இது உங்கள் இடம்!
சுற்றுலாவும், புது வாகன ஓட்டிகளும்!வெயில் காலம் துவங்கி விட்டது. பள்ளிகளின் கோடை விடுமுறையும் ஆரம்பமாகி விட்டது. அதை தொடர்ந்து, குடும்பமாக, கார்களில் சுற்றுலா செல்வது அதிகமாக இருக்கும்.இன்று, பெரும்பாலான நடுத்தர குடும்பத்தினரிடமும் கார் இருக்கிறது. கார்களை ஓட்டுவது, பெரும்பாலும், அந்தந்த குடும்ப தலைவர்களாக தான் இருப்பர். உள்ளூரில் வாகனம் ஓட்டும் இவர்கள், வெகு துார வெளியூர் பயணத்திற்கு போதிய அனுபவமின்றி, விபத்தை சந்திக்கும் சூழல் உள்ளது. சமீபத்தில், கோவையை சேர்ந்த குடும்ப தலைவர் ஒருவர், ஒன்பது பேருடன், பழநி கோவிலுக்கு சென்று, நள்ளிரவு, 1:30 மணியளவில், ஊர் திரும்பியுள்ளார். வாகன ஓட்டுனரின் கவனக்குறைவால், உடுமலை - பொள்ளாச்சி சாலையோரம் உள்ள வாய்க்காலில் கார் பாய்ந்து, அதில் உள்ள அனைவரும் நீரில் மூழ்கி இறந்து போயினர்.சொந்த வாகனம் வைத்திருப்போர், வெளியூர் மற்றும் வெகு துார பயணத்தின் போது, அனுபவம் வாய்ந்த ஓட்டுனரை பணியமர்த்தி கொள்ள வேண்டும். சூரியன் மறைந்த பிறகு, குடும்பத்தாருடன் வாகன பயணம் மேற்கொள்ளாமல் இருப்பது, அனைவருக்கும் பாதுகாப்பானது.வாசகர்களே... உயிர் விலை மதிப்பற்றது. சிந்தித்து, குடும்பத்தாருடன் பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ளுங்கள்.வெற்றிச்செல்வன், கோவை.பேராசையால் கணவனை பறிகொடுத்த பெண்!என் தோழியின் கணவர், 15 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில், தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். வாயில்லா பூச்சி என்று தான் சொல்ல வேண்டும்.ஆனால், தோழியோ, 'ஒரு ஆம்பளையால் இவ்வளவு தான் சம்பாதிக்க முடியுமா?' என, கணவரோடு தினம் சண்டை போட்டபடி இருப்பாள்; பதிலே சொல்ல மாட்டார், அவர். கணவரை பற்றி, அக்கம்பக்கத்தினர் இடையே குறை சொல்வது தான் தோழியின் வேலை. அந்த வகையில், இவளின் மாமா வழி உறவினரிடம், கணவரை பற்றி சொல்லி புலம்பி இருக்கிறாள். 'விவாகரத்து செய்து விடு. அதற்கு நான் உதவுகிறேன். நல்ல சம்பாத்தியத்தில், வேறு மாப்பிள்ளை பார்த்துக் கொள்ளலாம்...' என்றிருக்கிறார். பேராசை உடைய தோழி, போராடி, கணவரை விவாகரத்து செய்து விட்டாள். பின்னர் தான் தோழிக்கு தலையில் இடி இறங்கியது. விவாகரத்துக்கு உதவிய மாமா வழி உறவினர், தோழியின் கணவரை, தன் மகளுக்கு கட்டி கொடுத்து விட்டார். தோழியால் ஒன்றும் செய்ய முடியவில்லை. இப்போது, வருத்தப்படுகிறாள்.கிடைத்த வாழ்க்கையை கெட்டியாய் பிடித்துக் கொள்வதே புத்திசாலித்தனம். அதை விடுத்து, பறக்க நினைத்தால், உள்ளதும் இல்லாமல் போய் விடும். ஜாக்கிரதை!- எம்.சின்னபொண்ணு, சிவகங்கை.இப்படியும் நடக்குது உஷார்!சென்னையில் உள்ள, தியேட்டர் ஒன்றில், சினிமா பார்க்க சென்றேன். எப்போதும் தனிமையை விரும்புபவன் என்பதால், ஒதுக்குப்புறத்தில் காலியாக இருந்த இருக்கையில் அமர்ந்தேன். படம் ஆரம்பித்த அடுத்த கணம், என் இருக்கைக்கு அருகே, 25 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் வந்தமர்ந்தாள்.சிறிது நேரத்தில், என் மேல் சாய துவங்கினாள். உடனே நான், இரண்டு இருக்கை தள்ளி அமர்ந்தேன். அந்த பெண்ணும், என் இருக்கை அருகில் வந்து அமர்ந்தாள். அவளிடம், 'இதெல்லாம் எனக்கு பிடிக்காது... நீ வேறு ஆளை பார்...' என்றேன். உடனே அவள், 'மரியாதையா, 500 ரூபாய் கொடு; நான் போய் விடுகிறேன். இல்லையென்றால், சினிமா பார்க்க வந்த என்னிடம், பாலியல் தொந்தரவு செய்தாய் என, கூச்சல் போட்டு, கூட்டத்தை கூட்டி விடுவேன். இங்கு, தியேட்டரில் வேலை பார்க்கும் பலர், என் வாடிக்கையாளர்கள். அவர்கள், எனக்கு உதவி செய்வர்...' என்றாள். ஒரு தப்பும் செய்யாமல், நாம் ஏன் பெயரை கெடுத்துக் கொள்ள வேண்டும் என நினைத்து, 500 ரூபாயை அவளிடம் கொடுத்து, படம் பார்க்காமல் வந்து விட்டேன்.இப்படியும் நடக்குது, உஷார்...- சு.கோ.ராஜன், சென்னை.