அந்துமணி பதில்கள்!
எம்.வீரசோழன், சூளைமேடு: வீதியில் செல்லும் பெண்களைப் பார்க்கும் பழக்கம் மட்டும் ஆண்களுக்கு விட முடியாத பழக்கமாக உள்ளதே... என்ன செய்து இப்பழக்கத்தை போக்கலாம்?ஏதோ கொலை பாதகம் போலல்லவா இப்பழக்கத்தை கருதுகிறீர்கள்... ஒரு தவறும் இல்லை; அவர்களுக்கு இடைஞ்சல் ஏற்படுத்தாதவரை!கே.பெரியநாயகம், ஓடந்துரை: தொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சியில் மற்ற நாடுகளுடன் இந்தியா போட்டி போட முடியவில்லையே... இதற்கு காரணம், கடின உழைப்பு, ஒருமைப்பாட்டு உணர்வு மக்களிடம் இல்லையா அல்லது தாம் முன்னேறினால் போதும் என்ற மக்களின் சுயநலமா?'போட்டி போட முடியவில்லை...' என்ற ஸ்டேட்மென்ட்டை ஏற்றுக் கொள்ள முடியாது; வளர்ந்த நாடுகளுக்கு சமமாக முன்னேறவில்லை எனச் சொல்லலாம். நம் மக்களிடம் உழைக்க வேண்டும், முன்னேற வேண்டும் என்ற எண்ணம் நிறைய இருக்கிறது. ஆனால், வெள்ளைக்காரன் காலத்து சிவப்பு நாடா சட்டங்கள் சிலவற்றை இன்னும் நம் அரசு கடைபிடிப்பதால், வேகமான தொழில் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. அதனால், அரசு, சிவப்பு நாடா முட்டுக் கட்டைகளை உடைத்து எறிய முயற்சி மேற்கொள்ள வேண்டும்.சி.என்.பாண்டியன், பொறையூர்: என் மனைவி நல்ல குணவதி; ஆனால், அழகில்லை. இதனால், மற்ற அழகான பெண்களைக் கண்டால் மனம் சபலப்படுகிறது. தப்பென்று தெரிந்தும், மனதை அடக்க இயலவில்லை. மனதை சாந்தப்படுத்த என்ன செய்யலாம்?திருமணமான அனேக ஆண்களிடம் உள்ள குறைபாடு தான் இது! அழகிய பெண்களை, கலைக் கண்ணோடு பாருங்கள்; தவறு இல்லை. ஆனால், சபலப்படுவது தவறு! உங்கள் மனைவியும் உங்களைப் போலவே எண்ணினால்... நினைத்துப் பாருங்கள்... சபலம் இருந்த இடம் தெரியாமல் ஓடிவிடும்! கே.இஸ்மாயில், நெய்வேலி: 'மாறுதல் வரும்!' என்ற கோஷத்தில் மாறுதலே இல்லை. இவ்வரிகள் நம் நாட்டைப் பொறுத்தவரையில் எதற்கு மிகப் பொருந்தும்? அரசியலுக்கா, சமுதாயத்திற்கா?உங்களிடம்,'நெகட்டிவ் அப்ரோச்' நிறைய இருப்பதாகத் தோன்றுகிறது. அரசியலில் மாறுதல் இல்லை என எப்படிக் கூற முடியும்? தமிழகத்தை, காங்கிரஸ் ஆண்டது; பின் தி.மு.க., அ.தி.மு.க., என மாறி மாறி ஆண்டது. இப்போது மீண்டும் அ.தி.முக.,சமுதாயத்தில் ஏன் மாறுதல் இல்லை? பெண்களையே எடுத்துக் கொள்ளுங்கள்... ஆண்களை விட அதிக மதிப்பெண் எடுத்து கல்வியில் முதன்மை பெற்று வருகின்றனர். ஸ்கூட்டர், கார் மற்றும் மோட்டார் பைக் ஓட்டுகின்றனர்... சேலையை துறந்து, 'மாடர்ன் டிரஸ்' அணிகின்றனர். ஏழு, எட்டு என பெற்றுக் கொண்டவர்கள் ஒன்று, இரண்டுடன் நிறுத்திக் கொள்கின்றனர். பெரிய பெரிய பதவிகளில் அமர்கின்றனர். இதெல்லாம் மாறுதல் இல்லையா? 'பாசிடிவ்' அணுகுமுறை இன்னும் வேண்டும் உங்களுக்கு!(அரசியலில் மாற்றம் இருக்கு: ஆனால், அரசியல்வாதிகளிடம் மாற்றம் இல்லையே!' என, நீங்கள் கேட்பது காதில் விழுகிறது)சி.வேணுப்பிரியா, பெரியகோட்டை: திருமணத்திற்கு பின் காதலித்தவரை மறப்பதில் வல்லவர்கள் ஆண்களா, பெண்களா?'மறந்து விட்டது போல் நடிப்பார்களேயன்றி, இருவருக்குமே உள் மனதில் அடித்தளத்தில் பழைய நினைவுகள் இருந்து கொண்டே தான் இருக்கும்...' என்கிறார் அனுபவமிக்க உதவி ஆசிரியர் ஒருவர்!இதே பதிலை கொஞ்சம் தயக்கத்துடன் கூறினார் விளம்பர நிறுவனம் ஒன்றில் அதிகாரியாக பணியாற்றும் அம்மணி ஒருவர்! ப.ஆரோக்கியசாமி, மேட்டுப்பாளையம்: நெருக்கடியான சூழ்நிலை வரும் போது, மனம் கலங்கி நின்ற அனுபவம் உண்டா?கலங்குவது, தவிப்பது என்பது என் அகராதியில் கிடையாது. நெருக்கடியை சமாளிக்கும் விதம் பற்றி யோசித்து, அதன் வழிமுறைகளை சரிவர பின்பற்றி தீர்ப்பேன்; தீர்ப்போம்; தீருங்கள்!வி.சந்திரன், மந்தைவெளி: தற்கொலைகள் அதிகமாகிக் கொண்டே போக காரணம் என்ன?மனச்சோர்வே முக்கிய காரணம் என்கின்றனர் உளவியல் அறிஞர்கள். உலகிலேயே அதிக தற்கொலைகள் நடக்கும் நாடுகள் ஸ்கேண்டிநேவியன் கன்ட்ரீஸ். இந்த நாடுகளில் பனிக்காலங்களில், மக்களுக்கு மனச் சோர்வு அதிகம் ஏற்படுகிறதாம். இதனால், தற்கொலை விகிதம் உலகிலேயே இங்கு அதிகமாக உள்ளதாக கூறுகின்றனர்!