உள்ளூர் செய்திகள்

நான் வந்த பாதை! (22)

திரைப்பட நடிகர், மறைந்த, எஸ்.எஸ். ராஜேந்திரன் எழுதிய சுய சரிதை!ஜெமினி வாசனின் அழைப்பை ஏற்று, அவரை சந்திக்க சென்றேன்.'ஹிந்தியில் புகழ்பெற்ற நடிகர் - நடிகையரை வைத்து, பெரும் வெற்றி கண்ட, ஜிந்தகி படத்தை, தமிழில் வெளியிட முடிவு செய்துள்ளேன். அதில், கதாநாயகன், ஒரு சீர்திருத்தவாதி. பழமையை எதிர்த்து போராடுகிறவன்.'அந்த வேடத்தில் நீங்கள் நடித்தால், மிகப் பொருத்தமாகவும், சிறப்பாகவும் இருக்கும் என எண்ணுகிறேன். உங்களுக்கு இணையாக வைஜெயந்தி மாலா நடிக்கிறார். அந்தக் கதை உங்களுக்கு மிகவும் பிடிக்கும்...' என்றார்.'சொல்லொணாத் திருப்தியும், மகிழ்ச்சியும் அடைந்தேன்...' என்றேன்.'இந்த படத்தில் நீங்கள் நடிப்பதற்கு சம்பள தொகை பற்றி ஏதாவது பேச வேண்டுமா...' என்றார்.'இல்லை. நீங்கள் என்ன முடிவு செய்தாலும், அதை நான் ஏற்றுக் கொள்வேன். தங்கள் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததையே பெரும் செல்வமாக கருதுகிறேன்...' என்றேன்.'தமிழில் எடுக்கப் போகும், ஹிந்தி படத்தை எப்போது பார்க்கிறீர்கள்...' என, கேட்டார்.'இப்போதே பார்க்கிறேன்...' என்றதும், அதற்கு ஏற்பாடு செய்தார், வாசன்.நான் கதாநாயகனாக நடித்து, வெற்றி பெற்ற எங்களது, தங்க ரத்தினம் படத்தின் சாயலில் இருந்தது அது.'இந்த கதையில் நான் நடித்தால், ரசிகர்களுக்கு நிச்சயம், தங்க ரத்தினம் படம் தான் நினைவுக்கு வரும். 'ஆகவே, தயவுசெய்து வேறு ஒரு கதையை திரைப்படமாக எடுங்கள். நான் நடிக்கிறேன் அல்லது இந்த படத்தையே தமிழில் தயாரிப்பதாக நீங்கள் முடிவெடுத்தால், வேறு யாரையாவது கதாநாயகனாக நடிக்க வைக்கலாம். நான் நடித்தால், நிச்சயம், தங்க ரத்தினம் படம் தான் நினைவுக்கு வரும்...' என்றேன்.'இதுபற்றி யோசிக்கிறேன்...' என்றார், வாசன்.பிறகு, அதே கதையில், ஜெமினி கணேசனை, முற்போக்கு கருத்துள்ள கதாநாயகனாக நடிக்க வைத்து, ஜெமினியின், வாழ்க்கை படகு படம், 1965ல் திரையிடப்பட்டது; படம் வெற்றி பெறவில்லை.எஸ்.எஸ்.ஆரின், தங்கரத்தினம் மாதிரியான கதையில் எடுக்கப்பட்டிருக்கிறது என, பத்திரிகைகளில் விமர்சனம் எழுதினர்.என் அரசியல், கலைத்துறை வாழ்க்கை பின்னிப் பிணைந்து தொடர்ந்தது. அப்போதே சினிமா வட்டாரத்தில், சினிமா ஷூட்டிங்கை விட, அரசியல் மீட்டிங்குக்கு உடனே தேதி கொடுப்பார் என்ற பெயர், எனக்கு கிடைக்க துவங்கியது.கடந்த, 1962ல் சட்டசபை தேர்தல் நடைபெற இருந்தது. கோவை பொதுக்குழுவில் வேட்பாளர்களின் பெயரை அறிவித்தார், அண்ணாதுரை. அதில் என் பெயர் இல்லை.என் பெயரை அறிவிக்காததற்கு காரணம், நான் அப்போது அதிக படங்களில் நடித்துக் கொண்டிருந்ததாலும், தேர்தல் பிரசாரத்துக்கு என்னை பயன்படுத்திக் கொள்ளலாம் என கருதியிருப்பார் போலும், அண்ணாதுரை.எனக்கென்னவோ, மீண்டும் தேனி தொகுதியில் நின்று, அதே, என்.ஆர்.தியாகராஜனை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும் என்பதில், அதிக ஆர்வம் இருந்தது.இச்சமயத்தில், என் மீது மிக அக்கறை கொண்டவரும், எங்கள் குடும்பத்துக்கு மிக வேண்டியவருமான, பி.டி.ராஜன், சென்னைக்கு வந்திருந்தார். கன்னிமரா ஹோட்டலில் தங்கியுள்ளதாகவும், என்னை சந்தித்து பேச வேண்டும் என, டெலிபோனில் பேசினார். அவரை சந்தித்தேன்.'நீ, மீண்டும் தேனி தொகுதியில் போட்டியிட்டு, வெற்றி பெற வேண்டும் என, பசும்பொன் தேவர் விரும்புகிறார். என் கருத்தும் அதுதான். இது சம்பந்தமாக நான் அண்ணாதுரையிடம் பேச தயார்...' என்றார், பி.டி.ராஜன்.அங்கிருந்தே தொடர்பு கொண்டு, அண்ணாதுரையிடம் நான் பேசினேன்.'பசும்பொன் தேவரின் விருப்பம் அதுவென்றால், அதையே ஆணையாக ஏற்று செயல்படு...' என்றார், அண்ணாதுரை. பின், பி.டி.ராஜனிடமும், அண்ணாதுரை பேசினார். அவருக்கு பெரு மகிழ்ச்சி.அன்று இரவே, மதுரை கிளம்பினேன். மறுநாள், மதுரை திருப்பரங்குன்றத்தில், தேவரை சந்தித்து வணங்கி, வாழ்த்து பெற்றேன்.'என் உடல்நிலை சரியாக இருந்தால், நானே உன் தொகுதிக்கு வந்து, ஊர் ஊராக பிரசாரம் செய்வேன்...' என, பரிவுடனும், பாசத்துடனும் பேசினார், தேவர்.'ஐயா, உங்கள் வாழ்த்து கிடைத்தாலே போதும். ஒரு அறிக்கை மட்டும் தாங்கள் எழுதி, கையெழுத்து போட்டு கொடுங்கள். அதை நிறைய அச்சடிக்க செய்து, போஸ்டர், நோட்டீஸ் என வெளியிட்டு விடுகிறேன். நான் வெற்றி பெற்று விடுவேன்...' என்றேன்.'சரி, நீயே ஓர் அறிக்கை எழுதிக் கொடு. நான் கையெழுத்து போடுகிறேன்...' என சொன்னார்.'நடைபெற இருக்கிற தேர்தலில், தேனி தொகுதியில், திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில், சட்டசபை வேட்பாளராக போட்டியிடுகிறார், எஸ்.எஸ்.ராஜேந்திரன். அவருக்கு, உதயசூரியன் சின்னத்தில் முத்திரையிட்டு, பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில், வெற்றி பெற செய்ய வேண்டுமென அனைவரையும் வேண்டி கேட்டுக் கொள்கிறேன்...' என, எழுதி காட்டினேன்.'சுருக்கமாக, தெளிவாக எழுதியிருக்கிறாய்...' என, ரசித்து கையெழுத்து போட்டார்.பிறகு, பசும்பொன் தேவரின் வேண்டுகோள் என்ற தலைப்பில். நான் எழுதிக் கொண்டேன்.என்னை எதிர்த்து நின்ற, என்.ஆர்.தியாகராஜன், ஆள் அம்புகளோடு தேர்தலில் ஈடுபட்டார். பிரசாரம் சூடு பிடித்தது. சில இடங்களில் அடிதடி மோதல்களுக்கும் குறைவில்லை.தேனி தொகுதியில், போட்டி மிக கடுமையாக இருந்தது. எவ்வளவோ தொல்லைகளை சமாளித்தேன். எனக்காக தேர்தல் பணியில் ஈடுபட்டோர் பாதிக்கப்பட்டனர். என்னை தாக்கி அழிக்க எத்தனையோ முயற்சிகள் நடந்தன.உதாரணத்திற்கு, தேனியை அடுத்த பழனி செட்டிபட்டியில், இரவு, 10:00 மணி அளவில் தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது... — தொடரும்.- எஸ்.எஸ். ராஜேந்திரன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !