உள்ளூர் செய்திகள்

என் விருந்தினர் சிவாஜி! (1)

அமெரிக்காவில் என் விருந்தினராக சிவாஜி! குமுதம் டாக்டர் எஸ்.ஏ.பி.ஜவஹர் பழனியப்பன் டாக்டர் ஜவஹர் பழனியப்பன். அமெரிக்காவில் ஒஹையோ மாநிலத்தில் மிகப் பிரபலமான இதய மருத்துவர். அமெரிக்க குடியுரிமை பெற்ற தமிழர்.சுருக்கமாக, டாக்டர் பாலா என்றே, அமெரிக்காவில் பிரபலமாக அறியப்படுபவர். 'குமுதம்' இதழின் நிறுவன ஆசிரியரான, எஸ்.ஏ.பி. அண்ணாமலையின் மகன்.சென்னை மருத்துவக் கல்லுாரியில், எம்.பி.பி.எஸ்., படித்தபோதே சிறந்த மாணவராக விளங்கி, விருதுகள் பெற்றவர், ஜவஹர். அமெரிக்காவின் கிளீவ்லேண்டில் இதய சிகிச்சைப் பிரிவில், பட்ட மேற்படிப்பு முடித்தவர். அங்கே, நவீன இதய அறுவைச் சிகிச்சைகள் செய்யும் மருத்துவ நிபுணராக விளங்குகிறார்.அமெரிக்காவின் மவுன்ட் வெர்னான் பகுதியில், தன் மருத்துவப் பணியை, அக்டோபர் 13, 1982ல் துவக்கினார், டாக்டர் ஜவஹர் பழனியப்பன். 25 ஆண்டுகள் அவரது சேவையை அங்கீகரிக்கும் விதமாக, அக்., 13ம் தேதியை, 'டாக்டர் பாலா தினமாக கொண்டாடப்படும்...' என, 2007ம் ஆண்டில் அறிவித்தார், மவுன்ட் வெர்னான் நகரத்தின் மேயர்.இத்தகைய சிறப்பு இதுவரை, எந்த ஒரு தமிழருக்கும் செய்யப்பட்டதில்லை. இதற்கு காரணம் ஆயிரக்கணக்கான அமெரிக்கர்களுக்கு நவீன சிகிச்சை முறையில், இவர் ஆற்றிய மருத்துவ சேவையும், 200 அமெரிக்கர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுத்ததும் தான்.அமெரிக்காவின் தலைசிறந்த இதய சிகிச்சை நிபுணர்களில் ஒருவராக விளங்கும், டாக்டர் பாலா, நம்ம ஊரு சிவாஜி கணேசனுக்கு மிகவும் நெருங்கிய நண்பர். அவரை அமெரிக்காவுக்கு அழைத்துச் சென்று, தன் வீட்டிலேயே தங்க வைத்து, சிகிச்சை அளித்துள்ளார்.அமெரிக்காவிலிருந்து ஒவ்வொரு முறை சென்னை வரும்போதும், தவறாமல் சிவாஜி வீட்டுக்குச் சென்று உரையாடி மகிழ்ந்தவர்; மருத்துவ ஆலோசனைகள் வழங்கியவர்.சிவாஜியுடனான தன் மறக்க முடியாத இனிய அனுபவங்களை, 'வாரமலர்' இதழ் வாசகர்களோடு பகிர்ந்து கொள்கிறார், டாக்டர் ஜவஹர் பழனியப்பன்.பொக்கிஷமான சிவாஜியை காப்பது நம் கடமை!பாரம்பரியமிக்க, சென்னை மருத்துவக் கல்லுாரியில் மருத்துவப் பட்டப்படிப்பை முடித்து, மே 11, 1976ல், மருத்துவ மேற்படிப்புக்காக நான், அமெரிக்கா சென்றேன். என் அப்பா, மிகப்பிரபலமான, 'குமுதம்' இதழின் ஆசிரியர். ஆனாலும் கூட, நான் சிவாஜியை சந்தித்து பேசியது கிடையாது.டான் பாஸ்கோ பள்ளியில், எட்டாவது அல்லது ஒன்பதாவது படித்து கொண்டிருந்த சமயம். சொந்த ஊரிலிருந்து என் தாத்தா, சென்னைக்கு வந்திருந்தார். அப்போது, குடும்பத்தினர் அனைவரையும், நாடகம் பார்ப்பதற்கு, ராஜா அண்ணாமலை மன்றத்திற்கு அழைத்துச் சென்றார், அப்பா எஸ்.ஏ.பி., சிவாஜி நடித்த, 'வியட்நாம் வீடு' என்ற நாடகம், அது. அதற்கு முன் சினிமாக்களில் நான், சிவாஜியை பார்த்திருக்கிறேன். என்றாலும், அன்று தான் முதல் முறையாக மேடையில் அவரது நடிப்பை நேரடியாகப் பார்க்கிற வாய்ப்பு எனக்கு கிடைத்தது. எனக்கு அது முற்றிலும் புதிய அனுபவமாக இருந்தது. அடுத்த சில நாட்களுக்கு என் மனத்திரையில், சிவாஜி நடித்த சில காட்சிகள் மீண்டும், மீண்டும் வந்து போயின. அந்த அளவுக்கு அவரது நடிப்பை நேரில் பார்த்தது, என்னிடம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது.பல ஆண்டுகளுக்கு பின், ஒரு டாக்டராக அவரை சந்திக்க வாய்ப்பு கிடைத்த போது, அவரது மேடை நடிப்பை பற்றி கூறினேன்.மேலும், சிவாஜியைப் பற்றிய ஒரு கேள்வி, பல ஆண்டுகளாக என் மனதில் குடைந்து கொண்டிருந்தது. எனவே, அவரை சந்தித்த போது, மறக்காமல் அவரிடம் அந்தக் கேள்வியையும் கேட்டேன்.'நீங்கள் பேச வேண்டியது, எத்தனை பக்க வசனம் ஆனாலும், அந்த வசனங்களை மீண்டும் மீண்டும் படித்து, மனப்பாடம் செய்து, படப்பிடிப்பின் போது பேசுகிற பழக்கம் உங்களுக்கு கிடையாது; அந்த வசனங்களை வேறு ஒருவரை கொண்டு, இரண்டு மூன்று தரம் படிக்கச் செய்து, அதை உன்னிப்பாக கேட்டுக் கொள்வீர்கள். அதன் பிறகு, ஒத்திகையிலும் சரி, படப்பிடிப்பின் போதும் சரி, வசனங்களை சரியாக பேசி விடுவீர்கள் என, நான் கேள்விப்பட்டிருக்கிறேன். அது உண்மையா?' எனக் கேட்டேன்.அவர், ஆமாம், அப்படித்தான் செய்வேன் என்பது போல, தலையை ஆட்டினார். உடனே, 'அது எப்படி உங்களுக்கு சாத்தியமாகிறது?' என்றேன், நான். என்னை ஆழமாக ஒரு பார்வை பார்த்து, 'நீங்க ஒரு டாக்டர். நீங்க ஆயிரம், ரெண்டாயிரம் பக்க மெடிக்கல் புக்ஸ் எல்லாம் படிச்சிட்டு, பரீட்சை எழுதி, பாஸ் பண்ணிட்டு, இந்தியாவுல படிச்சது பத்தாதுன்னு, அமெரிக்காவுல போய் படிச்சு, டாக்டராகி இருக்கீங்க.'உங்க கிட்ட ஒரு பேஷன்ட் வந்து, 'டாக்டர் ஏராளமா படிச்சிருப்பீங்க. எல்லாத்தையும் எப்படி ஞாபகம் வெச்சிருந்து, எனக்கு இன்ன வியாதின்னு கண்டுபிடிக்கிறீங்க?'ன்னு கேட்க முடியுமா?'அது உங்களோட திறமை! அனுபவம்! அது மாதிரி இது, என்னோட திறமை! அது எப்படின்னெல்லாம் என்னால் விளக்கி சொல்ல முடியாது...' என, ஒரு போடு போட்டார். அந்த பதில் இன்னமும் பசுமையாக, என் நினைவில் இருக்கிறது. நான், சிவாஜிக்கு அறிமுகமானது கூட, மிகவும் வித்தியாசமான ஒரு அனுபவம் தான்.நான், அமெரிக்காவில் ஒஹையோவில் மருத்துவ உயர் படிப்புகளை முடித்து விட்டு, அங்குள்ள கொலம்பஸ் என்ற ஊரில் சொந்தமாக, 'நாக்ஸ் கார்டியாலஜி' என்ற பெயரில், மருத்துவமனையை ஆரம்பித்தேன்.மாணவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுப்பது எனக்கு மிகவும் பிடித்த விஷயம் என்பதால், ஒஹையோ ஸ்டேட் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும் பணியாற்றினேன்.கடந்த, 1995ல், என்னுடைய அமெரிக்க பேஷன்ட் ஒருவர், சிங்கப்பூர் சென்ற போது, அங்கே அவருக்கு எதிர்பாராத விதமாக சிறுநீரகத்தில் பிரச்னை ஏற்பட்டது. சிங்கப்பூரில், 'கிட்னி பவுண்டேஷன்' என, பெரிய மருத்துவமனை இருக்கிறது. அங்கு சேர்த்து அவருக்கு சிகிச்சை அளித்தனர். அந்த மருத்துவமனையில் நிர்வாகப் பொறுப்பில் இருந்த, துரை என்ற வழக்கறிஞர், அவருக்கு அறிமுகமானார். அவர், சிங்கப்பூரில் வசிக்கும் இந்திய வம்சாவளியினரில் மிக முக்கியமான மனிதர். அந்த பேஷன்ட், தனக்கு அமெரிக்காவில் அளிக்கப்பட்ட இதய அறுவை சிகிச்சை பற்றிச் சொல்லும் போது, 'டாக்டர் பாலா தான், என் டாக்டர்...' என குறிப்பிட்டு, என்னைப் பற்றி விரிவாகவும், பெருமையாகவும் சொல்லி இருக்கிறார். சிவாஜி குடும்பத்துக்கு மிகவும் நெருக்கமானவர், துரை. சிவாஜி எப்போது சிங்கப்பூர் சென்றாலும், துரை குடும்பத்தினருடன் தான் தங்குவார். சிவாஜியின் உடல்நலனில் மிகவும் அக்கறை கொண்டவர், துரை. 'சிவாஜி நமக்கு ஓர் அரிய பொக்கிஷம். அவரைக் கண்ணும் கருத்துமாக பாதுகாப்பது நம்முடைய கடமை...' என, அடிக்கடி சொல்வார், துரை. என்னுடைய பேஷன்ட் மூலமாக, என்னை பற்றி தெரிந்து கொண்ட துரை, அவரிடமிருந்து என்னுடைய தொலைபேசி எண்ணை வாங்கி, உடனடியாக அமெரிக்காவில் இருந்த என்னுடன் தொடர்பு கொண்டார். தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, 'ஒரு பிரான்ஸ் நாட்டு டாக்டர், சிவாஜிக்கு உடனடியாக இதயத்தில் ஆபரேஷன் செய்யணும் என்கிறார். ஆபரேஷன் கண்டிப்பாக செய்ய வேண்டுமா? ஆபரேஷன் செய்யாவிட்டால் சிக்கல் ஏதாவது வருமா என, பதட்டமாக இருக்கிறது.'ஒரு இதய நோய் சிகிச்சை நிபுணர் என்ற முறையில், சிவாஜியை நீங்கள் பரிசோதிக்கணும்; அவர் உடல்நிலை பற்றி ஒரு, 'ஒபினியன்' கொடுக்கணும். அவருக்கு சிகிச்சை அளிக்க வேணுமா, என்ன மாதிரியான சிகிச்சை என்றெல்லாம் முடிவு செய்யணும். இதை நீங்க தான் செய்யணும்...' என்றார், துரை. - தொடரும்எஸ். சந்திரமவுலி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !