அந்துமணி பா.கே.ப.,
பா கே சமீபத்தில், துபாய் நாட்டிலிருந்து, இஸ்ரேல் நாட்டுக்கு சென்ற விமானத்தை தகர்க்க நடந்த முயற்சி முறியடிக்கப்பட்ட செய்தி, 'டிவி'யில் ஒளிபரப்பாகி கொண்டிருந்தது. செய்தியின் இடையே, '7500' என்று ஒரு எண்ணை செய்தி வாசிப்பாளர் சொன்னதும், '7500 என்றால் என்ன அர்த்தம்...' என்று கேட்டார், உதவி ஆசிரியர் ஒருவர். அருகிலிருந்த, லென்ஸ் மாமா கூற ஆரம்பித்தார்: விமான போக்குவரத்தில், '7500' என்பது, விமானம், சட்ட விரோத குறுக்கீடு அல்லது விமானம் கடத்தலுக்கு உள்ளாகியிருக்கிறது என்பதை குறிக்கும் சர்வதேச அவசரகால குறியீடு. விமானிகள், தங்களுக்கு ஆபத்து ஏற்படும் போது, கடத்தல்காரர்களுக்கு தெரியாமல், விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு அறைக்கு, ரகசியமாக தகவல் அனுப்ப, இந்த நான்கு இலக்க குறியீட்டு எண்ணை பயன்படுத்துவர். ஐ.சி.ஏ.ஓ., எனப்படும் சர்வதேச சிவில் விமான போக்குவரத்து அமைப்பு பொதுவாக பயன்படுத்தும், மூன்று முக்கிய அவசர குறியீடுகள் உள்ளன. அவை, * 7500 - விமானம் கடத்தல் மற்றும் சட்டவிரோத தலையீடு * 7600 - தகவல் தொடர்பு செயலிழப்பு * 7700 - பொதுவான அவசரநிலை. இந்த குறியீடுகள் பதிவானால் என்ன நடக்கும் தெரியுமா? 1.மவுன எச்சரிக்கை: விமானி, ரேடியோ மூலம் பேச தேவையில்லை. 'டிரான்ஸ்பாண்டர்' எனப்படும் கருவியில், 7500, என பதிவிட்ட உடனே, விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையிலுள்ள, ரேடார் திரையில் அது எச்சரிக்கையாக தோன்றும் 2.ராணுவ பாதுகாப்பு நடவடிக்கை: இந்த, 'சிக்னல்' கிடைத்ததும், சம்பந்தப்பட்ட நாட்டின் வான்படைப் போர் விமானங்கள் உடனடியாக அந்த விமானத்தைச் சூழ்ந்து, பாதுகாப்பாக பின் தொடரும் 3.தனிமைப்படுத்தப்பட்ட தரைப்பகுதி: விமான நிலையத்தில், விமானம் தரையிறக்கப்படும்போது, வழக்கமான பகுதிக்கு கொண்டு செல்லப்படாமல், மற்ற பயணிகளுக்கும், விமான நிலையத்துக்கும் பாதிப்பு ஏற்படாதவாறு, தொலைதுார பகுதியில் நிறுத்தப்படும். கடைசியாக, விமானம் அல்லது கப்பல் ஆபத்தில் சிக்கியிருப்பதைக் குறிக்க, சர்வதேச அளவில் பயன்படுத்தப்படும் சங்கேத குறியீடு, 'மே டே!' - என்று விளக்கமளித்தார், லென்ஸ் மாமா. அடுத்து, 'டிவி'யில் விளையாட்டு செய்தியில், ஜப்பானில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்கள், தங்களுக்கு அணிவிக்கப்பட்ட பதக்கத்தை கடித்தபடி, 'போஸ்' கொடுத்தனர். 'ஏன் இப்படி பதக்கத்தை கடிக்கின்றனர்?' என்று, உ.ஆ., கேட்க, கூற ஆரம்பித்தார், மூத்த செய்தியாளர்: விளையாட்டு போட்டிகளில், வெற்றி பெற்றவர்கள் பதக்கத்தை கடிப்பதற்கு, புகைப்படக் கலைஞர்களின் வேண்டுகோள் மற்றும் பாரம்பரிய பழக்கமும் தான், காரணம். சர்வதேச ஒலிம்பிக் வரலாற்று ஆசிரியர்களின் கூற்றுப்படி, பதக்கத்தை கடிப்பது போன்ற, 'போஸ்' புகைப்படங்களில் பார்ப்பதற்கு மிகவும் சுவாரஸ்யமாகவும், நாளிதழ்களின் முதல் பக்கத்தில் இடம்பெற தகுந்ததாகவும் இருக்கும். எனவே, புகைப்படக் கலைஞர்கள், வீரர்களிடம் வற்புறுத்திக் கேட்கும் ஒரு முக்கிய, 'போஸ்' ஆக, இது மாறிவிட்டது. இதற்கு, வரலாற்று பின்னணி தகவலும் ஒன்றுண்டு... அதாவது, தூய தங்கம் ஒரு மிருதுவான உலோகம். பழங்காலத்தில், தங்க நாணயங்கள் உண்மையானவையா என்று சோதிக்க, மக்கள் அதை பற்களால் கடித்துப் பார்ப்பர். நாணயத்தில், பற்களின் அடையாளம் விழுந்தால், அது, துாய்மையான தங்கம் என்று ஏற்றுக்கொள்வர். அந்த பழைய வழக்கமே பிற்காலத்தில், விளையாட்டு போட்டிகளில், ஒரு குறியீட்டு பழக்கமாக தொடர்கிறது. மேலும், தங்களின் இத்தனை ஆண்டுகால கடின உழைப்புக்கு கிடைத்த வெற்றியை, ஒரு வேடிக்கையான மற்றும் மகிழ்ச்சியான முறையில் வெளிப்படுத்த, வீரர்கள் இதை ஒரு கலாசார பழக்கமாகவே மாற்றி விட்டனர். இது சம்பந்தமான கொசுறு செய்தி ஒன்றையும் கூறி விடுகிறேன்... கடந்த, 1912ம் ஆண்டுக்கு பின், ஒலிம்பிக் போட்டி உட்பட வெவ்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு, துாய்மையான தங்கப் பதக்கங்கள் வழங்கப்படுவது நிறுத்தப்பட்டது. தற்போது, வழங்கப்படும் தங்கப் பதக்கங்களில் 93 சதவீதம் வெள்ளி கலந்திருக்கும். 6 கிராம் அளவுக்கு மட்டுமே தங்கம், மேற்பூச்சாக பூசப்பட்டிருக்கும். - என்று கூறி முடித்தார், மூத்த செய்தியாளர். இதைக் கேட்டதும், 'ஓய், நாணா... ஆறுகள் ஏன் வளைந்து வளைந்து செல்கின்றன தெரியுமா?' என்று அருகிலிருந்த, 'திண்ணை' நாராயணனனை சீண்டினார், மாமா. 'தெரியாது....' என்று கவுரவமாக பின்வாங்கினார், நாணா. லென்ஸ் மாமா கேட்ட பிறகு தான், பெரும்பாலான ஆறுகள், வளைந்து, வளைந்து செல்வது கவனத்துக்கு வர, அலுவலக நுாலகத்தில் அது சம்பந்தமான புத்தகம் கிடைக்குமா என்று தேடினேன், நான். 'ஆச்சரியமூட்டும் அறிவியல் சுவாரஸ்யங்கள்!' என்ற புத்தகம் கிடைக்க, புரட்டிப் பார்த்ததில், மேற்கூறிய கேள்விக்கான விடை கிடைத்தது... அதில், ஆறுகள், சில இடங்களில் பாம்பு போல் வளைந்து, நெளிந்து செல்லும். அதற்கு, மண் அரிப்பு மற்றும் படிவுகளின் இயற்கை சுழற்சியே முக்கிய காரணம். ஆற்றில் ஒரு வளைவு உருவாகத் துவங்கும் போது, வளைவின் வெளிப்புறக் கரையில், நீரின் வேகம் அதிகரித்து, அரிப்பும் ஏற்படும். இதனால், அப்பகுதியில் இருக்கும் மண் மற்றும் பாறைகள் கொஞ்சம் கொஞ்சமாக அரிக்கக்கூடும். அதேநேரம், வளைவின் உட்புறத்தில் நீரின் வேகம் குறைவாக இருப்பதால், மணல் மற்றும் சேறு உள்ளிட்ட படிவுகள் அங்கு தேங்கும். காலப்போக்கில், வெளிப்புறக்கரை தொடர்ந்து அரிக்கப்படுவதும், உட்புறத்தில் படிவுகள் சேர்வதும் ஆற்றின் வளைவை மேலும் பெரிதாக்கி, அதன் பாதையை மாற்றுகின்றன. இவ்வாறு உருவாகும் வளைந்த பாதைகள் ஆற்றின் வளைவுகள் எனப்படுகின்றன. சமதளமான நிலப்பகுதிகளில் பாயும் ஆறுகளில் இத்தகைய வளைவுகள் அதிகமாக காணப்படும். இப்படி விளக்கமளிக்கப்பட்டிருந்தது. சந்தேகம் தீர்ந்ததும், புத்தகத்தை, எடுத்த இடத்திலேயே வைத்துவிட்டு, சென்றேன்.