உள்ளூர் செய்திகள்

இது உங்கள் இடம்!

நண்பர்களால் வந்த வினை!சமீபத்தில், திருமண நிச்சயதார்த்த விழாவுக்கு சென்றிருந்தேன். மிகப் பிரமாண்டமான மண்டபத்தில் விழா துவங்கியது. உறவினர் அனைவரும் உற்சாகமாக இருந்த நேரத்தில், மணமகனின் நண்பர்கள் சிலர் வந்து போட்ட ஆட்டத்திலும், விசிலிலும் மண்டபம் களேபரமாக மாறியது.நண்பர்கள் அனைவரும் ஒன்று கூடி, விழா மேடையிலேயே மணமகனுக்கு மிக உயர்தரமான வெளிநாட்டு சரக்கு பாட்டிலை பரிசளித்தனர். மேலும், அதை அங்கேயே உடைத்து, 'சியர்ஸ்' சொல்லி ஆளுக்கொரு, 'பெக்' குடித்தனர்.இச்செயலால் அதிர்ச்சியான மணமகளின் அப்பா, மணமகனின் பெற்றோரிடம் கண்டிக்குமாறு கூறினார். ஆனால், அவர்களோ, 'இதெல்லாம் ஜாலியான விளையாட்டு தானே! இதை ஏன் பெரிது படுத்துகிறீர்கள்?' என்றிருக்கின்றனர்.இந்த விபரீதம் எங்கு போய் முடியுமோ என, பதறிப் போன பெண்ணின் அப்பா, உடனடியாக மகளை அழைத்துக் கொண்டு, மண்டபத்தை காலி செய்து போய் விட்டார்.அதன்பின், உறவினர்கள் சிலர் பேச்சுவார்த்தைக்கு வர, 'என் பெண்ணோட வாழ்க்கையில் நான், 'ரிஸ்க்' எடுக்க விரும்பலை. எனக்கு குடிப்பழக்கம் இல்லாத மருமகன் தான் வேணும்...' என சொல்லி, கறாராக, திருமண ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டார்.மணமகனது நண்பர்களின் செயலால், திருமணம் தடைபட்டது கவலை என்றாலும், அதனால் ஒரு பெண்ணின் வாழ்க்கை பாதுகாக்கப்பட்டதை எண்ணி சந்தோஷம் அடைந்தேன்.— பெ.பாண்டியன், காரைக்குடி.சேமிக்க முயல்வோம்!சமீபத்தில் எங்கள் ஊரில் திருவிழா நடைபெற்றது. என் நண்பருடன் திருவிழாவுக்கு சென்று, சாமி தரிசனம் செய்த பின், கடைகளை சுற்றி பார்க்க சென்றோம்.ஒவ்வொரு கடையாக பார்த்தபடி சென்றோம். உண்டியல் விற்கும் கடை வந்தது. ஆறு உண்டியல்களை வாங்கினார், நண்பர்.'எதுக்கு, ஆறு உண்டியல்கள்?' என்றேன்.'என்னோட பைக் ஒர்க்ஷாப்ல கிடைக்கிற வருமானத்தில், தினமும், குழந்தைகள் கல்விக்காக சேமிக்க ஒரு உண்டியல், மருத்துவ செலவுக்கு ஒரு உண்டியல், மாத வாடகைக்கு ஒரு உண்டியல், சேமிப்புக்கு ஒரு உண்டியல், குழந்தைகள் இருவரும் சேமிப்பை உணர வைக்க, ஆளுக்கொரு உண்டியல்.'இப்படி வருஷா வருஷம் வாங்கி, பணம் சேமித்து, என் குடும்பத்தை கடனில்லாமல் நடத்திட்டு வர்றேன். சேமிப்பு பணத்தில் தான், 2.5 சென்ட் இடமும் வாங்கி இருக்கேன்...' என்றார்.தங்கு தடையின்றி குடும்பத்தை ஓட்ட, இப்படி ஒரு வழி இருப்பதை நண்பர் மூலம் நானும் தெரிந்து கொண்டேன். நானும், இரண்டு உண்டியல்களை வாங்கி வந்தேன்.நண்பர்களே... சிறுதுளி பெரு வெள்ளம். கஷ்டகாலத்தில் நமக்கு பெரும் உதவியாகவும் இருக்கும். சேமிக்கவும் முயலுங்கள். — ஜெ.ரவிக்குமார், காங்கயம்.மாற்று யோசனை!என் நண்பரின் மருமகள், விதவிதமாக சமையல் செய்வதில் கெட்டிக்காரி. ஒருநாள், நண்பர் அழைக்கவே, அவர்கள் வீட்டில் சாப்பிட சென்றேன். உணவு சுவையாக இருந்தது.'நீங்கள் ஒரு ஹோட்டல் ஆரம்பிக்கலாமே...' என, விளையாட்டாக கூறினேன்.சில மாதங்களுக்கு பின், சிறிய ஹோட்டலை ஆரம்பித்து, நேரில் வந்து அழைப்பிதழ் கொடுத்து, 'உன் வாய் முகூர்த்தம் பலித்து விட்டது...' எனக்கூறி மகிழ்ச்சியடைந்தார், நண்பர்.மீண்டும் சில மாதங்களுக்கு பின், நண்பரை சந்தித்து வியாபாரம் பற்றி விசாரித்த போது, அக்கம்பக்கத்தில் போட்டிகள் அதிகரித்து விட்டதால், வியாபாரம் சிறிது, 'டல்' அடிப்பதாக கூறி வருத்தப்பட்டார்.மறுபடியும் வியாபாரம் பெருக, இன்றைய சுற்றுச்சூழலையும் கருத்தில் கொண்டு, அவருக்கு சிறிய ஆலோசனை கூறினேன். அதாவது, 'வாடிக்கையாளர்கள் பார்சல் வாங்க வரும்போது, உரிய பாத்திரங்களும், கூடவே துணிப்பையும் கொண்டு வந்தால், 10 சதவீதம் தள்ளுபடி என்ற அறிவிப்பை வெளியிடுங்கள்...' எனக்கூற, அவர்களும் அந்த யுக்தியை கடைக்க துவங்கினர்.மறுபடியும் வியாபாரம் பெருகி, வேலைக்கு நான்கு ஆட்களையும் வைத்து விட்டனர். தற்போது, ஹோட்டலில் பார்சல் வாங்கும் வாடிக்கையாளர்களும் பெருகி விட்டனர்.பிளாஸ்டிக் பயன்பாடும் குறைந்து, வியாபாரமும் பெருகி, தற்போது நண்பரின் குடும்பம் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.எந்த தொழிலிலும் முன்னேற மாற்று சிந்தனை வழிவகுக்கும் என்பதற்கு, இது சிறந்த எடுத்துக்காட்டாகும்.— ந.தேவதாஸ், சென்னை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !