உள்ளூர் செய்திகள்

இது உங்கள் இடம்!

சபாஷ் முயற்சி!எங்கள் ஊரில் இயங்கி வரும், மகளிர் சுய உதவிக் குழுவை சேர்ந்த பெண்கள், தங்கள் குடும்பத்தை சேர்ந்த, பள்ளி, கல்லுாரி மற்றும் பணிக்கு செல்லும் பெண்கள் உள்ளிட்டோர் அடங்கிய, 'வாட்ஸ்-ஆப்' குழு ஒன்றை துவக்கியுள்ளனர்.படிக்கும் இடத்திலும், பணி இடங்களிலும், ஆண்களால் ஏற்படும் பாலியல் துன்புறுத்தல்களைப் பற்றி, வெட்கப்படாமல் வெளிப்படையாக, அக்குழுவில் பகிர்ந்து கொள்கின்றனர். இந்த குழுவில் மன நல ஆலோசகர், மாதர் சங்க தலைவி மற்றும் காவல்துறை பெண் அதிகாரி ஆகியோரும் இணைந்துள்ளனர். அவர்களின் மூலம் பாலியல் துன்புறுத்தலில் இருந்து தற்காத்துக் கொள்ளும் வழிமுறைகளை கற்றுக் கொள்கின்றனர்.வரம்பு மீறி, தொல்லை தருபவர்கள் மீது, தயக்கமின்றி புகார் அளித்து, நடவடிக்கை எடுக்கவும், அழுத்தம் கொடுக்கின்றனர். இதனால், ஒவ்வொரு பெண்ணும், பாதுகாப்பு உணர்வுடன் நிம்மதியாக இருக்கின்றனர்.தோழியரே... உங்கள் ஊரிலும், இப்படியொரு குழுவை உருவாக்கி, 'வாட்ஸ்-ஆப்'பை பயனுள்ளதாக மாற்றி, பெண்களுக்கு உதவலாமே!— கே.விஜயலட்சுமி, திருப்பூர்தையற்கடைக்காரரின் மாற்று யோசனை!தையல்கார நண்பரின் கடைக்கு சென்றிருந்தேன். அச்சமயம், அங்கு, மற்றொரு தையல்காரர், 20 செட் பேன்ட் - ஷர்ட்டுகளை, மொத்தமாக வாங்கிச் செல்ல வந்திருந்தார்.'நண்பரே, 'பிசி'யாகிட்ட போலிருக்கே...' என, கேட்டேன்.'கடைக்கு சென்று, துணி வாங்கி, நம்மிடம் அளவு கொடுத்து தைத்து வாங்கிச் சென்ற காலமெல்லாம் மலையேறி விட்டது. வந்தோம், வாங்கினோம், அணிந்தோம் என, 'ரெடிமேட்' ஆடை விரும்பிகளாக மாறி விட்டனர்.'நாமும், பிழைப்பை தொலைத்து, எத்தனை நாளைக்குத்தான் தவித்து நிற்பது...'அதற்காகத்தான், வாடிக்கையாளரின் வழிக்கே சென்று விட்டேன். மீட்டர் கணக்கில் துணிகளை வாங்கி வந்து, குறிப்பிட்ட அளவுகளில் தைத்து, கடையின் முகப்பில் மாட்டி விடுகிறேன். என்னை போன்ற தையற்காரர்களுக்கும் அவர்கள் கேட்கும் எண்ணிக்கையில் தைத்து தருகிறேன்.'வாடிக்கையாளர்களும், சொல்லும் விலையை கொடுத்து, அவரவர் அளவுக்கேற்ப வாங்கிச் செல்கின்றனர். நானும் பசியின்றி வாழ்கிறேன்...' என்றார்.'வாடிக்கையாளர்கள் காலத்துக்கு தகுந்தாற்போல் மாறும் போது, தொழில் செய்யும் நாமும், தொழிலை மாற்றிக் கொள்ள வேண்டும்...' என்ற நண்பரின் புத்திசாலித்தனத்தை பாராட்டிவிட்டு வந்தேன்.— எல்.சந்திரசேகர், சிவகங்கை.இப்படியும் ஓர் கொள்ளை!ஊட்டிக்கு சுற்றுலா சென்று, கோவைக்கு திரும்பி கொண்டிருந்தோம்.அப்போது, உறவினர் ஒருவர், 'ஏதாவது ஒரு ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு செல்லலாம்...' என்றார்.அதன்படி, ஹோட்டலில் காரை நிறுத்தி, சாப்பிட்டு விட்டு, 'பில்' கட்டும் இடத்துக்கு சென்றேன்.அங்கு கடை ஊழியர் ஒருவர், கல்லாவில் அமர்ந்திருந்த நபரிடம், 'அண்ணே, இரண்டாம் நம்பர் டேபிள், தஞ்சாவூர் வண்டி...' என்றார்.அதை கேட்டு, எனக்கு ஒன்றும் புரியவில்லை.சிறிது நேரம் கழித்து, இரண்டாம் நம்பர் டேபிளில் சாப்பிட்ட நபர்கள், பணம் கொடுத்து விட்டு, வெளியே வந்தனர்.'மாப்ள, ஒரு சாதா தோசைக்கு, 50 ரூபாய் போட்டிருக்காங்க. இங்கு அதிக விலையாக இருக்கிறது. இதற்கு, நம்ம தஞ்சாவூரே பரவாயில்லை போல...' என்றார், அவர்களில் ஒருவர்.அதைகேட்டு அதிர்ச்சி அடைந்த நான், நமக்கு தோசை ஒன்றுக்கு, 30 ரூபாய் தானே போட்டிருந்தனர். இவர்களுக்கு மட்டும் ஏன், 50 ரூபாய் என, யோசித்தேன்.அப்போது தான் விபரம் தெரிந்தது. வெளியூரில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கு, ஒரு விலையும், லோக்கல் ஆட்களுக்கு இன்னொரு விலையும் வைத்து, விற்பனை செய்வது.அந்த கடை நபர், கடைக்கு வரும் வாகனங்களின் பதிவு எண்ணை கவனித்து, அது எந்த ஊர் வண்டி என, முதலாளியிடம் வந்து கூறுகிறார்.உள்ளூர் பதிவு எண் கொண்ட வாகனத்தில் வருபவர்களிடம் அதிக விலை வாங்கினால், பிரச்னை வந்துவிடும். வெளியூர் சுற்றுலா பயணியர் என்றால், கேள்வி கேட்க மாட்டார்கள் என்ற தைரியத்தில், இப்படி செய்கின்றனர்.மொத்தத்தில், சுற்றுலா பயணிகளிடம் கொள்ளையடிப்பதற்காக, இது போல் சில ஹோட்டல்கள் இருக்கின்றன.எது எப்படியோ, எந்த ஹோட்டலில் உணவருந்த சென்றாலும், முதலில் விலையை கேட்டு விட்டு, பின்னர், உணவு எடுத்து வர சொல்வதே நல்லது.— க.புனிதன், கோவை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !