உள்ளூர் செய்திகள்

ஞானானந்தம் - மனப்பூர்வமாக....

சீடர்களுக்குப் பாடம் எடுத்துக் கொண்டிருந்தார், துறவி ஒருவர். காட்டுக்குள் விறகு மற்றும் பழங்கள் சேகரிக்க வந்த கிராமத்து மனிதர்கள் இருவர், ஆசிரமத்தின் வெளிப்பக்கமாக நின்று, துறவியின் போதனைகளை கேட்டு கொண்டிருந்தனர். அவர் சொல்லும் அத்தனை பாடங்களும் தங்கள் வாழ்க்கைக்கு உதவும் என்பது அவர்களுக்கு புரிந்தது.துறவி பாடம் நடத்தி முடித்த பின், ஆசிரமத்துக்குள் நுழைந்த அவர்கள், துறவியைப் பணிந்து வணங்கினர். அவரிடம் சீடர்களாக சேர விருப்பம் தெரிவித்தனர். அவர்களின் குடும்பம் குறித்து விசாரித்தார், துறவி.இருவருமே திருமணமாகி, குடும்பம், குழந்தை என, பொறுப்புகள் உள்ளவர்கள் என்பது தெரிந்தது. இப்படிப்பட்ட சூழலில் இருந்து, ஆசிரமத்தில் வந்து இணைவது, அவர்களின் குடும்பங்களை சிரமத்தில் தள்ளிவிடும் என்பதை புரிந்து கொண்டார்.எனவே, 'என்னிடம் போதனை பெறுவதற்கு முன், உங்களுக்கு ஒரு சிறிய சோதனை வைக்க விரும்புகிறேன்...' என்ற துறவி, இருவருக்கும் சில விதைகளைக் கொடுத்தார்.'இவற்றை விதைத்து வளர்த்து வாருங்கள். ஆறு மாதங்களுக்குப் பின், இதில் பூத்த பூக்களுடன் வந்து என்னைப் பாருங்கள்...' என, அனுப்பினார்.ஆறு மாதங்களுக்குப் பின், இருவரும், தாங்கள் வளர்த்த செடிகள் தந்த பூக்களுடன் ஆசிரமத்துக்கு வந்தனர். முதலாமவன் கையில் மூன்று பூக்கள் மட்டுமே இருந்தன.'இவ்வளவுதானா உன் செடிகளில் பூத்தன?' என, ஏமாற்றத்துடன் கேட்டார், துறவி.'ஆம் சுவாமி! நீங்கள் தந்த விதைகளை தோட்டத்து மண்ணில் ஊன்றி வைத்தேன். எறும்புகள் அவற்றில் பாதியைத் தின்றுவிட்டன. மழையும் பெய்யவில்லை. அரும்பு விடும் சமயத்தில் செடிகளைப் பூச்சி அரித்துவிட்டது. அதனால், என் செடியில் மூன்று பூக்கள் மட்டுமே பூத்தன...' என்றான்.ஒரு கூடை நிறைய பூக்களுடன் வந்திருந்தான், அடுத்தவன்.'உன் செடிகளில் மட்டும் இத்தனை பூக்கள் எப்படி பூத்தன?' என்றார், துறவி.'ஐயனே! நீங்கள் தந்த விதைகளை நான் நெஞ்சார நேசித்தேன். அன்புடன் விதைத்தேன். வாஞ்சையோடு தண்ணீர் விட்டேன். செடிகள் வளர வளர வாழ்த்தி மகிழ்ந்தேன். அரும்பு விட்டதும், செடிகளுக்கு நன்றி சொன்னேன்.'முதல் பூ பூத்ததும், அதன் மணத்தில் மயங்கி நின்றேன். மகிழ்ச்சியடைந்த செடி, ஏராளமாக பூத்து சிரித்தது. அதனால் தான் இவ்வளவு பூக்களை எடுத்து வர முடிந்தது...' என்றான்.'உயிருள்ள, உயிரற்ற அனைத்தையும் நேசிக்கும் நெஞ்சம் உடையவர்கள் எங்கும் எதிலும் இன்பமே காண்பர். கிடைத்ததை மனப்பூர்வமாக வாழ்த்த வேண்டும். நம்பிக்கையோடு வாழ்க்கையை நேசிக்க வேண்டும்.'இதுவே, உங்களுக்கு நான் தரும் பாடம். இந்த பாடத்தை கற்றுக் கொள்ள, ஆசிரமத்துக்கு வர வேண்டும் என்பதில்லை. உங்கள் குடும்பத்தை மனப்பூர்வமாக நேசித்து, அவர்களுக்காக உழைத்தபடி இதை செய்யுங்கள்...' எனச் சொல்லி அனுப்பினார், துறவி.அருண் ராமதாசன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !