இது உங்கள் இடம்!
வாழ்க்கையில் உயர...கிராமத்திலுள்ள நண்பரும், அவர் மனைவியும், அதிகம் படிக்காதவர்கள். இருவருக்கும் வாத்து வளர்ப்பு தான் தொழில். ஊர் ஊராக வாத்துக்களை ஓட்டிச் சென்று, வயல்வெளிகளிலும், நீர்நிலைகளிலும் மேய்த்து வருவது வழக்கம்.அதிகாலையில் கிளம்பி, மாலையில் ஊர் திரும்பி விடுவர். வெளியூர்களுக்கு சென்றால், பாதுகாப்பான இடத்தில் கிடை போட்டு தங்கி, சில நாட்கள் கழித்து திரும்புவர். ஊரில் வேலையில்லாமல் திரியும் இளசுகள், அவர்களை, கிண்டல் செய்வர். அதை அவர்கள் பொருட்படுத்த மாட்டார்கள்.சில ஆண்டுகளிலேயே, வாத்துகள் வளர்த்து, கிடைத்த வருமானத்தில், விவசாய நிலம் வாங்கினார்; வசதியான வீட்டையும் கட்டினார், நண்பர். வங்கி இருப்பும் கணிசமாக உயர்ந்தது. தன்னை கிண்டல் செய்த இளைஞர்கள், இன்னும் வேலை தேடி, வீணாக பொழுதைக் கழிப்பதை பார்க்கும் இவர், இப்போது, அவர்களை கேலி செய்தபடி, தலை நிமிர்ந்து நடக்கிறார்.அதுமட்டுமின்றி, கவுரவம் பார்க்காமல் தன்னை அணுகும் இளைஞர்களுக்கு, வாத்து வளர்ப்பின் நுணுக்கங்களை கற்றுக் கொடுத்து, அவர்கள் சொந்தக் காலில் நிற்க உறுதுணையாகவும் இருக்கிறார்.நேர்மையாக உழைத்து வாழும் எந்தத் தொழிலும் கேவலம் இல்லை இளைஞர்களே... நீங்களும் வாழ்க்கையில் உயர, சுயதொழில் மூலம் பிள்ளையார் சுழி போடுங்கள்! -ஆர்.செந்தில்குமார், மதுரை.மளிகைக் கடைக்காரரின் மனிதாபிமானம்!எங்கள் பகுதியில் பல ஆண்டுகளாக மளிகைக் கடை நடத்தி வருபவரிடம், பிளஸ் 2 முடித்த கையோடு, வேலைக்கு சேர்ந்தார், நண்பரின் மகன். மளிகைக் கடைக்காரர் வீட்டிலேயே தங்கி, அங்கேயே சாப்பிட்டு, 10 ஆண்டுகளுக்கு மேலாக வேலை செய்தார்.தன் வீட்டில் தங்கி, சாப்பிட்டதற்காக, ஊதியத்தில் குறிப்பிட்ட தொகையை பிடித்தம் செய்து, மீதித் தொகையைத் தான் தருவார், கடைக்காரர்.நண்பரின் மகன், திருமணம் முடித்த கையோடு, அவரது ஊரில் சொந்தமாக மளிகைக் கடை நடத்தப் போவதாக கூறி, வேலையை விட முடிவெடுத்தார். அப்போது, நண்பரின் மகனிடம், சில லட்சங்களைக் கொடுத்து, நன்றாக இருக்கும்படி வாழ்த்தினார், அந்த மளிகைக் கடைக்காரர்.கடனாக தருகிறாரோ என குழம்பிய நண்பரின் மகனிடம், 'இது, என் வீட்டில் தங்கி, சாப்பிட்டதற்காக, மாதா மாதம் உன் ஊதியத்தில் நான் பிடித்தம் செய்து, உனக்காக சேமித்து வந்த பணம்.'இதை வைத்து, கடை நடத்து. உண்மையாக உழைத்து, வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்கு வா...' என்று வாழ்த்தி, நெகிழச் செய்தார், அந்தக் கடைக்காரர். தன் ஊழியரின் பிற்கால வாழ்க்கைக்கு உதவட்டும் என்று, முன்கூட்டியே திட்டமிட்டு, ஊதியத்தில் பிடித்தம் செய்துள்ளார். அவசியமான நேரத்தில் தந்து உதவிய, அந்த மளிகைக் கடைக்காரரின் மனிதாபிமான செயலை, எல்லாரும் பாராட்டுகின்றனர்!-சி.அருள்மொழி, கோவை.மனம் இருந்தால் பணம்!நண்பரின் வீட்டுக்கு போயிருந்தேன். ஹாலில், நிறைய கொலு பொம்மைகள் புதுசாக இருந்தன. 'பொம்மைகள் அழகாக இருக்கிறதே. புதிதாக வாங்கியதா...' என, நண்பரிடம் கேட்டேன்.'இதெல்லாம் எப்போதோ வாங்கியது...' என்றார். நான் புரியாமல் விழித்ததை பார்த்து, வீட்டின் பின்புறம் என்னை அழைத்துப் போனார்.அங்கே, பொம்மைகளுக்கு பெயின்ட் அடித்துக் கொண்டிருந்தார், ஒருவர். அவர் பக்கத்தில் நிறைய பெயின்ட் டப்பாக்கள் இருந்தன. 'இதற்கு, ஓவிய திறமை தேவையில்லை. பொறுமையாக வேலை செய்யும் மனம் இருந்தால் போதும்.'பழைய பொம்மைகள் நிறம் மங்கி போய் விட்டது. அதை கொலுவில் வைக்க முடியல, துாக்கிப் போடவும் மனசு வரவில்லை. அப்போது இவர், கொலு பொம்மைகளுக்கு பெயின்ட் செய்து தருவதாக கூவியபடி, தெருவில் போனார்.'இவ்வளவு பொம்மைகளும் பெயின்ட் அடிக்க, குறைவான கட்டணம் தான் கேட்டார். புது பொம்மைகளாகி விட்டன. அவருக்கும் வருமானம், எங்களுக்கும் சந்தோஷம்...' என்றார்.சம்பாதிக்க நிறைய வழிகள் இருக்கிறது. உழைப்பும், நேர்மையும் இருந்தால் போதும். 'சீசன்' தெரிந்து பணம் சம்பாதித்த, அந்த வர்ணம் பூசும் தொழிலாளியை பாராட்டி விட்டு வந்தேன்.வி. வைத்தியநாதன், சென்னை.