதாடி என்னை எம்.பில்., வரை படிக்க வைத்தாள் என்று, உனக்கும் தெரியும் தானே தினா?''மாமா கை நிறைய சம்பாதிக்கிறார். வசதியான வாழ்க்கை, மகிழ்ச்சி தான். ஆனால், மன நிறைவு, இந்த டீச்சர் வேலையில் தான் கிடைக்குது கண்ணா... தினம் தினம் பார்க்கும் புது உலகம், புது உரையாடல், புது அனுபவம், புது முயற்சிகள்...''இன்னும் கற்றுக் கொண்டே இருக்கிற திறந்த மனோபாவம்... எல்லாம் வேலைக்குப் போவதால் கிடைக்கும் உற்சாகம் கண்ணா... வாழ்வின் மேல், உறவுகள் மேல், உலகத்தின் மேல் பேரன்பு வைத்திருக்கும் மனிதன், எப்படி உழைப்பை ஆர்வத்துடன் போற்றுவானோ அப்படித்தான் பெண்ணும்... இல்லையா கண்ணா?'' என்றாள்.புதிய வாசல் திறப்பதை உணர்ந்த தினகருக்கு. திவ்யாவை அணைத்து முத்தமிட வேண்டும் போலிருந்தது.வி. உஷா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !