உள்ளூர் செய்திகள்

சம்மர் விளையாட்டுக்கள்!

பரமபதம்!: தாயம் விளையாட்டு பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கும். பாரம்பரியமாக ஒரு பரமபத படம், அக்காலத்தில் எல்லார் வீட்டிலும் இருக்கும். அதில், சொர்க்கம் செல்ல வைகுண்டம் இருக்கும். இது, ஆன்மிகத்தன்மையுடன் இணைந்த விளையாட்டு இதுவும் உள்ளரங்க விளையாட்டு தான்.இப்போது, 'ஸ்னேக் அண்ட் லேடர்' என்ற போர்ட் விளையாட்டுகள் இருந்தாலும், பரம பதத்தின் சுவாரசியமே தனி தான். பரபரவென்று முன்னேறிச் சென்றாலும், நிறுத்தி, நிதானமாக வாழ்க்கைப் படிக்கட்டுகளில் ஏறினாலும், வாழ்க்கையில் சில சறுக்கல்களை தவிர்க்கவே முடியாது என்று, குழந்தைகளுக்கு அழகாக சொல்லிக் கொடுக்கும் இவ்விளையாட்டு. வெற்றி, தோல்விகள் நிறைந்த வாழ்க்கையும், ஒரு பரமபத விளையாட்டு தான்!இங்கு தாயம் போட்டுத் தான், ஆட்டத்தை ஆரம்பிக்க வேண்டும். தாயக்கட்டையில் விழும் எண்ணிக்கைக்கு ஏற்ப, நம் ஆட்டக் காய்களை நகர்த்த வேண்டும்.நடுவில், தாண்டும் கட்டத்திற்கு ஏற்ப, ஏணி வந்தால் ஏறவோ, பாம்பு வந்தால் இறங்கவோ நேரிடும். கடைசியாக சொர்க்கவாசல் என்ற இடம் அடைந்தவுடன், அங்கிருந்து தாயங்கள் மட்டுமே போட்டு பத்து கட்டங்களைத் தாண்ட வேண்டும். கடைசியாக முக்தி எனப்படும் கட்டத்தை அடைய வேண்டும்.இரு கைகளால், தாயக்கட்டையை உருட்டுவதால் கைகளுக்கு நல்ல பயிற்சி. இதன் மூலம், இரு கைகளும் செயல்படுவதால், இரு பக்க மூளைகளுக்கு வேலை இருக்கும்; இது, விரல்களுக்கும், கைகளுக்குமான பயிற்சி. பலர் சேர்ந்து விளையாடும்பொழுது, குழு மனப்பான்மையும் வளரும்.சடுகுடு!: கபடி அல்லது சடுகுடு அல்லது பலிஞ்சடுகுடு என்று அழைக்கப்படும் இவ்விளையாட்டு, இன்றும் பரவலாக விளையாடப்படும் தமிழர் விளையாட்டுகளுள் ஒன்று! 'ஒவ்வொரு அணியிலும், ஏழு பேர் இருப்பர். மொத்த விளையாட்டு நேரம், 40 நிமிடங்கள். இவ்விளையாட்டு விளையாட (ஆடுகளம்) நீள்சதுரமான இடம் இருந்தால் போதும். இந்த ஆடுகளத்தை, ஒரு நடுக்கோட்டில் இரண்டாகப் பிரித்து, ஒரு பக்கத்துக்கு ஒரு அணியாக இரு அணியினரும் இருப்பர். ஆட்டக்காரர்கள் எப்போதுமே, புறஎல்லைக் கோடுகளைத் தாண்டி செல்லக் கூடாது. இந்த விளையாட்டுக்கு, நடுவர் ஒருவர் தேவை.ஒரு அணியில் இருந்து யாரேனும் ஒருவர் புறப்பட்டு, நடுக்கோட்டைத் தொட்டு ஒரே மூச்சில், 'கபடி கபடி' (சடுகுடு) என்று விடாமல் கூறியபடியே எதிரணியினர் இருக்கும் பகுதிக்குச் சென்று, எதிரணியினரைக் கையாலோ, காலாலோ தொட்டு, எதிரணியினரிடம் பிடிபடாமல் நடுக்கோட்டைத் தாண்டி, தம் அணியிடம் திரும்பி வர வேண்டும்.தொடுபட்டவர் ஆட்டம் இழப்பார். ஆனால், எதிரணியினர் சூழ்ந்து பிடிக்க வருவர். மூச்சு விடாமல், 'கபடி கபடி' என்று சொல்லியபடியே, எதிராளியிடம் அகப்படாமல் திரும்பி வர வேண்டும். அகப்பட்டால் ஆட்டம் இழப்பார்.கண்ணாம்பூச்சி!: கண்ணாம்பூச்சி அல்லது ஒளிந்து பிடித்தல் என்பது ஒரு எளிமையான விளையாட்டு. இரண்டு பேர் முதற்கொண்டு, எத்தனை பேர் வேண்டுமானாலும், இதை விளையாடலாம்.கண்ணன் வேடிக்கை காட்டி விளையாடிய, அப்பூச்சி விளையாட்டை பெரியாழ்வார், 'அப்பூச்சி காட்டியருளே...' எனப் பாடுகிறார். இந்த கண்ணன் பூச்சி விளையாட்டு, கண்ணாம்பூச்சி என ஆகி, பின்னர் கண்ணாமூச்சி என, மருவியது.ஒருவர், குழந்தையின் கண்ணைப் பொத்தியபடி, ஒரு பாடலை பாடுவார். பாட்டு முடிவதற்குள், மற்றவர்கள் ஓடி ஒளிந்து கொள்ள வேண்டும். பாட்டு முடிந்ததும், குழந்தையின் கண்ணைத் திறந்து விடுவார். குழந்தை ஒளிந்திருப்பவரைக் கண்டுபிடிக்க வேண்டும். கண்டுபிடித்து விட்டால், முதலில் கண்டுபிடிக்கப்பட்டவரின் கண் பொத்தப்படும்.தற்காலத்தில் சிறுவர், சிறுமியர்களுள் ஒருவர், ஒன்று முதல் குறிப்பிட்ட எண்கள் வரை எண்ண, அவர் எண்ணி முடிக்கும் முன், மற்றவர்கள் ஓடி ஒளிந்து கொள்வர். பின், எண்களை சொன்னவர் தேடிக் கண்டுபிடிக்கும் முதல் நபர் தோற்றவராவார். தோற்றவர் பின்னர் எண்களைச் சொல்ல, விளையாட்டு தொடரும். பல்லாங்குழி!: பொதுவாக, பெண்கள் விளையாடும் ஒரு விளையாட்டு பல்லாங்குழி. பல்லாங்குழி என்பது மரம் அல்லது உலோகத்தால் ஆன, ஒரு விளையாட்டுச் சாதனம். அதில், இரு வரிசைகளில், ஏழு குழிகள் இருக்கும். அவற்றுள் புளியங்கொட்டைகளை, 5, 5 ஆகப் போட்டு ஆட்டத்தை துவக்க வேண்டும். பின், ஒரு குழியில் இருப்பதை எடுத்து, ஒவ்வொன்றாக அடுத்த அடுத்த குழிகளுள் போட வேண்டும். முடிந்தவுடன், அதற்கடுத்த குழியில் உள்ளதை எடுத்து, அப்படியே போட்டு வர வேண்டும். முடிந்தவுடன், ஒரு வெறுங்குழி வருமாயின், அதைத் தடவி அடுத்த குழியில் இருப்பதை தனக்குரியதாக்க வேண்டும். ஒரு குழியில், நான்கு இருந்தால், அதையும், 'பசு' எனச் சொல்லி தனதாக்க வேண்டும். புளியங்கொட்டை அதிகம் வைத்திருப்பவர் வெற்றியாளர்.பொதுவாக புளியங்கொட்டை, பெரிய விதைகள், சோழிகள் இவற்றில், ஏதாவது ஒன்றை ஆடு பொருளாக வைத்து, இந்த விளையாட்டு விளையாடப்படுகிறது.பல்லாங்குழி விளையாட்டினால், கூர்ந்து கவனிக்கும் திறன், மனதை ஒருமுனைப்படுத்தும் திறன், ஞாபக சக்தி, கண் - கை ஒருங்கிணைந்து செயல்படும் தன்மை போன்றவை விருத்தியடைகின்றன. கை விரல்களின் பைன் மோட்டார் தசைகள் வலிமையடைகின்றன.கூர்ந்து கவனித்தால், பல்லாங்குழி விளையாடும்போது, இடமிருந்து வலமாக கடிகார முட்களின் திசையில் தான் சோழிகளைப் போடுவோம். இதனால், திசைகளைப் பற்றி அறிந்து கொள்வதுடன், 'டிஸ்லெக்சியா' என்னும் பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !