இது உங்கள் இடம்!
நூதன திருட்டு!சில மாதங்களுக்கு முன், என் நண்பர், காலை அலுவலகம் செல்ல வீட்டை விட்டு வெளியே வந்தவர், அதிர்ச்சி அடைந்தார். ஏனெனில், வீட்டிற்கு முன் நிறுத்தப்பட்டிருந்த அவருடைய வாகனம் திருடு போய் இருந்தது. கவலையுடன், காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இரு தினங்களுக்கு பின், அதே வாகனம் அவர் வீட்டு முன் நிறுத்தப்பட்டிருந்து. அந்த வாகனத்தின் இருக்கையில் ஒரு கடிதம் ஒட்டப்பட்டிருந்தது. அதில், 'மனைவியை அவசரமாக ஆஸ்பிடலில் சேர்ப்பதற்காக வண்டியை எடுத்துச் சென்றேன்; மன்னிக்கவும். அடுத்த ஞாயிற்றுக்கிழமை இரவுக் காட்சிக்கு, இரண்டு சினிமா டிக்கெட்டுகளை வைத்துள்ளேன்...' என்று குறிப்பிட்டிருந்தார், வண்டியை எடுத்தவர். என் நண்பரும் அகமகிழ்ந்து, மனைவியுடன் இரவு சினிமா பார்த்து, வீடு திரும்பியவருக்கு, பேரதிர்ச்சி காத்திருந்தது. அவர் வீட்டின் கதவை உடைத்து, பீரோவிலிருந்த விலை உயர்ந்த பொருட்களை களவாடி சென்றுள்ளனர், அந்தக் கயவர்கள். இது, புது விதமான திருடும் முறை. தயவுசெய்து, இதுபோன்ற இலவசத்திற்கு ஆசைப்பட்டு, இருப்பதையும் இழக்காதீர்.எஸ். ரவி, பெங்களூரு.ஜவுளிக் கடைக்காரரின் நல்ல செயல்!உறவினர் மகனுக்கு திருமண ஏற்பாடு செய்திருந்தனர். சொந்த பந்தங்களுக்கு வேட்டி, புடவை பரிசளிக்க, ஜவுளி வியாபாரம் செய்யும் இளைஞர் ஒருவரை, வீட்டிற்கு வரவழைத்திருந்தனர்.ஜவுளி தேர்வில் அவர்களுக்கு உதவ, என்னையும் அழைத்திருந்தார், உறவினர். எல்லாருடைய விருப்பத்திற்கிணங்க, மிகவும் பொறுமையாகவும், சிரித்த முகத்துடனும் அந்த இளைஞர் வியாபாரம் செய்தது, அனைவரையுமே கவர்ந்தது.அங்கு வந்திருந்த உறவினர்கள் பலரும், அவரிடம், 'விசிட்டிங் கார்டு' வாங்கி, அவர்கள் வீட்டு சுபகாரியங்களுக்கு ஜவுளியெடுக்க அழைப்பதாக கூறுமளவிற்கு, திறமையாகவும், தொழில் சுத்தம் உள்ளவராகவும் இருந்தார், அந்த இளைஞர்.அவரிடம், 'சிறிய வயதில், எப்படி இந்த பக்குவம்?' என்று கேட்டேன்.'நான் மட்டுமல்ல... என்னைப் போல பல இளைஞர்கள், இப்படி நடமாடும் ஜவுளித்தொழில் செய்து வருகிறோம். வேலையின்றி தவித்த எங்களுக்கு வழிகாட்டி, தொழில் நுணுக்கங்களை போதித்து, 'மெட்டீரியல்'களையும் கடனாக வழங்கி, எங்களுக்கு வாழ்வளித்து வருவது, நகரிலுள்ள குறிப்பிட்ட அந்த ஜவுளிக்கடையின் அதிபர் தான்...' என்றார்.படித்த இளைஞர்களின் வேலையில்லா திண்டாட்டத்தைப் போக்கவும், அவர்களின் குடும்பத்தைக் காத்திடவும், நல்லதொரு செயலை செய்து வரும் அந்த ஜவுளிக் கடைக்காரரை, அனைவருமே வாழ்த்தினோம். — எஸ்.விஜயன், கடலுார்.வில்லங்கமான நட்புகள்!அதிகாலை அழைப்பு மணி சத்தம் கேட்டு, கதவைத் திறந்தேன். பணி நிறைவு பெற்று, இளைப்பாறி கொண்டிருக்கும் என் அலுவலக சகா.'என்னப்பா விஷயம்... ' என்றேன். 'அவசரமா, 10 ஆயிரம் ரூபாய் வேணும்; 'பென்ஷன்' வாங்கினதும் திருப்பி தந்துடறேன்...' என்றதும், எனக்கு நெருடியது.'ப்ளீஸ்... இல்லேன்னு கை விரிச்சிடாதடா. என் முகநுால் நண்பியின் அம்மாவை ஆஸ்பிட்டல சேர்த்து இருக்காங்களாம். செலவுக்கு பணம் இல்லையாம். உங்களால முடிஞ்சதை அனுப்புங்கன்னு, வங்கி கணக்கு எண்ணை கொடுத்து, 'மெசேஜ்' அனுப்பி இருக்கா. பாவம்டா, ஏதோ நம்மால முடிஞ்சத அனுப்பி வெக்கலாம்ன்னு...' என்று இழுத்தான்.'நம் இளகின மனசை புரிஞ்சிகிட்ட பொறுக்கி பசங்க, பொம்பளைங்க பேர்ல போலியான அக்கவுன்ட் ஆரம்பிச்சு, கொஞ்ச நாள் நுால் விட்டுட்டு, மெதுவா, 'அம்மாவுக்கு உடம்பு சரியில்லை, அப்பாவுக்கு ஆக்சிடென்ட், அண்ணனுக்கு வேலை போயிரிச்சு, ப்ளீஸ் ஹெல்ப்'ன்னு, 'மெசேஜ்' தட்டி, பணம் பறிக்க ஆரம்பிச்சிருக்காங்க... பயப்படாதே, 'எந்த ஆஸ்பிட்டல் சொல்லு; பணத்தோட வர்றேன்'னு, 'மெசேஜ்' அனுப்பு. 'ஆஸ்பிட்டல் பேரும், எந்த வார்டுன்னு தகவல் வந்தா, நேர்ல போய் உதவி பண்ணுவோம்...' என்றேன். சொன்னபடி, 'மெசேஜ்' அனுப்ப, அரை மணி நேரம் ஆகியும் எந்த, 'ரிப்ளை'யும் வரவில்லை. 'பார்த்து சூதானமா நடந்துக்கப்பா. இந்த மாதிரி, 'மெசேஜை'யெல்லாம் நம்பி ஏமாந்துடாதே...' என்று புத்தி சொல்லி, வழியனுப்பி வைத்தேன். முகநுால் நட்புகளில் தான் எவ்வளவு வில்லங்கங்களை சந்திக்க வேண்டியுள்ளது. நண்பர்களே, உஷார்!— கோ. பாலசுந்தரம், சென்னை