இன்னும் திருந்தலையா?
'கொரோனா' வைரஸ் போன்ற கொடிய வைரஸ்கள் எவ்வளவு வந்தாலும், இந்த சீன நாட்டவர் திருந்த மாட்டார்கள் போலிருக்கிறது. இங்குள்ள யூலின் நகரில், ஒவ்வொரு ஆண்டும் நாய் இறைச்சி திருவிழா, ஜூன் அல்லது ஜூலை மாதங்களில் நடக்கும். பல்வேறு விதமான நாய்கள், இங்கு கூண்டில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும். வாடிக்கையாளர் சுட்டிக் காட்டும் நாயை, அடுத்த சில நிமிடங்களிலேயே, வெட்டி கொன்று, தோலை உரித்து, இறைச்சியை தந்து விடுவர். இதுதவிர, நாய் இறைச்சி சாப்பாடு, நாய் இறைச்சி சூப் ஆகியவையும் இங்கு கிடைக்கும்.சீனாவின் பல்வேறு நகரங்களில் இருந்து ஏராளமான மக்கள், திருவிழாவுக்கு வந்து, தங்களுக்கு விருப்பமான நாய் இறைச்சியை வாங்கிச் செல்வர் அல்லது சாப்பிடுவர். இந்தாண்டு, 'கொரோனா' வைரஸ் பிரச்னை உச்சத்தில் இருப்பதால், திருவிழா நடக்காது என எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும், 10 நாட்களும் திருவிழா ஜோராக நடந்து முடிந்தது. வழக்கத்தை விட, இந்த முறை கூட்டம் சற்று குறைவாக இருந்ததாம்.— ஜோல்னாபையன்