சுதந்திர இந்தியாவின் முதல் ராணுவ தளபதி!
இந்திய விடுதலைக்கு பிறகு, பிரதமராக பொறுப் பேற்றார், ஜவஹர்லால் நேரு.சுதந்திர இந்தியாவின் முதல் ராணுவத் தளபதியை தேர்ந்து எடுக்க, ராணுவ உயரதிகாரிகளை அழைத்து பேசினார். அப்போது, 'நம் ராணுவத்தை நிர்வகிக்க, போதிய அனுபவம் இல்லாத அதிகாரிகள் இருப்பது போல் தெரிகிறது. எனவே, இந்திய ராணுவ அதிகாரிகளில் ஒருவரை தேர்ந்தெடுப்பதற்கு பதிலாக, சில காலம் ஒரு ஆங்கிலேய ராணுவ வீரரை, நம் படைத்தளபதியாக நியமிக்கலாம் என கருதுகிறேன். உங்கள் கருத்து என்ன?' என்றார், நேரு. பிரிட்டிஷ் படையில் பணியாற்றியதால், அதே மனோபாவத்துடன் இருந்த ராணுவ அதிகாரிகள் இதற்கு ஒப்புக் கொண்டனர். ஆனால், நாத்து சிங் ரதோர் எனும், உயர் அதிகாரி மட்டும், 'எனக்கு பேச சந்தர்ப்பம் தர வேண்டும்...' என கேட்டார். சுயமாக சிந்திக்கும் ராணுவ அதிகாரியை கண்டு சற்று திகைத்தாலும், அவரை பேச அனுமதித்தார், நேரு. 'சார், நமக்கு நாட்டை ஆளவும் கூட அனுபவம் கிடையாது. நாம் ஏன் ஒரு பிரிட்டிஷ்காரரை, இந்திய பிரதமராக நியமிக்கக் கூடாது?' என்றார், ரதோர். பதில் பேச முடியாமல் திகைத்த நேரு, இந்த தாக்குதலில் இருந்து சற்று நேரத்தில் சுதாரித்து, அவரைப் பார்த்து, 'அப்படி என்றால், முதல் ராணுவத் தளபதியாக நீ ஆகிறாயா?' என்றார். 'இல்லை சார், நம்மிடம் மிகவும் திறமை வாய்ந்த, லெப்டினன்ட் ஜெனரல் கரியப்பா இருக்கிறார். அவர், இப்பதவிக்கு மிகவும் பொருத்தமாக இருப்பார்...' என்றார். அதன்பிறகே, முதல் இந்திய ராணுவ தளபதியாக பொறுப்பேற்றுக் கொண்டார், ஜெனரல் கரியப்பா.