இது உங்கள் இடம்!
இப்படியும் செய்யலாமே!தன் மகனின் பிறந்த நாளை, முதியோர் இல்லத்தில் கொண்டாட விரும்பினார், நண்பர். அங்குள்ள ஆதரவற்ற முதியோர்களுக்கு, புத்தாடை மற்றும் அவர்கள் விரும்பும் உணவு வகைகளை வழங்கவும் எண்ணினார்.ஒரு வாடகை வாகனத்தை ஏற்பாடு செய்து, முதியோர் இல்லத்திற்கு குடும்பத்தோடு சென்றார். அதன் நிர்வாகியிடம் விபரத்தைக் கூறி, அனுமதி பெற்று, முதியோர்களை வாகனத்தில் ஏற்றி, நகரின் முன்னணி துணிக்கடைக்கு சென்றார்.தங்களுக்குப் பிடித்தமான உடைகளை, அவர்களை தேர்வு செய்து கொள்ள கூறி, வாங்கிக் கொடுத்தார். பிறகு, பிரபலமான முதல் தர உணவகத்திற்கு அழைத்துச் சென்று, அவர்களுக்கு பிடித்தமான உணவு வகைகளை, 'ஆர்டர்' செய்து, சாப்பிடும்படி கூறினார்.நிறைவாக, மீண்டும் முதியோர் இல்லத்திற்கு வந்து, தன் மகனின் பிறந்த நாளை, அவர்களோடு, 'கேக்' வெட்டி கொண்டாடினார். மனதில் மகிழ்ச்சியோடும், உற்சாகத்தோடும், முதியோர் அனைவரும், நண்பரின் மகனை மனதார வாழ்த்தினர்.உடனிருந்து இவற்றை பார்த்த நான், ஆதரவற்றோரை விருந்தினர் போல நடத்தி, மனிதாபிமானத்தோடு செயல்பட்ட நண்பரை வாழ்த்தினேன்! -எஸ்.விஜயன், கடலுார்.பழைய துணிகள் என்றாலும்...சமீபத்தில், திருப்பூருக்கு சென்றிருந்தேன். அங்கே சாலையின் மதில் சுவர் ஓரம், பழைய துணிகளை அடுக்கி வைத்திருந்தனர். சில துணிகள் நடைபாதையில் சிதறிக் கிடந்தன. அவற்றின் மீது சில தெரு நாய்கள் படுத்து துாங்கிக் கொண்டிருந்தன.அது குறித்து, அருகிலிருந்த பெண்ணிடம் கேட்டேன். 'எழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில், பழைய துணிகளை இங்கே கொண்டு வந்து வைப்பர். தேவைப்படுவோர், அதை எடுத்துக் கொள்ளலாம்...' என்றார்.சேவை எண்ணம் சிறந்தது தான். அதேசமயம், எந்த பாதுகாப்பும் இன்றி, இப்படி துணிகளை வைப்பது தவிர்க்க வேண்டும். ஏனெனில், அவைகள் மழை மற்றும் வெயிலால் பாதிக்கப்படும். மேலும், நாய், மாடு போன்றவை அதில் படுத்து துாங்குவதற்கு வசதியாகி விடும்.மாறாக, இந்த துணிகளை எல்லாம் நுால் நிலையம் அல்லது இளைஞர் நற்பணி மன்றம் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் அட்டை பெட்டியிலோ அல்லது மர அலமாரிகளிலோ வைக்கலாம். இதனால், துணி வீணாவது தடுக்கப்படும்; தேவைப்படுவோர் எடுத்துச் சென்று பயன்படுத்துவர்.என்ன நண்பர்களே... பழைய துணிகள் என்றாலும், அதை பாதுகாப்பான முறையில் தரலாமே; மற்றவர்களும் மனிதர்கள் தானே... சிந்தியுங்கள்!அ.மீனாட்சி, கன்னியாகுமரி.வரும் முன் காப்போம்!'கொரோனா' இரண்டாம் அலையின்போது, ஆக்சிஜன் தட்டுப்பாட்டால், பல இடங்களில் உயிரிழப்பு ஏற்பட காரணமாக அமைந்தது. இத்தகைய துயர சம்பவங்கள், சில நேரங்களில் வேதனை தருவதாக இருந்தாலும், அவை நமக்கு பாடம் கற்றுக் கொடுத்துள்ளது. இன்றும் பல மருத்துவமனைகளைச் சுற்றி கான்கிரீட் கட்டடங்கள் அதிகமாக உள்ளன. இதனால், தேவையான மரங்கள், செடிகள், தாவரங்கள் இல்லாததால், நோயாளிகள், செயற்கை முறையில் ஆக்சிஜனை பெறும் சூழ்நிலையே நிலவுகிறது. இதை தவிர்க்க, அதிகம் ஆக்சிஜனை வெளியிடும் மரங்களான அரச மரம், ஆல மரம், வேப்ப மரம், வில்வ மரம், வன்னி போன்றவைகளை மருத்துவமனையைச் சுற்றி நடலாம். அதன் மூலம் கிடைக்கும் இயற்கை ஆக்சிஜனைப் பெற்று, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக் கொள்ள, அரசு மற்றும் தனியார் மருத்துவமனை நிர்வாகங்கள் முன் வரவேண்டும். மரங்கள், நிலத்தடி நீரை மட்டும் சேமிப்பதோடு நிற்காமல், நம் உடலுக்கும், உயிருக்கும் பாதுகாப்பு அரணாக அமையும் என்பதில், எள்ளளவும் சந்தேகமில்லை. - வி.எஸ்.கோபாலன், மதுரை.