உள்ளூர் செய்திகள்

படிப்பு

கல்யாண மண்டபத்தில், பட்டுப்புடவை பளபளக்க, பெண்கள் ஆங்காங்கு நின்று சிரித்து பேசிக் கொண்டிருக்க, ''இன்னும் கொஞ்ச நேரத்தில் மாப்பிள்ளை அழைப்பு ஆரம்பமாக போகுது; எல்லாரும் கோவிலுக்கு போகலாம்...'' என்றார், முதியவர் ஒருவர். அச்சமயம், மண்டபத்தில் கார் வந்து நிற்க, அதிலிருந்து இறங்கும் அக்காவை பார்த்து பரபரப்புடன் வந்தாள் வசந்தி.''வா அக்கா... பிரதீப் படிப்பை வச்சு வராமல் இருந்துடுவியோன்னு நினைச்சேன்... அத்தான் வரலையா...'' என்று கேட்டவள், காரிலிருந்து, 'டிராவல் பேக்'குடன் இறங்கும் பிரதீப்பை, கண்கள் அகல பார்த்தாள்.''பிரதீப்... நீயா, இன்னும் ரெண்டு வாரத்தில், 'பிளஸ் 2 எக்ஸாம்' ஆரம்பமாகப் போகுது; நீ எப்படி கல்யாணத்துக்கு...''''அப்பாவுக்கு திடீர்னு பெங்களூருக்கு, 'டிரெய்னிங்' போட்டுட்டாங்க... அவரால வரமுடியல; அதான், அம்மாவுக்கு துணையாக வந்தேன். இரண்டு நாள் தானே...'' என்றான்.''என்னமோ பிரதீப்... என் மகனும், பிளஸ் 2 தான் படிக்கிறான்; அத்தை வீட்டு கல்யாணம் தான்... படிப்பைக் கெடுத்துட்டு வரக்கூடாதுன்னு, உன் சித்தப்பா, கண்டிச்சு சொல்லிட்டாரு; அதனால, அவன் வரல,'' என்றாள்.''என்ன சொல்ற வசந்தி... அத்தை மகள் கல்யாணம்... அவனை அழைச்சுட்டு வராமல் விட்டுட்டு வந்துட்டியே...''''இருக்கட்டும் அக்கா... கல்யாணத்த விட படிப்புதானே முக்கியம்; சரி, உள்ளே வாங்க,'' வரவேற்று உள்ளே அழைத்து போனாள்.மாப்பிள்ளை அழைப்பு முடிந்து, நிச்சயதார்த்தம் ஆரம்பமாக, மண்டபத்தில் உட்கார்ந்திருந்த வசந்தியின் அக்கா, தங்கையின் கைப்பிடித்து நிறுத்தி, ''அதோ, அங்கே உட்கார்ந்திருக்கிறது உன் மாமியார் தானே...''''ஆமாம்... பேத்தி கல்யாணத்த பாக்கட்டும்ன்னு அழைச்சுட்டு வந்தோம்.''''என்ன சொல்ற வசந்தி... வயசு, 90க்கு மேலாச்சு... அவங்கள அழைச்சு வந்து சிரமம் கொடுக்கறீங்க... அங்கே பாரு, உட்கார முடியாமல் தடுமாறுறாங்க... கல்யாணம் முடிச்சு, பொண்ணு மாப்பிள்ளைய கூட்டிட்டு போய் ஆசிர்வாதம் வாங்கியிருக்கலாமே...'' என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, சேரில் உட்கார்ந்திருந்த வசந்தியின் மாமியார் மயங்கி விழ, ''ஐயோ அத்தை... என்னாச்சு...'' என்று ஓடினாள் வசந்தி.கூட்டத்தை விலக்கி உள்ளே நுழைந்த பிரதீப், ''எல்லாரும் நகருங்க... சித்தப்பா... பாட்டியின் தோளைப் பிடிங்க; ரெண்டு பேரும் சேர்ந்து காருக்கு அழைச்சுட்டு போவோம்.''''பயமா இருக்கு பிரதீப்... எங்கம்மா வயசானவங்க... வரவேணாம்ன்னு சொன்னேன்... என்னாச்சுன்னு தெரியல.''''சித்தப்பா, இது கல்யாண மண்டபம்... 'டென்ஷன்' ஆகாதீங்க... பாட்டிக்கு ஒண்ணும் ஆகியிருக்காது; உடனே டாக்டர்கிட்ட போலாம்,'' பதற்றத்துடன் இருந்தவர்களை சமாதானப்படுத்தி, பாட்டியை காரில் ஏற்றினான்.காரில் ஏற வந்த அம்மாவையும், சித்தியையும் தடுத்து, ''நீங்க, கல்யாண வேலையை பாருங்க, நானும், சித்தப்பாவும் போறோம்; வரும்போது, தெரு முனையில் ஒரு நர்சிங்ஹோம் இருந்தத பாத்தேன்; அங்கே போயிட்டு தகவல் சொல்றேன்; அவசியம்ன்னா, வரலாம்,'' என்று தீர்மானமாக சொல்லி விட்டான்.'பிரஷர்' குறைந்ததால், மயக்கம் என்று சொல்லி, ஊசி போட்டு மருந்து கொடுத்து, பாட்டி தெளிந்ததும், இரண்டு மணி நேரம் கழித்து அழைத்து வந்தனர்.''சித்தி... பாட்டிக்கு பயப்படும்படியாக எதுவுமில்ல; அவங்கள ரூமுக்கு அழைச்சுட்டு போய் படுக்க வைங்க... முதல்ல சித்தப்பாவ கவனிங்க, அவர்தான் ரொம்ப பயந்துட்டாரு.''''நல்லவேளை... சமயோசிதமாக செயல்பட்டு, மண்டபத்தில் எந்த பிரச்னையும் வராமல் பார்த்துகிட்டே... இங்கேயும் நிச்சயதார்த்தம் நல்லபடியாக நடந்தது,'' என்றாள், வசந்தி.''முகூர்த்தம், 8:00 மணிக்கு; எல்லாரும் சீக்கிரம் குளிச்சுட்டு ரெடியாகுங்க; புரோகிதர் சடங்க ஆரம்பிச்சுடுவாரு,'' என்றாள், ஒரு பெண்மணி.குளித்து பட்டுப்புடவையை கட்டிக் கொண்டிருந்த அக்காவிடம் வந்த வசந்தி, ''அக்கா... பிரதீப் எங்கே காணோம்... அவன் இன்னும் குளிக்கலயா... இன்னுமா துாங்கறான்...''''அவனை, 6:00 மணியிலிருந்து காணும்... எங்கே போயிருக்கான்னு தெரியல; வந்துடுவான்,'' என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது, வசந்தியின் மொபைல் ஒலித்தது. எடுத்து, ''சொல்லுப்பா... அலாரம் வச்சு, 4:00 மணிக்கு எழுந்தியா... படிச்சிட்டிருக்கியா... சரி... பிரிஜ்ஜில் மாவு இருக்கு; ஸ்கூல் போகும்போது, தோசை ஊத்தி சாப்பிட்டு போ... எக்ஸாம் டைம், வெளியில் சாப்பிட்டால், வயிற்றுக்கு ஒத்துக்காமல் போனால் சிரமம்; படிப்பு தடைபடும். சொல்றது புரியுதா...'' என்று சொல்லி மொபைல் போனை வைத்தாள்.அப்போது, பிரதீப் உள்ளே வர, ''பிரதீப் எங்கே போனே?''''கூட்டம் அதிகமா இருக்கு; இலை கட்டு பத்தாதுன்னு சமையல்காரர் சொன்னார். நானும், சித்தப்பாவும் மார்க்கெட் போய், இலை கட்டை வாங்கி வந்தோம். இதோ அஞ்சு நிமிஷத்துல குளிச்சுட்டு வரேன்,'' பாத்ரூமில் நுழைந்தான்.அங்கு இருந்த உறவுக்கார பெண் பிரதீப்பின் அம்மாவிடம், ''உங்க மகன், பிளஸ் 2 படிக்கிறதா சொன்னாங்க... நேத்தியிலிருந்து கவனிக்கிறேன்... அடுத்தவங்களுக்கு உதவுற குணம் அவன்கிட்ட இருக்கு. அவன், என்னவாக வரணும்ன்னு விரும்புறீங்க... டாக்டரா, இன்ஜினியரா, ஆபீசரா?''''முதல்ல அவன் நல்லவனாக வரட்டும்; படிப்பு அவன் அறிவை வளர்த்துக்கத்தான். அவன் தகுதிக்கும், திறமைக்கும் எது சரியாக இருக்குமோ... அதை தேர்ந்தெடுக்கட்டும்,'' புன்னகையோடு பிரதீப்பின் அம்மா சொல்ல, உறவுகளை நெருங்க விடாமல், விசேஷங்களை ஒதுக்கி, படிப்பை பூதாகரமாக்கி, படி படி என்று வேறு சிந்தனைக்கே இடம் தராமல், மகனை தனிமைப்படுத்தி, சுயநலவாதியாக வளர்ப்பதை, ஒரு கணம் நினைத்து பார்த்த வசந்தி, அக்காவின் பதிலால் தலைகுனிந்தாள். எஸ். பிரவிணா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !